Header Ads



புலஸ்தினியின் தாயார், ஜனாதிபதி ஆணைக்குழு முன் வழங்கிய சாட்சியம்


சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் அப்துர் ராஸிக் தனது மகள் புலஸ்தினி ராஜேந்திரனை பலவந்தமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றி கட்டுவாபிட்டிய தேவாலய குண்டுதாரி ஹஸ்தூனுக்கு திருமணம் செய்து வைத்தார் என புலஸ்தினி ராஜேந்திரன் எனும் ஸாரா ஜெஸ்மினின் தாய் ராசரத்னம் கவிதா தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரண நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (25) சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் அபுதாபியில் வேலைக்குச் சென்றிருந்தேன். உயர்தரத்தில் உயிரியல் பாட மேலதிக வகுப்புக்களுக்காக புலஸ்தினி கல்முனை சென்றிருந்த வேளையில் 2015 ஜூலை 29 இல் அவர் வீடு திரும்பவில்லை என எனக்குத் தகவல் வந்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு நான் கூறினேன். பின்னர் எனது சகோதரனுக்கு அப்துர் ராஸிக்கிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. புலஸ்தினி தம்முடன் தான் இருப்பதாகவும் அவரை இஸ்லாம் மதத்துக்கு மாற்றிருப்பதாகவும் எனது சகோதரனுக்கு அவர் சொல்லியிருந்தார். இதனால் பதட்டமடைந்த நான் கூடிய கெதியில் நாட்டுக்குத் திரும்பி அப்துர் ராஸிக் இருந்த மாளிகாவத்தை தௌஹீத் ஜமாஅத் அலுவலகத்துக்குப் போனேன். அங்கே புலஸ்தினி அபாயா அணிந்து இருப்பதைக் கண்டேன்.

அங்கு நான் அவருடன் நான்கு மணித்தியாலங்கள் உரையாடினேன். அப்துர் ராஸிக்கும் அடுத்தவர்களும் இதனை சிசிடிவி ஊடாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி நாமிருக்கும் இடத்துக்கு வந்து போனார்கள். இதனால் நான் அவரை வீட்டுக்கு அழைத்த போதும் அவர் மறுத்தார். பின்னர் இது தொடர்பில் நான் மாளிகாவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்தேன். அப்துர் ராஸிக் புலஸ்தினியுடன் பொலிஸுக்குச் சமுகமளித்தார். அங்கிருந்து நான் அவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அவர் அபாயாவைக் களைந்து விட்டு மீண்டும் இந்துப் பெண்ணாக மாறினார்.

15 நாட்களுக்குப் பின் அப்துர் ராஸிக் மீண்டும் கோல் எடுத்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட 15 நாட்களும் முடிந்து விட்டன, அவரைத் திருப்பி அனுப்பாவிட்டால் சட்டநடவடிக்கை எடுப்பேன் எனச் சொன்ன போது புலஸ்தினி இந்து மதத்துக்குத் திரும்பி விட்டார் என்று நான் சொன்னேன்.

அப்போது அவர் அவரை எப்படி எடுப்பது என்று எங்களுக்குத் தெரியும் என மிரட்டினார். 2015 செப்டம்பர் 24 இல் புலஸ்தினிக்கு மருந்து வாங்கச் சென்ற போது மகள் காணாமல் போனார். இது தொடர்பில் நான் மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்தேன். பின்னர் அப்துர் ராஸிக் கோல் எடுத்து புலஸ்தினி தம்முடன் இருப்பதாகக் கூறினார். நான் மீண்டும் அப்துர் ராஸிக் உடைய அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு புலஸ்தினி ஹஸ்துனுடன் இருந்தார். அவரை திருமணம் முடித்திருப்பதாக அறிந்தேன். மாளிகாவத்தை பொலிஸில் முறையிட்டேன். சட்டபூர்வ திருமணம் என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள். என்னை வீட்டுக்குப போகச் சொன்னார்கள். புலஸ்தினிக்கு வீடும் பணமும் தருவதாக அப்துர் ராஸிக் கூறினார்.

