Header Ads



சுதந்திர கட்சியை தோல்வியடைய, செய்வதற்கு பொதுஜன பெரமுனவிற்குள் சதித்திட்டம்

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியை தோல்வியடையச் செய்வதற்கு பொதுஜன பெரமுனவிற்குள் சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. 

இவ்வாறான சவால்களைக் கடந்து சுதந்திரகட்சி பொதுத் தேர்தலில் தனித்துவமான வெற்றிபெற்றுக் கொள்ளும் என்று, அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கேசரிக்கு தெரிவித்தார்.

தேர்தல் பிரசார கூட்டங்களில் சுதந்திர கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று, பிரசன்ன ரணதுங்க போன்ற பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே கூறுகின்றனர். 

இது தொடர்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சு.க. கடும் அதிருப்தியை தெரிவித்ததாகவும் பேராசிரியர் ரோஹன மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திர கட்சி இரகசியமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சஜித் தரப்பினருடனோ அல்லது வேறு தரப்பினர்களுடனோ எவ்வித இரகசிய கூட்டணியையும் அமைக்காது. பொதுஜன பெரமுனவிலுள்ள சில உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களினால் சுதந்திர கட்சி மீது போலியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இரு தரப்பினரும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னரே கூட்டணி அமைக்கப்பட்டது. 

இப்போது எதிர்ப்பவர்கள் ஆரம்பத்தில் ஏன் அமைதியாக இருந்தனர்? இவ்வாறான விடயங்கள் குறித்து சுதந்திர கட்சி தனது அதிருப்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியிலுள்ள கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சுதந்திர கட்சி இது போன்று பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றை வென்று பொதுத் தேர்தலில் தனித்துவமான வெற்றியைப் பெறுவது உறுதி என்றார். 

No comments

Powered by Blogger.