Header Ads



முஸ்லிம் சமூகத்தை சாடும் கைங்கரியத்தில், பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள்

- எம். எம். ஸுஹைர் -

விடுதலைப் புலிகளுடனான 33 வருட கால உள்நாட்டு யுத்தத்தின் போது முஸ்லிம்கள் வழங்கிய தேசப்பற்றுமிக்க பங்களிப்பை இந்நாடு ஒருபோதும் மறந்து விட முடியாது. நாடு பிளவுபடுவதை முஸ்லிம்கள் தெட்டத் தெளிவாக எதிர்த்தனர். அன்றைய இந்திய அரசால் இலங்கை மீது பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட வட மாகாணத்துடனான கிழக்கு மாகாணத்தின் இணைப்பையும் முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை.

இந்த சிறிய தீவுக்குள் இனரீதியான பிறிதோர் தனிநாட்டை உருவாக்க விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சிகளை ஒரு சமூகம் என்ற ரீதியில் ஒட்டுமொத்தமாக எதிர்த்து நின்றவர்கள் முஸ்லிம்கள் மாத்திரம்தான். இருந்த போதிலும் பெரும்பான்மை சமூகத்துக்குள் உள்ள ஒரு சிறிய தொகை தீவிர போக்காளர்கள் இன்று முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்வது முஸ்லிம் சமூகத்தை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் போராளிகளும் வெவ்வேறு பல சந்தர்ப்பங்களில் இந்தியாவால் உருவாக்கப்பட்டதாகவும் மேலைத்தேச சக்திகளால் ஆதரிக்கப்பட்டதாகவும் அறியப்படுபவர்கள். இலங்கையின் பிரிவினைவாத போராட்டத்தை இந்த நாடுகள் பல்வேறு வழிகளில் கட்டவிழ்த்து விட்டு ஆதரித்தும் வந்தன. எவ்வாறாயினும் இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான இந்துக்களும் கிறிஸ்தவர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கவில்லை. கிழக்கு தமிழர்கள் கூட 2004 முதல் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக எதிர்த்தனர்.

எவ்வாறேனும் சில மேற்குலக நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகள் பல்வேறுவிதமான நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இலங்கை மக்களின் ஒற்றுமை என்பனவற்றுக்கு பயங்கர ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாகவே காணப்படுகின்றன.

புலிகள் அமைப்பு கிழக்கு முஸ்லிம்கள் மீதான அதன் தொடர் தாக்குதலின் முதலாவது கட்டத்தை 1987 டிசம்பரில் தொடங்கியது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். காத்தான்குடியை அண்டிய குருக்கள்மடத்தில் 68 முஸ்லிம்கள் 1990 ஜுலை 12இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதே காத்தான்குடியில்தான் அண்மைக் காலத்தில் அறியப்பட்ட பயங்கரவாதத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமும் 1985இல் பிறந்துள்ளார். 1990இல் அவரது வயது ஐந்தாகும்.1990 ஓகஸ்ட் 3இல் புலிகளின் பயங்கரவாதிகளைக் கொண்ட 30 பேர் கொண்ட ஒரு குழுவினர், காத்தான்குடியில் உள்ள மீரா பள்ளிவாசல், ஹுஸைனியா பள்ளிவாசல், நூர் பள்ளிவாசல், பௌசி பள்ளிவாசல் என நான்கு பள்ளிகளை சுற்றி வளைத்து துப்பாக்கி ரவைகளை மழையாகப் பொழிந்து வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 147 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தனர்.

காத்தான்குடியை மட்டும் மையப்படுத்தி 315க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், விவசாயிகள், மீனவர்கள், புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் இந்தக் கணக்கிற்குள் வரவில்லை. அதேபோல் வடமாகாணத்தில் தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து ஈவுஇரக்கமின்றி வெளியேற்றப்பட்ட 90,000 முஸ்லிம்களும் இந்த கணக்கிற்குள் வரவில்லை. இவ்வாறு வெளியேற்றப்பட்ட அன்றைய இளைஞர்களில் ஒருவர் தான் றிஷாட் பதியுதீன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகம் விடுதலைப் புலிகளையோ நாடு பிளவுபடுவதையோ ஆதரிக்கவில்லை என்ற காரணங்களுக்காகத்தான் புலிகள் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதையும் கிழக்கில் கொன்று குவித்தார்கள் என்ற உண்மையையும் எந்தத் தரப்பாலும் மறுக்க முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நாட்டின் பிரதான பிரிவு அரசியல் தலைவர்களுடன் ஆரோக்கியமான உறவுகளைப் பேணி வந்த அதேவேளை வடக்கு, கிழக்கின் சமாதான தமிழ்த் தரப்போடும் சிறந்த உறவுகளைப் பேணி வந்தார். புலிகளின் பிரிவினைவாத முயற்சிகளுக்குள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சிக்கி விடாமல் அவர் தடுத்தார். ரணசிங்க பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற அன்றைய அரசியல் தலைவர்கள் துணிச்சலாகச் செயற்பட்டு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அஷ்ரப்போடும் அவரது முஸ்லிம் காங்கிரஸோடும் கைகோர்த்தனர்.

