Header Ads



ஹக்கீம், ஹலீம் ஆகியோருடன் நானும் கண்டியில் முன்னிலை வகிக்கின்றேன் - வேலுகுமார்


கண்டி மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைவென்ற  ரவூப் ஹக்கீம், அப்துல் அலீம் ஆகியோருடன் இணைந்து நானும் முன்னிலை வகிக்கின்றேன்.  எமக்கு பேராதரவை வழங்குவதற்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். கருத்து கணிப்புகளும் இதனையே சொல்கின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில் கண்டியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் மேலும் கூறியவை வருமாறு,

“பொதுத்தேர்தலில் வெற்றிவாகைசூடவுள்ள நாம் அதற்கான பிரச்சாரங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்து தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளோம்.

எம்மால் நடத்தப்படும் பிரச்சாரக்கூட்டங்களில் அணிதிரண்டு பங்கேற்று அமோக ஆதரவை வழங்கிவரும் என் மக்கள் சொந்தங்கள், எதிர்வரும் 5 ஆம் திகதி வாக்களிப்புமூலம் வரலாற்று சாதனை படைக்கவுள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு வென்றெடுக்கப்பட்ட கண்டி மாவட்டத்துக்கான தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கும் தமிழ் மக்கள், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளுடன் தமது பிரதிநிதி அதிஉயர் சபைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அணிதிரண்டுள்ளனர். 

எமது முஸ்லிம் சகோதரர்களும் அன்றுபோல் இன்றும் எனது வெற்றியில் பங்காளர்களாகியுள்ளனர்.

தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நிலையில், அவர்களை திசைதிருப்பும் முயற்சியில் சில அரசியல் கைக்கூலிகள் ஈடுபட்டுள்ளனர். 

தமது தோல்வி உறுதி என தெரிந்தும்கூட, அற்பசொற்ப சலுகைகளுக்காக வேட்பாளர்கள் என்ற போர்வையில் பேரினவாதிகளின் கைக்கூலிகளாக அவர்கள் களத்தில் நிற்கின்றனர். எனவே, தேர்தல் முடிந்ததும் இவர்களுக்கு கண்டியில் இருந்து புறமுதுகுகாட்டி ஓடவேண்டிவரும்.

எமது வெற்றி உறுதியாகிவிட்டது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,  முன்னாள் அமைச்சர் அப்துல் அலீம் ஆகியோருடன் நானும் முன்னிலை வகிக்கின்றேன். 

நாம் மூவரும்  அமோக வெற்றிபெறுவோம். கருத்து கணிப்புகளும் அதனையே சொல்கின்றன. அரசாங்கத்தின் உளவு பிரிவுகளால் நடத்தப்பட்ட ஆய்வில்கூட நாமே முன்னிலை வகிக்கின்றோம்.

எனவே, எமக்கு பேராதரவை வழங்கும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். ஆகஸ்ட் 5 ஆம் திகதி கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் வழங்கும் ஆணையானது வரலாற்று திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.  

1 comment:

  1. 6 ஆம் திகதி எந்நிலையில் இருந்தீர்கள் என்று விளங்கும், சுணங்கும் ஆனால் விளங்கி வேலை இல்லை வேலுகுமார்

    ReplyDelete

Powered by Blogger.