ஹஸ்துனுடன் வாழ முடியாது என அவர் அடிக்கடி கூறியதால் 2016 ஜனவரி 06 இல் நான் அவரை அபுதாபிக்கு அழைத்து வந்து நான்கு மாதங்கள் வைத்திருந்தேன். இது தொடர்பில் ஹஸ்துன் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததால் புலஸ்தினி நாடு திரும்பியதும் அவர்கள் மீண்டும் இணைந்து காத்தான்குடியில் வசிக்கத் தொடங்கினார்கள்.

2019 பெப்ரவரி 19 இல் புலஸ்தினி எனக்குக் கோல் எடுத்து சில நாட்களுக்கு தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியதிலிருந்து அவருடன் எந்தத் தொடர்புகளும் இருக்கவில்லை. 2019 ஏப்ரல் 07 இல் நான் நாடு திரும்பினேன். எனது மகளைத் தேடித் தருமாறு நாரம்மல பொலிஸில் முறைப்பாடு செய்தேன். பின்னர் சிஐடியிலிருந்து ரொஷான் என்பவர் வந்து புலஸ்தினியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ஸாராவைத் தேடுவதாக அப்துல் ராஸிக் அறிந்து ஸஹ்ரானின் மனைவியுடன் ஸாரா இருப்பதாக தனது அதிகாரி மூலமாக அப்துர் ராஸிக் தனக்கு அறிவித்ததாக ரொஷான் என்னிடம் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் தேடப்படுபவர்களின் பட்டியலில் எனது மகளின் பெயரும் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். பின்னர் இந்த வருடம் ஜனவரி 20 இல் சாய்ந்தமருது பொலிசார் என்னை அழைத்து சில தங்க நகைகளின் புகைப்படத்தைக் காட்டி இவற்றிலட சாராவுடைய நகைகள் இருக்கிறதா என வினவினார்கள். அவற்றில் நான் சாராவுக்குக் கொடுத்த நகைகள் இருக்கவில்லை. சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளுடன் சாராவுடைய டிஎன்ஏ ஒத்துப் போகவில்லை என அவர் சாட்சியமளித்தார். 

(ஹிராஸ்) மீள்பார்வை

1 comment:

  1. இது முஸ்லிம் மக்களின் மனசாட்ச்சிக்கு விடபட்டுள்ள சவால். அப்துல் ரசாக் போன்ற கொடியவர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் கிளர்ந்தெள தேர்தலின் பின்னர் அதிக வாய்பிருக்காது. பிரச்சினைகளை நிர்வாகிபது தொடர்பான முஸ்லிம் மக்களின் அதிகாரத்தில் அரசுயந்திரங்கள் தலையீடு அதிகரிக்கும். அதற்குத் தோதாகவே பாரம்பரிய முஸ்லிம்கள் பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என்கிற பார்வை சிங்களவர் மத்தியில் மட்டுமன்றி ஈஸ்ட்டர் தாக்குதலின் பிறகு முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதில் கிழக்கு முஸ்லிம்கள் குறிவைத்து தனிமைப் படுத்தப்படுகிறார்கள். இதை சொல்வதால் என் முஸ்லிம் நண்பர்கள் சிலர் கோபபடக்கூடும். எனினும் முஸ்லிம்களின் நண்பனாக இதனை சொல்கிறேன். முஸ்லிம்களது சமூக அமைப்புகள் மற்றும் முஸ்லிம்களின் அனைத்துக் கட்ச்சிகள் ஒன்றுகூடி ஆராய்ந்து ஒரு பொது அமைப்பாக பொது முடிவுகளை எடுக்க வேண்டிய கடைசித் தருணமிது. இதுவே எனது நெடுநாள் வேண்டுகோளாக உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.