Header Ads



சிறிகொத்தவின் ஆட்சியை பிடிப்பதற்காக உங்கள், வாக்குகளை சஜித்திற்கு வழங்க வேண்டாம் - பிரதமர்

கடந்த நல்லாட்சி அரசாங்கம் வரையறையின்றி பழிவாங்கல் செயற்பாட்டில் ஈடுபட்டதே அன்றி மக்களுக்காக எவ்வித தியாகங்களையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடுகம்பளை ஈறியகொல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கம் வரையறையின்றி பழிவாங்கல் செயற்பாட்டிற்காக கவனத்தை செலுத்தியிருந்ததே தவிர மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ அல்லது அபிவிருத்திதொடர்பிலோ அவதானிக்காத நிலையில் நாட்டின் எதிர்கால பயணம் தடைப்பட்டதாக பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து ஒரு நாடு என்ற வகையில் இலங்கையை சுயாதீனமாக முன்னோக்கி செல்வதற்கு தடையாக சர்வதேசத்தின் தாக்கம் காணப்பட்டதாகவும், 2015 ஆம் ஆண்டு அவர்களுக்கு தேவையான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாகவும் பிரதமர் இங்கு மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சக்திக்கு தேவையான அரசாங்கத்தை நியமித்துக் கொண்ட போதிலும் அவர்களுக்கு வரவேற்பை தவிர மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்தவொரு தேவையும் இருக்கவில்லை.

சர்வதேச சதிகளின் தாக்கம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த தவறான எண்ணம் குறித்து பிற்பட்ட காலத்தில் மக்கள் நன்கு புரிந்துக் கொண்டுள்ளதாகவும், இந்த தீர்மானமிக்கதேர்தலில் தமது கடமையை நிறைவேற்றுவது தொடர்பில் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது சஜித் பிரேமதாச பழமையான அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிளவடையச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போது சிறிகொத்தவின் ஆட்சியைபிடிப்பதற்கு தமக்கு வாக்களிக்குமாறு நாடளாவிய ரீதியில் பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

சிறிகொத்தவின் ஆட்சியை பிடிப்பதற்கு உங்கள் மதிப்புமிகுந்த வாக்குகளை வழங்குவதை விடுத்து நாட்டின் அபிவிருத்தி, பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் முழு தேசத்தையும்  கட்டியெழுப்புவதற்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என்றும் பிரதமர் இதன்போது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த சந்திப்பின்போது குருநாகல் மாவட்ட குழுத் தலைவர் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பர்னாந்து மற்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

1 comment:

  1. சிரிகொத கட்டடம் சின்ன மச்சானுக்குத் தான் சொந்தமாக இருக்க ணே்டும்.அது சஜித்தின் கைக்குச் சென்றால் எங்களுக்கு ஆபத்து. எனவே,எங்களுக்கு ஆபத்து வராமல் உங்களுடைய பெறுமதியான வாக்குகளை வழங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.