July 29, 2020

இஸ்லாத்தை ஏற்றேன், அம்மா அழுதார், வேண்டாம் என்றார், உனக்குள்ளே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார்


சகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின் செல்லப் பிள்ளையாக இருந்து பின்னர் இஸ்லாமை தழுவி பெரும் அதிர்வை உண்டாக்கியவர். இவருடைய இஸ்லாமிற்கு எதிரான செயல்களை பார்த்தோமென்றால், 'ஓரமா போய் விளையாடுங்க' என்று நம்மூர் வலதுசாரிகளை சொல்லி விடுவோம்.

உதாரணத்திற்கு, இவர் நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம். நெதர்லாந்து பாராளுமன்றத்தின் மையப்பகுதியில் குர்ஆன், பைபிள் மற்றும் தோராஹ் ஆகிய நூல்கள் வைக்கப்பட்டிருப்பது இந்நாடு காலங்காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கமாகும். யோரம் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து குர்ஆனை அவையில் இருந்து அகற்ற செய்தார், இஸ்லாமை தடை செய்யவும் குரல் கொடுத்தார். பின்பு, மதசார்பற்ற நெதர்லாந்து அரசு, குர்ஆன் இல்லாமல் மற்ற நூல்கள் மட்டும் அவையில் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல என்று கூறி பைபிளையும், தோராஹ்வையும் அகற்றியது. இப்படியான ஒருவர் இஸ்லாமின்பால் வந்தால் எப்படி இருக்கும்? வலதுசாரிகள் மத்தியில் பூகம்பமே வெடித்தது. இதற்கு வாய்ப்பே இல்லை என நம்ப மறுத்தனர்.

இப்படியான வரலாறுக்கு சொந்தக்காரரான யோரம், இன்று நபிமொழிகளை அரபியிலேயே மேற்கோள் காட்டும் அளவு வளர்ந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய அழைப்பாளரான டாக்டர் சபீல் அஹமத் அவர்களுக்கு அளித்த பேட்டியில், தான் எப்படி இஸ்லாமை நோக்கி வந்தேன் என்பது குறித்து சில அழகான சம்பவங்களை விவரித்து இருந்தார்.

"2014-ல் இஸ்லாமிற்கெதிரான நூல் ஒன்றை எழுத தொடங்கினேன். இந்நூலிற்கு தேவைப்பட்ட தகவல்களுக்காக பலருக்கும் கடிதம் எழுதினேன். அப்படி நான் எழுதியவர்களில் ஒருவர் தான், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரான அப்துல் ஹக்கீம் முராத். 1970-களில் இஸ்லாமை தழுவிய முராத் தற்போது அரபி பயிற்றுவித்து கொண்டிருக்கிறார். இஸ்லாம் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவரிடம் விளக்கம் கேட்டிருந்தேன். நிச்சயமாக பதில் வராது என்றே எண்ணினேன். ஆனால் பதில் வந்தது. என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து இருந்தார் முராத்.

கூடவே, குட்டையில் அமர்ந்துக் கொண்டு கேள்வி எழுப்பாதீர்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள், வெளியே ஒரு தோட்டமும், இஸ்லாம் எனும் அழகான மாளிகையும் இருக்கிறது. அதனுள் சென்று உக்கார்ந்து கேள்வியை கேளுங்கள் என்று அவர் சொன்ன கருத்து என்னை சிந்திக்க வைத்தது. முராத்-துடன் நடந்த கடித போக்குவரத்து, இஸ்லாம் நான் எண்ணியது போல மோசமில்லை என்ற கருத்தை வலுப்பெற வைத்தது. முஹம்மது நபி குறித்து தீவிரமான நெகட்டிவ் பார்வை என்னிடம் இருந்தது. மார்ட்டின் லிங்க்ஸ் எழுதிய முஹம்மது நபி பற்றிய நூலை படித்துக்கொண்டு வரும் போது, ஹிந்த் (ரலி) அவர்கள் குறித்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.

நபியின் சிறிய தந்தையை ஆள் வைத்து கொன்றதோடு மட்டுமல்லாமல் சடலத்தை சிதைத்தவர் ஹிந்த். இந்த செய்தியை கேட்டு நபி அழுதிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு பின்பு, முஹம்மது நபி (ஸல்) ஆட்சியாளராக இருக்கிறார், நபியை சந்திக்க வருகிறார் ஹிந்த் (ரலி). நிச்சயம் முஹம்மது (ஸல்) பழிவாங்க போகிறார் என்ற எதிர்பார்ப்போடு படிக்கிறேன். ஆனால் ஹிந்த் (ரலி) அவர்களை இஸ்லாமிற்கு வரவேற்றதோடு மட்டும் இல்லாமல் அவரை மன்னித்தும் விட்டார் நபி. இவ்வளவு கருணைமிக்கவரையா நான் தவறாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

இஸ்லாம் குறித்து ஆழமாக படிக்க ஆரம்பித்த பிறகு அதன் மீது இருந்த வெறுப்பு விலகியது. இஸ்லாம் மிகவும் லாஜிக்கான மார்க்கமான தோன்றியது. என்னுடைய இஸ்லாமிய எதிர்ப்பு நூல், அதன் பாதியிலேயே, இஸ்லாமிய ஆதரவு நூலாக மாறியது (பார்க்க படம்). இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். அம்மாவிடம் சொன்ன போது அவர் அழுதார், வேண்டாம் என்று சொன்னார், அல்லது குறைந்தபட்சம் உனக்குள்ளாகவே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார். அது எப்படி சாத்தியம்? இத்தனை நாட்களாக இஸ்லாமை எதிர்த்து வந்தேன். அதே மக்களிடம் சென்று நான் முஸ்லிமாகி விட்டேன் என்று சொல்வது தானே சரியானதாக இருக்கும்? இச்சம்பவம் நடந்து சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு என்னிடம் வந்தவர், நீ முன்பை விட இனிமையானவனாக மாறிவிட்டாய் என்றார் (சிரிக்கிறார்)"

சகோதரர் யோரம்-மின் மனமாற்றம் நெதர்லாந்து சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள மக்களை தூண்டியிருக்கிறது. தன்னுடைய அமைப்பின் மூலம், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், சிறைச்சாலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று இஸ்லாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் யோரம்.

டாக்டர் சபீல் அஹமத்துடனான இவரது முழுமையான உரையாடலை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=11vOvqrfFAA

Aashiq Ahamed

5 கருத்துரைகள்:

Masha Allah.Allah is great

ALLAHU AKBER,ALLAHU AKBER Hithayaththitku sonthakkaran ALLAH Mattume---

ALLAHU AKBER,ALLAHU AKBER Hithayaththitku sonthakkaran ALLAH Mattume---

(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் : 17:107)
www.tamililquran.com

அல்ஹம்துலில்லாஹ்

Post a comment