July 12, 2020

தன் சுயநலத்துக்காக உலக நாடுகளை அமெரிக்கா எப்படி அழித்தொழித்தது? - உண்மைகளை போட்டு உடைக்கும் புத்தகம்

20-ம் ஆம் நூற்றாண்டின் மிக கவர்ச்சிகரமான வார்த்தை “ வளர்ச்சி ”. இந்த ஆசை வார்த்தையை வைத்து அமெரிக்கா தன்னை ஒரு பேரரசாக நிலை நிறுத்திக் கொண்டது.

பன்னாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரம், சர்வதேச நிதி நிறுவனங்கள் இடையே அமைந்த கூட்டணி அமெரிக்காவின் இந்த லட்சியத்தை வென்றெடுக்க உதவியது.

இந்த கொடும் கூட்டணி மூன்றாம் உலக நாடுகள் மீது வளர்ச்சி என்ற பெயரில் நடத்திய தாக்குதல்கள் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அளவு வஞ்சகம் நிறைந்தது.

அதிரவைக்கும் அந்த திரைமறைவு அரசியல் தந்திரத்தை, வெளிச்சமிட்டு காட்டுகிறது “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” புத்தகம்.

இயற்கை வளங்கள் கொண்ட, பின் தங்கிய நாடுகளை முதலில் குறிவைக்கிறது அமெரிக்கா. அந்நாட்டின் எதிர்கால வளர்ச்சி பற்றி மிகுதியான கணிப்பைக் கூறி, அந்நாட்டு அரசுகளை நம்ப வைக்கின்றனர். தான் விரும்பியதை சாதிக்க அந்நாட்டில் ஆட்சி மாற்றம் செய்யும் அளவுக்கு துணிகிறது.

பின், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை உருவாக்க, அமெரிக்காவின் அதிகாரப் பிடிக்குள் உள்ள உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளிடம் இருந்து கடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த கடன் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களை அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களே மேற்கொள்ளும். இதன் மூலம், அந்த பணம் வட்டியும் முதலுமாக அமெரிக்காவுக்கே வந்தடையும். ஆனால், கடன் வாங்கிய நாடுகளால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது.

இதைக் காரணமாக வைத்து, ஒரு கந்து வட்டிக்காரனைப் போல பலவற்றை சாதித்துக் கொள்ளும் அமெரிக்கா. இயற்கை வளச் சுரண்டல், ஐ.நாவில் தங்களுக்கு ஆதரவாக வாக்கு, ராணுவ தளம் அமைத்தல், போன்றவை கடனுக்கு நிகரானதாக பறித்துக் கொள்ளப்படும்.

இதை ஒரு அமைப்பு முறையாக கடந்த 80 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது அமெரிக்கா. இந்த அமைப்பு முறையில், பொருளாதார அடியாட்களின் பங்கு மிக முக்கியமானது. மேலே கூறப்பட்டுள்ள அனைத்தையும் செயல்படுத்தப் போவதே அவர்கள் தான். அவர்களின் பணி கோட் சூட் அணிந்து, போலியான பொருளாதார கணிப்புகளை வெளியிட்டு, லஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளை மயக்கி, அமெரிக்காவுக்கு அந்நாட்டின் வளத்தை கடத்திச் செல்வதே.

அப்படி ஒரு பொருளாதார அடியாள் தான் இந்த புத்தகத்தை எழுதிய ஜான் பெர்க்கின்ஸ். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து, பணத்தையும், புகழையும் சம்பாதித்த பெர்க்கின்ஸ், தனது செயலால் உலகில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டு மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாகிறார். நீண்ட கால மன உறுத்தலில் இருந்து விடுபட எழுதப்பட்டதே இந்த புத்தகம்.

1 கருத்துரைகள்:

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 10:13)
www.tamililquran.com

Post a comment