Header Ads



கொரோனாவில் இருந்து மக்களை, பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதியளிப்பு

கொவிட் 19 நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை அவ்வப்போது நாட்டில் எழக்கூடிய நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 

கொவிட் நோய்த் தொற்று பரவலுடன் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மிகவும் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்ததனை ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார். “இதன்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. சிறந்த திட்டத்துடன் அவை ஒவ்வொன்றாக வெற்றிகொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தல் முகாம் குறித்து அன்று எந்தவொரு நாட்டிலும் கேள்விப்படவில்லை. அதனை நாமே அறிமுகப்படுத்தினோம். இன்று பெரும்பாலானவர்கள் அதனை மறந்து விட்டனர்” என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமின் கொவிட் 19 நோய்த் தொற்றுடைய சிலர் கண்டறியப்பட்டதுடன், உருவாகியுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். 

மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை,  இராணுவம், புலனாய்வுதுறை மற்றும் பொலிஸாரின் பங்களிப்பை பெற்று ஜனவரி 26ஆம் திகதி கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. 

சீனாவின் வூகான் மானிலத்தில் அநாதரவாக இருந்த மாணவர்களை விடுவித்தது முதல் அனைத்து நாடுகளை பார்க்கிலும் கடந்து, ஒரு அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார். 

அரசாங்கம் தலைமை வழங்கி தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து துறைகளினதும் பங்களிப்புகளை பெற்றுக்கொள்ளுதல் ஆகிய பண்புகள் சவாலை வெற்றிகொள்வதற்கு அடிப்படையாக அமைந்ததாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 74 நாடுகளிலிருந்து 16,279 பேரை தாய் நாட்டுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 70 தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்து மேற்கொண்ட பணிகளையும் ஜனாதிபதி அவர்கள் நினைவுப்படுத்தினார். 

“தனிமைப்படுத்தல் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கு திட்டமிடுகின்றபோது பிரதேசவாசிகளின் எதிர்ப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும்போது அவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. எதிர்காலத்திலும் எத்தகைய தடைகள் வந்தாலும் சவால்களை வெற்றிகொண்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கொவிட் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதனை அண்டிய நான்கு கொத்தனிகள் வரையான விரிந்த சுற்றுப்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உருவாகியுள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருப்பதைப் போன்று எதிர்காலத்திலும் உருவாகும் சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

PCR பரிசோதனையை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் நோய்த் தொற்று பரவுவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

நோய்த் தொற்றுடையவர்கள் இனங்காணப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட ஏனைய இடங்களில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், நோய்த் தொற்று பற்றிய புதிய தகவல்களையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

கொவிட் நோய்த் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இணைந்ததாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் இன்றைய கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

கொவிட் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இரவு, பகல் பாராது தொடர்ச்சியாக பங்களிப்புகளை வழங்கிவரும் அனைவரையும் தான் பெரிதும் மதிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கொவிட் செயலணியின் உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் இக்கலந்துடையாடலில் பங்குபற்றினர்.


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.14

No comments

Powered by Blogger.