Header Ads



அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு, இயற்கை கடனை முடிப்பதுகூட கஷ்டம்

" அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப் பறவைகளும் வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவிதான் உங்களுடன் இருக்கப்போகின்றேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்தார். 

பத்தனை பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

" வாக்கு என்பது உங்கள் உரிமை. அந்த வாக்குதான் ஆட்சியை தீர்மானிக்கப் போகின்றது. மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, அந்த உரிமையை எவரும் களவாடமுடியாது. முன்னர் கள்ள வாக்கு போட்டவர்கள் இருந்தனர், சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்குகள் அளித்தவர்களும் இருந்தனர். இந்த காலம் தற்போது மலையேறிவிட்டது. 

கள்வர்கள் மற்றும் கொள்ளையர்களும் பாராளுமன்றம் தெரிவானதால் நல்லவர்களையும் மக்கள் திட்டினர். 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் எனவும் விமர்சித்தனர். 

சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது. அவர்கள்தான் அந்தபக்கம், இந்த பக்கம் என தாவுகின்றனர். நாளை எந்த பக்கம் தாவுவார்கள் எனவும் தெரியாது. எமது பக்கத்திலும் இருக்கின்றனர். உங்கள் புள்ளடி மூலம் சிறந்த பதிலடியை கொடுக்கவேண்டும். இதனால்தான் மஹிந்தவை விட்டுச்சென்றவர்களுக்கு வாக்களிக்ககூடாது என பிரசன்ன ரணதுங்ககூட கூறுகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும். 

தற்போது பருவகால குருவிகள் வருகின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால், எதிர்வரும் 5 ஆம் திகதி பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவி உங்களுடன்தான் இருக்கும். வாக்குகளை வாங்கிக்கொண்டு தவளைகள்போல் தாவவில்லை. பதவிகள் பறிக்கப்பட்டபோதுகூட மஹிந்தவுடனேயே இருந்தேன்." - என்றார். 

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

No comments

Powered by Blogger.