Header Ads



முஸ்லிம்களின் வாக்குகளை கோருவதற்கு, இந்த அரசுக்கு எந்த உரிமையும் இல்லை - இம்தியாஸ்


இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாத அமைச்சரவையை முதல் முறையாக தற்போதைய அரசாங்கம் நியமித்தது என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தேசிய பட்டியல் வேட்பாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் கலேவல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் வாழும் சிறுபான்மை இனமாக முஸ்லிம் மக்களின் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் இல்லாமல் நாடு என்ற வகையில் முன்நோக்கி செல்ல முடியுமா என்ற சிக்கல் காணப்படுகிறது.

இப்படியான நிலைமையில், ராஜபக்சவினருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை கேட்க எவ்வித உரிமையும் இல்லை எனவும் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பைசர் முஸ்தபா அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. ஆறுமுகன் தொண்டமான் அண்மையில் காலமாகும் வரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்தார். அவரது மறைவுக்கு பின்னர், அவர் வகித்த பொறுப்புகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பகிரப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் முக்கிய பதவிகளை வகித்து வந்தனர்.

தமிழர்கள் சார்பில் சௌமியமூர்த்தி தொண்டமான் மாத்திரமே அமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்னாளில் டக்ளஸ் தேவானந்தா, பெரியசாமி சந்திரசேகரன், ஆறுமுகன் தொண்டமான், மனோ கணேசன், பழனி திகாம்பரம், டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்ததுடன் ராஜாங்க அமைச்சர்களாவும் பிரதியமைச்சர்களாகவும் தமிழர்கள் பதவி வகித்தனர்.

No comments

Powered by Blogger.