July 30, 2020

தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் புதிய மாற்றம் - ஜனாதிபதிக்கு மக்கள் பாராட்டு


குறுகிய காலப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் மோதல்கள் இல்லாத புதிய தேர்தல் பிரச்சார போக்கொன்று நாட்டில் உருவாகியுள்ளது. அது ஜனாதிபதி தேர்தலில் இருந்து இது வரை அரச தலைவராக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளின் மகிழ்ச்சியான பெறுபேறாகும் என மக்கள் தெரிவித்தனர். 

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (29) களுத்துறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், பண்டாரகம சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போதே மக்கள் இதனை தெரிவித்தனர். 

அபேட்சகர் லலித் எல்லாவலவினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஜனாதிபதி அவர்கள், முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உள்ளங்களை வென்றுள்ளது. எனவே ஜனாதிபதி அவர்களின் கரங்களை பலப்படுத்துவதற்கு கட்சி, நிறம் என்ற பேதமின்றி வாக்குகள் அளிக்கப்படும் என மக்கள் தெரிவித்தனர். அரசியலமைப்பு மாற்றத்தினூடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு அந்த அதிகாரத்தை பயன்படுத்துமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஹொரன சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் உட்சாக வரவேற்பளித்தனர். 

குறைந்த வருமானம் பெறுவோருக்கும் பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் தேர்தலின் பின்னர் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமென மக்கள் எழுப்பிய வினாவொன்றுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

ஹொரணை தக்சிலா கனிஷ்ட வித்தியாலயத்தின் சிறுமி ஹசலி விதுமுனி கொவிட் நிதியத்திற்கு தனது சேகரிப்பில் இருந்த பண உண்டியல் ஒன்றை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார். 

அபேட்சகர் லலித் வர்ணகுமார பெல்லபிட்டிய பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். பிரதேசத்தின் கல்வி, விவசாயம் மற்றும் வீதி முறைமை குறித்த பிரச்சினைகள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. 

ரெமுன மகா வித்தியாலயத்தின் சிறுமி உமேகா செவ்வந்தி கொவிட் நிதியத்திற்காக பண உண்டியல் ஒன்றை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார். 

அபேட்சகர் யசபால கோரலகே இங்கிரிய பிரதேச சபை விளையாட்டரங்கிலும் அபேட்சகர் சஞ்ஜீவ எதிரிமான்ன புலத்சிங்கள மகாவெலி விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்களிலும் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். 

இறப்பர் சார்ந்த உற்பத்திகளுக்கான கேந்திர நிலையமாக களுத்துறை மாவட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு குறித்து சஞ்ஜீவ எதிரிமான்ன ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார். இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பதவி வெற்றிடங்களுக்கு அங்கு பல வருடங்களாக சேவையில் உள்ளவர்களை நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு முன்மொழிவொன்று ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

அபேட்சகர் உதேனி அத்துகோரல பதுரெலியே பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். 

இச்சந்திப்புக்களை தொடர்ந்து பதுரெலிய நகருக்கு நடை பயணமாக சென்ற ஜனாதிபதி அவர்கள் வீதியின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். 

அபேட்சகர் சந்ரபானு அதிகாரி மத்துகம பிரதேச  சிறுவர் பூங்காவிலும் அபேட்சகர் அனுப பியும் பெஸ்குவல் மத்துகம சந்தை வளாகத்திலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. 

அபேட்சகர் பியால் நிஷாந்த பேருவலை பிரதேச சபை அலுவலகத்திற்கு பின்னாலும் அபேட்சகர் ரோஹித்த அபே குணவர்தன களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களிடம் பிரதேசத்தின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார். 

அபேட்சகர் ரோஹித்த அபே குணவர்தனவின் இணையத் தளத்தையும் ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். 

ஹொரணை ஸ்ரீபாலி கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்விகற்கும் சிறுமி ஆர்.ஏ.தஹம்தி விபக்ஷா பண உண்டியல் ஒன்றை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார். 


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.29  

0 கருத்துரைகள்:

Post a comment