Header Ads



உலக வரலாற்றில் இடம்பிடித்த, ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரம் - பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது


உலக தேர்தல் வரலாற்றில் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற முதலாவது “காபன் குறைந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக” வழங்கப்படுகின்ற “சூழல்நேய பிரச்சாரத்திற்கான சான்றிதழ்” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தில் சுற்றாடல் கொள்கை உருவாக்க குழுவின் பிரதிநிதிகள் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு இச்சான்றிதழை வழங்கினார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் பிரச்சாரம் சுற்றாடல் பாதிப்பு மற்றும் பசுமை வாயு வெளியேற்றம் முற்றாக இல்லாத பிரச்சாரம் என்பதை பசுமை வாயு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமுள்ள Sustainable Future Group என்ற சுற்றாடல் அமைப்பு உறுதி செய்துள்ளது. இக்குழு பசுமை வாயு வெளியேற்றத்துறையில் சர்வதேச தரத்தைக் கொண்ட இலங்கை தராதர அங்கீகார சபையின் அனுமதியை பெற்றதாகும்.

சம்பிரதாய தேர்தல் முறைகளிலிருந்து விலகி, சுற்றாடலைப் பாதிக்காத ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் எண்ணம் மற்றும் நோக்கமாகும். நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட கூட்டங்களை பொலித்தீன், சுவரொட்டி, பதாதைகள் எதுவுமில்லாமல் நடத்துவதற்கு ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்திருந்தார். 

மக்கள் சந்திப்புகளுக்கு வருகை தரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களினால் சுற்றாடலுக்கு வெளியிடப்படும் காபன் அளவு சர்வதேச முறைமையில் கணக்கிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்படும் காபன் அளவை உள்வாங்குவதற்காக 21,000 மரங்கள் நடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் “நாட்டில் உருவாக்கப்படும் சுதந்திரத்தின் மூச்சு” மர நடுகைத் திட்டம் அனைத்து மக்கள் கூட்டங்களிற்கு இணையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ் 26,000 மரக் கன்றுகள் நடப்பட்டு இதுவரை காலமும் பராமரித்து வருவதினால் காபன் தாக்கம் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்பதை “தேசிய தூய்மை உற்பத்தி மத்திய நிலையம்” கணக்கிட்டுள்ளது. குறித்த காலவரையறையில் சுற்றாடல் பாதிப்பு மற்றும் காபன் வெளியேற்றத்தை அடிப்படையாகக்கொண்டு சுற்றாடல் பாதிப்பு முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளமையை உறுதி செய்துள்ளதாக இலங்கை தராதர அங்கீகார சபை அறிவித்துள்ளது. 

“பசுமை சுற்றாடல் கொள்கை என்பது சுற்றாடல் பாதுகாப்பு மட்டுமன்றி சமநிலைப்படுத்தப்பட்ட சமூக, பொருளாதார பழக்கங்களை நடைமுறைப்படுத்தல்” ஆகுமென்று ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது”. 

“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தில் சுற்றாடல் கொள்கை உருவாக்கக் குழுவை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பேராசிரியர் சரத் கொட்டகம, கலாநிதி சம்பத் வாஹல, தர்ஷனி லகந்தபுர, ரோஷினி ராஜபக்ஷ, சமிந்த மகநாயக்க, அனுஷ்க குமாரசிங்க, சமந்த குணசேகர மற்றும் அர்ஜூன பெரேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.16

No comments

Powered by Blogger.