Header Ads



முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற, மாவட்டத்தை வென்றெடுக்கும் சந்தர்ப்பம் கைநழுவியது

திகாமடுல்லையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிடாது - ஹசன் அலி
திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகளை ஒரே சின்னத்தில் களமிறக்குவதற்கு முன்னெடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதால் அங்கு போட்டியிடுவதற்கு எடுத்த தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். ரி. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்து இன்று வியாழக்கிழமை - 30- அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடுகின்றது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான தீர்மானம் ஏற்கனவே கட்சியினால் எடுக்கப்பட்டிருந்த போதிலும் , அங்கு முஸ்லிம் கட்சிகளை ஒரே சின்னத்தில் களமிறக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது.

அங்குள்ள சில கட்சிகள் தனியாக போட்டியிடுவதற்கும், வேறு சிலர் பெருந்தேசிய கட்சிகளில் கூட்டாகவும் தனியாகவும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்ததால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் உரிய அளவு கிடைப்பதற்கான வாய்ப்பு அங்கு கடுமையான சவால்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

அதனால் நாட்டில் முஸ்லிம் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரேயொரு மாவட்டத்தை நாம் இலகுவாக வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் கை நழுவிப்போயுள்ளது.

இவ்வாறான ஒரு துரதிஷ்டமான நிலைமையினை மேலும் மோசமாக ஆக்கக்கூடாது  என்பதற்காக ஐக்கிய சமாதான கூட்டமைப்பு திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நிந்தவூரில் நடந்த ஒன்றுகூடலின் போது அம்மாவட்டத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தோம்.

மேலும் எமது கட்சி போட்டியிடாத மாவட்டங்களில்  எவ்வாறு நமது ஆதரவாளர்கள் தமது பங்களிப்பை இத்தேர்தலில் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தேர்தலுக்கு முன்னர் தலைமைத்துவ சபையானது ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும் என சகலரும் அக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானித்திருந்தனர்.

ஜூலை 27 ஆம் திகதி ஏறாவூரில் நடைபெற்ற தலைமைத்துவ சபை கூட்டத்தின்போது நீண்ட நேரம் கலந்துரையாடி எடுக்கப்பட்ட பின்வரும் தீர்மானங்களை கட்சி அமைப்பாளர்கள்  ஆதரவாளர்களுக்கு தெரிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இத்தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிடாத மாவட்டங்களில் கட்சி பேதமின்றி விரும்பும் வேட்பாளர்களை தனிப்பட்ட ரீதியில் தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

செயற்திறமைமிக்க ஆளுமை, சமூகம் சார்ந்த விடயங்களின் போது அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட முன் உதாரணங்கள், அவர்களின் தன்னலமற்ற  மனப்பாங்கு போன்ற பண்புகள் அவதானிக்கப்பட வேண்டும்.

இலஞ்சம், ஊழல் மற்றும் மதுபானம், போதைப் பொருள்கள் பாவித்தல் போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடாதவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும். பொது சொத்துக்களில் சுரண்டுபவர்களாகவும் பட்டம் பதவிகளுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுக்கக் கூடியவர்களாகவும்  அவர்கள் இருக்கக் கூடாது.

மேற்குறிப்பிட்ட சமூக விரோத செயல்;களில் ஈடுபட்டுவரும் ஒருவருக்கு தெரிந்து கொண்டே நீங்கள் வாக்களிக்கும் பட்சத்தில் அவர் தொடர்புபடக்கூடிய அத்தனை சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் நீங்கள் அங்கீகாரம் வழங்குவது மட்டுமன்றி அவர் செய்யப்போகும் ஒவ்வொரு அநீதங்களிலும் ஒரு பங்குதாரராக ஆகும் அவலநிலைக்கும் ஆளாகுவீர்கள்.

No comments

Powered by Blogger.