Header Ads



முஸ்லிம் நாடுகளில் இருந்து, மெல்லமெல்ல ஓடத்தொடங்கும் கொரோனா


ஒரு மாதம் முன்பு வரை கரோனா பரவலால் பாதிக்கப்பட்டிருந்த வளைகுடா நாடுகள் இப்போது அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன.

நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளதோடு நலம்பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

வளைகுடா நாடுகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது சவூதிதான்.

நாள் ஒன்றுக்கு 5000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அது 2000ஆகக் குறைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிட்டது.

ஒரு நாளில் 700 பேர் வரை நலம் பெற்ற செய்திகளும் வரத்தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து சவூதியில் பெரும்பாலும் கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. (முகக் கவசம், தனிமனித இடைவெளி தொடரும்)

இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன், கத்தர் முதலிய நாடுகளிலும் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கிவிட்டது.

பஹ்ரைனில் ஆகஸ்டு 6 முதல் எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 300ஆகக் குறைந்துவிட்டது. ஒன்று அல்லது இரண்டு மரணங்கள் எனும் அளவில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

கத்தரில் நோயர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.

குவைத்தில் ஐந்து கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மூன்று கட்டங்களைத் தாண்டிவிட்டன. ஆகஸ்டு ஒன்று முதல் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று குவைத் கூறியுள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலைமை மேம்பட்டு வருவதால் சொந்த நாடுகளுக்குத் திரும்ப எண்ணியிருந்த வெளிநாட்டினர் பலரும் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அங்கேயே தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

வளைகுடா நாடுகள் மட்டுமல்ல, விரைவில் உலகம் முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும்- இன்ஷா அல்லாஹ். 

-சிராஜுல்ஹஸன்-

No comments

Powered by Blogger.