Header Ads



சாரா எனப்படும் புலஸ்தினி, வெளிநாட்டு உளவாளியா..? இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம்

சாய்ந்தமருதில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புத் தளத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சோதனையின் பிரகாரம், கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை தாரியான அச்சி முஹம்மது ஹஸ்தூன் என்பவரின்  மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருக்கவில்லை என்கிற தகவல் அம்பலமாகியுளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவுகளின் தகவல்களின் படி, சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என அடையாளம் காணப்பட்ட பெண், குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்பு, சாய்ந்தமருதை விட்டும் வெளியேறியுள்ளதாக தெரியவருகிறது.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்களின் டி.என்.ஏ. களுடன் அந்தப் பெண்ணின் பெற்றோருடைய டி.என்.ஏ. உடன் ஒத்துப்போகவில்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுவெடிப்பு நடந்த வீட்டில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது டி.என்.ஏ சோதனைகளில் தெரிய வந்துள்ள போதிலும், அதில் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சாரா எனப்படும் புலஸ்தினி படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும், அதற்கு முன்னர் களுவாஞ்சிகுடியில் அவர் பதுங்கி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் களுவஞ்சிகுடியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல சாராவுக்கு உதவினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த 13ம் திகதி சாராவின் உறவினர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

அதேவேளை, இது தொடர்பான சாட்சிகளை மறைத்ததாக அம்பாறை வாகன போக்கு வரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி அபூபக்கர் என்பவரும் கடந்த 13ம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல சாராவுக்கு உதவியதாக  குற்றஞ்சாட்டப்பட்டு களுவாஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்டவர் செல்வகுமார் தேவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் – விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் – தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் பணியாற்றும் போது, ஒரு பிரபலமான வெளிநாட்டு உளவு நிறுவனத்திற்கான உளவாளியாக பணியாற்றியதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் பிறப்பால் தமிழர் என்றாலும், பின்னர் அவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார். இவரின் மதம் மாற்றத்தை எதிர்த்து மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனின் தாயார் முறைப்பாடு செய்தும் இருந்தார். சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய ஹஸ்தூனின் மனைவி என்றும் கூறப்படுகிறது.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஸிமுடைய  குடும்பத்துடன் தொடர்புடைய பல பயங்கரவாதிகளும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சாய்ந்தமருத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது – குண்டைவெடிக்க செய்து உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி இரவு நடந்த இந்த சம்பவத்தில் சாராவும் இறந்துவிட்டார் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது.  

பயங்கரவாத தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக சஹ்ரானின் குழுவினர் குருநாகலில் உள்ள ஒரு துணிக் கடைக்கு சென்றபோது சாராவும் வெள்ளை ஆடைகளை வாங்கியிருந்தமை தெரியவந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியில் சாரா எனப்படும் புலஸ்தினியும் இருந்தார் என்று பாதுகாப்புப் தரப்பினர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.