July 23, 2020

இறைவனின் தூதர் என்று கூறியவரின் மகனைக் கவர்ந்த இஸ்லாம் - நடந்தது என்ன தெரியுமா..?


- Aashiq Ahamed -

செல்வாக்கு மிகுந்த ஒருவர் நேரான பாதைக்கு திரும்பினால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு இவர் ஒரு மிகச் சிறந்த உதாரணம். இவர் இறந்த போது, அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான CAIR, இவரை அமெரிக்காவின் இமாம் என்று அழைத்து பெருமை சேர்த்தது.

நவீன உலகின் மிகச் சிறந்த போராளிகளில் ஒருவரான மால்கம் X, குத்துச்சண்டை ஜாம்பவனான முஹம்மது அலி, நம் தலைமுறையின் தலைச்சிறந்த இமாம்களில் ஒருவரான சிராஜ் வஹாஜ் என பலரையும் தூய இஸ்லாமிற்கு அழைத்த வந்த இவரின் பெயர் வாரித் தீன் முஹம்மத் (படம்).

1930-களில் கருப்பின உரிமைகளுக்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட 'இஸ்லாமிய தேசியம்' எனும் அமைப்பு, பெயரில் இஸ்லாமை வைத்துக்கொண்டு இஸ்லாமிற்கு சம்பந்தமில்லா கொள்கைகளையே பின்பற்றியது. இதன் தலைவரான எலிஜா முஹம்மத் தன்னை இறைவனின் தூதர் என்றார். இவரின் வசீகர பேச்சால் கவரப்பட்ட மால்கம் X, முஹம்மது அலி, சிராஜ் வஹாஜ் என பலரும் தவறான இந்த இயக்கத்தில் இணைந்தனர். இந்த எலிஜா முஹம்மதின் மகன் தான் வாரித் தீன் முஹம்மத்.

இவரும் ஆரம்பத்தில் இந்த தவறான கொள்கையிலேயே இருந்தார். அமெரிக்க இராணுவத்திற்கு பணிபுரிய மறுத்து சிறைக்கு சென்ற இவருக்கு அங்கே குர்ஆன் அறிமுகமானது. குர்ஆனே அப்போது தான் அறிமுகமாகிறது என்றால் இவர்கள் எப்படியான கொள்கையை பின்பற்றி இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். குர்ஆனை முழுமையாக கற்றுத்தேர்ந்த வாரித் தீன், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தன் தந்தைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். தூய இஸ்லாமின்பால் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

இவரது அழைப்பு பணியின் பலனாக, மால்கம் X முதற்கொண்டு பலரும் தூய இஸ்லாமின்பால் வந்தனர். எலிஜா முஹம்மத்தின் மறைவுக்கு பிறகு இயக்கத்தை கைப்பற்றிய வாரித் தீன் முஹம்மது அவர்கள், இயக்கத்தின் கைவசம் இருந்த 400 வழிப்பாட்டு தளங்களை பள்ளிவாசல்களாக மாற்றினார். பிலால் (ரலி) அவர்கள் நினைவாக தான் நடத்திய 'தி பிலால் நியூஸ்' இதழ் வாயிலாக மக்களை இஸ்லாமிற்கு அழைத்தார். லட்சக்கணக்கான பிரதிகளை விற்ற இந்த பத்திரிக்கை ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான கருப்பின மக்களை தூய இஸ்லாமின்பால் கொண்டு வந்தார் வாரித் தீன் முஹம்மத். ஒரு கட்டத்தில் இஸ்லாமிய தேசிய அமைப்பை கலைத்தே விட்டார் வாரித் தீன்.

உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் வாரித் தீன் அவர்களின் சேவையை பாராட்டி கவுரவித்தன. இப்போது இந்த பதிவின் முதல் வரிக்கு சென்று மறுபடியும் படியுங்கள்.

1 கருத்துரைகள்:

அல்ஹம்துலில்லாஹ்!  காலத்திற்கேற்ற சிறந்த கருத்துக்களை முன்வைக்கும் சகோதரர் ஆஷிக் அஹமதுக்கு நன்றிகள்.

தீவுக்கூட்டங்களான மாலைத்தீவுகள், இந்தோனேசியா போன்ற நாடுகள்கூட சத்தியத்தை ஏற்பதற்கு இவ்வாறான செல்வாக்கு மிக்க தனி நபர்கள் நேரான பாதைக்கு வந்ததன் தாக்கங்களே  காரணங்களாக அமைந்திருக்கின்றன.

அந்த வகையில் அவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள இலங்கையிலும் இவ்வாறான மாற்றங்கள் வருவதற்குச் சாத்தியமான சூழலும் தேவையும் இருப்பது மறைவானதல்ல.

உலகின் பன்னாட்டு மனிதர்களும் எதிர்நோக்கும் தீர்க்க முடியாத அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரக்கூடிய ஓர் மறைதான் புனித அல் குர்ஆன்.  அதுவொரு முழுமையான வாழ்வியலமைப்பாகும்.

அது அனைவரையும் படைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வால் அனைத்து மனிதர்களின் ஈருலகின் அமைதியும் வெற்றியும் நிறைந்த வாழ்வுக்காக அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. 

அது அருளப்பெற்று 14 நூற்ராண்டுகள் ஆகியும் அதன் எந்தவொரு அட்சரமும் மாற்றப்படாதிருப்பது அதன் ஆச்சரியமான நம்பகத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்".

(அல்குர்ஆன் : 4:82)
www.tamililquran.com

Post a comment