Header Ads



அமீர் அலியை ஆதரித்து, வடிவேல் சுரேஷ் ஆற்றிய உரை


(எச்.எம்.எம்.பர்ஸான்)

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் ஒரு ஆபத்தான தேர்தலாக அமையவுள்ளது அதில் சிறுபான்மை மக்கள் அனைவரும் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம். எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரித்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனையில் நேற்றிரவு (28) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

நடைபெறவுள்ள தேர்தல் ஒரு விசித்திரமான,போர்க்களமான தேர்தலாக அமையவுள்ளது முஸ்லிம் சமூகத்தின் மீது எவ்வாறான தடைகளைப் போடலாம், எப்படி சட்டத்தை மாற்றலாம்,  எப்படி வியாபார ஸ்தலங்களில் கை வைக்கலாம், எவ்வாறு பள்ளிவாசல்களில் கை வைக்கலாம், இஸ்லாமிய மதத்தின் வளர்ச்சியை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி சிந்திக்கின்றனர். அவ்வாறனவர்களுக்கு சோரம் போனவர்களாக இருந்தால் சமூகத்தின் துரோகிகளாக நாங்கள் ஆகி விடுவோம்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சட்டங்கள் கொண்டுவந்து மோசமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள துடிக்கிறார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ச வெற்றி பெற்று பதவி ஏற்றவுடன் நான் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமலே வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறினார் அதை அவர் சிறுபான்மை மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகவே நான் பார்க்கிறேன்.

எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்கத்தான் பார்க்கிறார்கள் அப்படி பிரித்தால்தான் அவர்கள் அனைத்து விடயங்களையும் இலகுவாக செய்ய முடியும். ஆனால் அந்தப் பருப்பு இந்த முறை வேகாது. இந்த முறை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக ஒரே அணியில் நின்று செயற்படுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சரியாக இருந்திருந்தால் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா இருந்திருப்பார். ரணில் எட்டப்பன் வேலை செய்ததால் இந்நாட்டில் இனவாதம் ஓங்கி நிற்கிறது.

எனவே, எதிர்வரும் 5ம் திகதி சிறுபான்மை சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் நாளாக அமையவுள்ளது. அரிசிக்கும் பணத்துக்கும் நாம் சோரம் போகாமல், சலுகை அரசியல் பக்கம் செல்லாமல் உரிமை அரசியல் பக்கம் சென்று அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்களை தெரிவு செய்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.