July 24, 2020

“ஜனாஸா” போலக் கிடந்தவர்கள், இப்போது மக்களிடம் வந்து வாக்குக் கேட்கின்றனர்’ - ஹுனைஸ் பாரூக்


முஸ்லிம்களின் “ஜனாஸாக்களை” எரித்த போது, “ஜனஸாக்கள்” போலக் கிடந்தவர்கள், இப்போது மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

நீங்கள் போடுகின்ற புள்ளடிகள்தான், மையத்துக்கள் எரிக்கப்பட வேண்டுமா அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமையவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், உப்புக்குளத்தில் நேற்று மாலை (23) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.  

தொடர்ந்து பேசிய வன்னி மாவட்ட வேட்பாளர் ஹுனைஸ் பாரூக் கூறியதாவது,

“கடந்த காலங்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? எவருக்கு வாக்களிக்க வேண்டும்? என்ற தேர்வுகள் நமக்கு இருந்திருக்கலாம். இப்போது அந்தக் கேள்விக்கு இடமேயில்லை.

விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டு அகதிகளாக தென்னிலங்கையில் வாழ்ந்த போதும் பின்னர், சொந்த இடங்களில் மீளத்திரும்பி, வாழ்க்கையை அமைத்த போதும் காணி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள் உட்பட மின்சார வசதி, நீர் வசதி இன்னும் இன்னோரன்ன வசதிகளை நிறைவேற்றி, வாழ்க்கையைச் சீராக்கித் தந்தவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன். அவருடன் இணைந்து நானும் பல பணிகளை மேற்கொண்டிருக்கின்றேன். பல்வேறு தியாகங்களுக்கு மத்தியிலேதான் உங்களைக் குடியேற்றி, வசதிகளை ஏற்படுத்தித் தந்தோம். பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை நிறைவேற்றியமைக்காவும், நிறைவேற்றிக்கொண்டிருப்பதற்காகவும், சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காகவுமே, பல திக்குகளிலிருந்தும் இந்தத் தலைமைக்கு எதிர்த்தாக்குதல் தொடுக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உப்புக்குளம், கோந்தைப்பிட்டி பிரச்சினையில் நியாயத்தை வேண்டி, பாதையில் போராடிய உப்புக்குளம் மக்களை, அபாண்டமாக சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்காக, எவனோ ஒரு சண்டாளன் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்தான். அதற்காக இந்த மக்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இப்போது இவர்கள் சுமார் 08 வருடங்களாக நீதிமன்றில் அலைகின்றனர். இதற்கு மேலதிகமாக, இந்த ஆர்ப்பாட்டத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், இந்தப் பிரச்சினையில் சிக்கவைக்கப்பட்டார். உப்புக்குளத்தில் நடந்த சம்பவங்களின் பின்னரே, நானும் அவரும் விஷேட ஹெலிகொப்டர் மூலம் இங்கு வந்தோம். அவ்வாறிருந்தும் பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவைகள் எல்லாம் ஏன் முன்னெடுக்கப்பட்டன? என்று நாம் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகள் வந்தபோது, பாராளுமன்றத்தில் குரல் கொடுத்ததற்காகவும், சமூகத்துக்கு எதிரான வன்முறைகளின் போது, அந்த இடத்துக்குச் சென்று, உரியவர்களைத் தட்டிக் கேட்டதற்காகவுமே இவ்வாறு அவர் பழிவாங்கப்படுகின்றார். பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குகள் பல அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டும், சி.ஐ.டி யில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன .

இன்று சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நசுக்க வேண்டுமென்ற சிந்தனை மேலோங்கியுள்ளது.

“நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தால் உங்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்” என்று பசப்பு வார்த்தைகளைக் கூறுபவர்கள், கடந்த காலத்தில் பெட்டிப் பாம்பாக இருந்தார்கள். எனவே, இவர்களின் பம்மாத்துக் கதைகளை நம்பாமல், அனைத்து சமூகத்தையும் அரவணைக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கு, உங்கள் வாக்குகளை அளியுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

2 கருத்துரைகள்:

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல்குர்ஆன் : 3:200)
www.tamililquran.com

அவங்க ஜனாஸா
நீங்கள் ஏதாவது முயற்சி செய்யவில்லையே.
மாவட்ட நீதி மன்றத்திலாவது ஒரு வழக்கொன்றை போட்டிருக்கலாமே

Post a comment