Header Ads



மக்களின் பாதுகாப்பே முக்கியம், குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டாம் என்றா கூறுகின்றீர்கள்..? ஊடகவியலாளர்களை நோக்கி பிரதமர் கேள்வி

வடக்கு மக்களுக்கு தூய குடிநீரை வழங்கும் வகையில் கடல் ஏரியை தூயநீராக்கி அதன் மூலம் நன்னீர் தேக்கமொன்றை உருவாக்கி மக்களின் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த நன்னீர்த்தேக்கம் தொண்டமானாறு பகுதியில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் காணாமல்போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று -01- காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

இதன்போது வடபகுதியைச் சேர்ந்த ஊடகங்களின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் விசேடமாக கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து உரையாற்றினார்.

வடக்கு ஊடகங்கள் வடக்கு செய்திகளையும் தெற்கு ஊடகங்கள் தென்பகுதி செய்திகளையும் பிரதானப்படுத்தி வருகின்றன. இந்தநிலை மாறி ஊடகங்கள் இரு பிரதேசங்களுக்குமான உறவுப்பாலமாக விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் அரசியல்வாதிகள் செய்யத் தவறியதை ஊடகங்கள் செய்ய வேண்டும். அபிவிருத்தி தொடர்பில் அரசியல்வாதிகளை ஊடகவியலாளர்களே தூண்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 5 வருட காலத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் வடக்கில் எந்தவொரு அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் அதே நிலைமை தான் என்று கூறிய பிரதமர், இதற்குக் காரணம் முன்னைய அரசும் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தான் என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த அரசின் காலத்தில் வடபகுதியின் அபிவிருத்தியின் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்ட பணம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.

வடக்கிலே அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். இதன்பொருட்டு புலம்பெயர் நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், அங்கிருந்து வரும் முதலீட்டாளர்கள் வடக்குபகுதிக்குச் செல்லாது கொழும்பிலேயே தங்கி விடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களின் போது வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லையென்றும் பிரதமர் தெரிவித்தார்.



கூட்டமைப்பு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத்தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், எவரும் ஒத்துழைப்பு வழங்கலாம் அதனை நாம் வரவேற்போம். எதிர்ப்பவர்கள் எதிர்க்கலாம் என்றும் கூறினார்.

வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தங்கள் கருத்தென்ன ? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ,

காணாமல் போனவர்கள் மீண்டும் வரவில்லை என்றாலோ உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே அர்த்தம் என்றும் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதில் நாம் முன்னுரிமை வழங்குகின்றோம். குறிப்பாக வீடமைப்புத் திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை கருணா அம்மானுக்கு பொது மன்னிப்பு வழங்கியா விடுதலை செய்யப்பட்டார் ? எனக் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதற்கு பதிலளித்த பிரதமர் கருணா உட்பட 12 ஆயிரம் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினோம் என்றார்.

இந்நிலையில் கொலை குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ வீரர் சுனில் ரத்னாயக்க என்பவரும் பொதுமன்னிப்பின் கீழா விடுதலை செய்யப்பட்டார் என்று கேட்கப்பட்ட போது,

அவ்வாறு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவில்லை. அது ஜனாதிபதியின் தனிப்பட்ட மன்னிப்பு. ஜனாதிபதி பிரதம நீதியரசருடன் கலந்தாலோசித்தே, தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி அவரை விடுதலை செய்தார் என்று கூறினார்.

வடக்கு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன ?என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,

எதிர்வரும் தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா போன்ற சிறந்தவர்களுக்கும் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் வாக்களித்து அவர்களை வெற்றி வாகைசூட உதவுங்கள். அதன் மூலம் வடக்கின் அபிவிருத்தியை மேம்படுத்துங்கள். பாராளுமன்றத்திற்கு வந்து கூக்குரலிடுவதனால் எந்த பயனும் இல்லை. மக்களின் பிரச்சினை குறித்து பேச வேண்டும். வெறுமனே அரசியல் பேசி எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு மேலோங்கி வருகிறது. இவ்வாறு கைதுகள் தொடர்வது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள்? என்று கேட்டபோது,

அங்கு இராணுவமுகாமுக்கு அருகில் குண்டுகள் இருந்து மீட்கப்பட்டதாக அறிகின்றேன். சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானது. இன்றேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று கூறிய பிரதமர், குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டாம் என்றா கூறுகின்றீர்கள் எனவும் பதில் கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.