Header Ads



நான் அதிபரானால் முஸ்லிம்களுக்கான தடையும் நீக்கப்படும்: ஜோ பிடன் உறுதி


வரும் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஹெச்1-பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவேன். அமெரிக்காவுக்குள் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளின் மக்கள் வந்து செல்வதற்கான தடையை முற்றிலும் நீக்குவேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உறுதியளித்தார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் ஆசிய அமெரிக்கா மற்றும் பசிபிக் ஐலாண்டர் (ஏஏபிஐ) சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது தான் அதிபரானால் முதல் 100 நாட்களில் என்னவெல்லாம் செய்வேன் என்பது குறித்த கொள்கை விளக்கத்தை மக்கள் முன் ஜோ பிடன் வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது

''ஐ.டி. ஊழியர்கள் உள்ளிட்ட பிற தொழில்களில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நான் அதிபராக வந்தால் முதல் கட்டமாக ஹெச்1பி விசா வழங்க நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக நீக்குவேன்.

வெளிநாடுகளில் இருந்து வந்த மக்கள் அமெரிக்காவைக் கட்டமைத்ததில் பெரும்பங்கு இருக்கிறது. ஹெச்1பி விசா சீரமைப்பு மசோதாவை உடனடியாக செனட்டுக்கு அனுப்பி வைத்து அதற்குரியை தடையை நீக்குவேன்.

குடியேற்றக் கொள்கை என்பது குடும்பங்களை ஒன்றுசேர்ப்பதாக இருக்க வேண்டும். நவீனமாக இருக்க வேண்டும். ஒருமைப்பாடு, பன்முகத்தன்மை ஆகியவை நமது குடியேற்ற முறையின் முக்கியமான தூண்கள்.

ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் கொடூரமானவை, மனிதத்தன்மை இல்லாதவை. கிழக்கு மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை உடனடியாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவில் முஸ்லிம்கள் பயணிக்கவும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் வரவும் தடை இருக்கிறது. இந்தத் தடை நீக்கப்படும், அகதிகள் வருகை உரிய விதிமுறைகளுடன் அனுமதிக்கப்படும்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்குவதையும் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். தகுதியுடைய அனைவருக்கும் க்ரீன் கார்டு பெறுவது எளியாகக் கிடைக்க விதிகள் மாற்றப்பட்டு, க்ரீன் கார்டு வழங்கப்படும்.

என்னுடைய குடியேற்றக் கொள்கையில் உயர்ந்த திறமை கொண்டவர்களுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல், குறைந்த ஊதியம் பெறுபவர்கள், குறைந்த திறமை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும். இதன் மூலம் அமெரிக்காவில் போட்டி அதிகரிக்க வகை செய்யப்படும். வேலை அடிப்படையில் விசா வழங்குவதை ஒழித்து திறமை அடிப்படையில் விசா வழங்குவதை உறுதி செய்வேன்.

தற்போது ஆண்டுக்கு 1.40 லட்சம் பேருக்கு க்ரீன் கார்டு விசா அல்லது வேலைக்கான விசா வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை உள்நாட்டில் வேலையாட்கள் தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படும்.
அதேபோல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெறுவதில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இவர்கள் உலகப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு செய்பவர்கள். அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெறும் வெளிநாட்டவர்களை இங்கேயே தக்கவைத்துக்கொள்ள க்ரீன் கார்டு வழங்கிட வேண்டும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு பிடன் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.