Header Ads



மத்ரஸா பாடசாலைகளை மூடுவோம் என்றுகூறி, வாக்குகளை வெல்வதே நோக்கமாக இருக்கிறது - சமன் ரத்னப்பிரிய

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படும் சூழ்நிலையில், தொற்றாளர்களைக் கண்டறிவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

பொதுத்தேர்தலை முன்நிறுத்திய தமது பிரசார நடவடிக்கைகளின் போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்புச்சட்டத்தை அரசாங்கம் கிழித்துப்போட்டிருக்கிறது. அதேவேளை எதிர்த்தரப்பின் பிரசாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் ஆயுதமாகவும் அதனை உபயோகிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -07- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் நாட்டிலுள்ள மத்ரஸா பாடசாலைகளை மூடவேண்டும் என்று அத்துரலியே ரத்ன தேரரினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துத் தொடர்பில் வினவிய போது பின்வருமாறு பதிலளித்தார்.

தற்போதைய அரசாங்கம் இன, மதவாதத்தைப் பயன்படுத்தியே அதன் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அதன் ஓர் அங்கமாகவே ஏற்கனவே உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களை அரசாங்கம் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றது. அதேபோன்று அத்துரலியே ரத்ன தேரரின் கருத்தையடுத்து இன்னும் சில நாட்களில் மத்ரஸா பாடசாலைகளை மூடுவோம் என்றுகூறி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்குகளை வெல்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது என்றே எமக்குத் தோன்றுகிறது. அத்துரலியே ரத்ன தேரர் வேறு கட்சியில் போட்டியிட்டாலும், தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் யாரெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்று தற்போது கூறமுடியாது. எனவே அவர் அரசாங்கத்திற்கு ஆதரவாக இவ்வாறு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தவர்கள் தான் தற்போது பிரிந்துசென்று வேறொரு தரப்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இது மிகவும் மோசமான விடயமாகும். எனினும் தேர்தலின் பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.