தமது இலக்கான ஈழத்தை அடைவதற்கு முஸ்லிம்கள் ஒரு பாரிய தடையாக இருப்பதாக புலிகள் கருதினார்கள். அதனால்தான் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் இனச் சுத்திகரிப்பில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்ற முக்கிய விடயத்தை பெரும்பான்மையினரில் தீவிரப் போக்குடையவர்கள் கவனத்தில் கொள்ளத் தவறியுள்ளனர். அன்று மிக மோசமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்த இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம் சமூகம் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் வழங்கிய மிகப் பெரிய பங்களிப்பும் தியாகமும் இதுவாகும். உண்மையான தேசப்பற்றுள்ள எந்தவொரு இலங்கையரும் இதை மறந்து விடவோ ஒதுக்கித் தள்ளிவிடவோ முடியாது.

நாட்டின் புலனாய்வுப் பிரிவில் ஆழ ஊடுறுவும் படைப்பிரிவில் மலாய் முஸ்லிம் சமூகத்தின் தியாகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழங்கிய குறிப்பிடத்தக்க மிக முக்கியமான பங்களிப்புகளையும் நாம் இங்கே மறந்து விட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை விக்கி லீக்ஸூக்கும் நாம் இங்கு நன்றி கூற வேண்டும். இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் நோர்வே உட்பட நேட்டோ நாடுகள் விளையாடிய இரட்டைவேட விளையாட்டுக்கள் மறைத்து விட முடியாது. இவர்கள் இலங்கையில் இன்னும் அவர்களது பணிகளைப் பூர்த்தி செய்யவில்லை.

இன்று நாட்டில் உள்ள சில பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள் இரத்தக் கறைபடிந்த வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாகப் பணியாற்றுகின்றனர். இந்நாட்டைக் கூறு போடுவதில் தோல்வி அடைந்த இந்த சக்திகள் சமூக ரீதியாக எம்மை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு யுத்தம் முடிவடைந்த அடுத்த மாதம் முதல் அதாவது 2009 ஜுன் முதல் தமது முயற்சிகளைத் தொடங்கி இடையறாது மேற்கொண்டு வருகின்றன. சில விசாரணைகள் கூட வெளிநாட்டு வியாக்கியானங்களின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றன.

தீவிரப்போக்கு கொண்ட பெரும்பான்மை அமைப்பொன்று 2011இல் நோர்வேக்கு விஜயம் செய்தது முதல் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் முஸ்லிம்கள் தாக்கப்படுவது தொடங்கியது. எம்மைப் பிளவுபடுத்துவதில் நிச்சயம் அவர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவுவார்கள். குறுகிய காட்சியை மட்டுமே காணுகின்ற பெரும்பான்மை தீவிரப் போக்காளர்கள் சிலர், முஸ்லிம்களின் இந்தத் தியாகங்களை எல்லாம் மறந்து விட்டு சமூகத்தின் அரசியல் தலைமைகளையும் அவமானப்படுத்தி அவதூறு செய்து வருகின்றமை கவலைக்குரியது. வழிதவறிய ஒருசிலர் செய்த செயலுக்காக ஒட்டுமொத்தாக முழு முஸ்லிம் சிவில் அமைப்புக்களையும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர். சமூகத்துக்கும் நாட்டுக்கும் அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ள முஸ்லிம் நிறுவனங்களின் நற்பெயர்களை மாசுபடுத்த முனைந்துள்ளனர். முஸ்லிம் தனியார் சட்டங்கள் தவறான முறையில் விளக்கம் அளிக்கப்பட்டு ஏளனம் செய்யப்படுகின்றன.

இலங்கையில் 800 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம் சட்டங்களையும் 90 வருடங்கள் பழமைவாய்ந்த வக்ப் சட்டத்தையும் 64 வருடங்கள்' பழமை வாய்ந்த பள்ளிவாசல்கள் சட்டங்களையும் பெரிதும் விமர்சனங்கள் செய்த வண்ணம் இவர்களில் சிலர் இருக்கின்றனர். சஹ்ரான் ஹாஷிம்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் கொஞ்சம் கூட இடமில்லை. குற்றவியல் வன்முறைகளுக்கு இங்கு எம்மத்தியில் இடமே இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் இவ்வாறு இடம்பெறாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை. அதேவேளை சஹ்ரான்களை உருவாக்கக் கூடிய பெரும்பான்மை சிலரின் தீவிரவாத பேச்சுக்களை தடுப்பது பெரும்பான்மையினரதும் அரசாங்கத்தினதும் பெரும் பொறுப்பாகும்.

பிரச்சினைகள் இருந்த போது தங்களோடு இணைந்திருந்த சமூகத்தை இப்போது தாக்குபவர்கள் பெரும் காட்சிகளைக் காணாதவர்கள். வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கத் துடிப்பவர்களின் கரங்களுக்குள் கிழக்கு முஸ்லிம்களை சிக்க வைக்கவே இவர்கள் முயலுகின்றனர். சிலவேளை தமது நிலங்களைப் பாதுகாக்கவும் தமது பாதுகாப்புக்காகவும் கிழக்கு முஸ்லிம்கள் ஒரு புதிய தெரிவாக வடக்கு, கிழக்கு இணைப்பை மீண்டும் நாடக் கூடும்.

2 comments:

  1. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
    (அல்குர்ஆன் : 9:111)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Admin Please remove this comment, This idiot does not know the content of this verse. This is irrelevant to Civil situation,

    ReplyDelete

Powered by Blogger.