July 17, 2020

இலக்கு வைக்கப்படும் ACJU - ரதன தேரருக்கு வாயில் வயிற்றுப் போக்கு

-மாஸ் எல் யூசுப்-

ஒரு ஆட்சேபனையொன்றுடன் இந்தப் பத்தியை ஆரம்பிக்கின்றேன். இது ஒரு அலசல் மட்டுமே. கட்டுரையை எழுதியவர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு பாதுகாப்புக் கொடுக்கவோ பாதுகாக்கவோ இதன் மூலம் கருதவில்லை. ஜம்இய்யதுல் உலமா ஒரு நிறுவனமாக 1924 ஆம் ஆண்டளவில் நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 100 வருடங்களாக இயங்கி வருகிறது. அந்த வகையில் இது காளானாக முளைக்கும் மற்றுமொரு சமய அமைப்பல்ல. இது இஸ்லாத்தை ஆழமாகப் படித்தவர்களை உள்ளடக்கியது. இஸ்லாத்தில் குருத்துவம் இல்லை. அந்த வகையில் எந்தவகையிலும் மனிதனின் மீது மனிதன் மேலாதிக்கம் செலுத்துவது, அது சமயம் சார்ந்ததோ வேறோ, இஸ்லாத்தின் போதனைகளில் கிடையவே கிடையாது.

ஜம்இய்யதுல் உலமா இரண்டு வழிகளில் குறிவைக்கப்பட்டிருக்கிறது. முதலில் முஸ்லிம் சமூகத்திலுள்ள சில தலைவர்களிடமிருந்து. முஸ்லிம்களின் தாக்குதல் அதன் தலைமையை இலக்காகக் கொண்டமைந்திருக்கிறது. பொதுவில் யாருமே பூரணமானவர்கள் அல்ல. பூரணமின்மையின் மாறுபட்ட பெறுமானங்கள் தலைவர்களுக்கும் பொருந்தும். அனைத்துக்கும் மேலாக, தலைவரும் மனிதர் தான். தர்க்க ரீதியாக அவர் பூரணமானவராக முடியாது. தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், அவர்களின் செயற்திறனின் அளவு, அவர்களின் பின்னடைவுகள் எனப் பலவற்றை நாங்கள் பார்த்திருக்கிறோம். இவ்வாறு சொல்லும் போது, ஒவ்வொரு தலைவரும் நல்ல தலைமையை வரையறுக்கும் சில பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதை முன்னிலைப்படுத்திக் காட்ட வேண்டியது முக்கியமாகும். மேலும் தன்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய சுமை தலைவருக்கிறது. எப்படியிருந்தாலும் இது தனிநபர் சார்ந்த விடயம். அது இந்தப் பத்தியின் எல்லைக்கு அப்பாலுள்ளது.

இரண்டாவது தாக்குதல் நிறுவனத்துக்கெதிரானது. இது முக்கியமாக தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளாலும் இனவெறிச் சக்திகளாலும் பல சந்தர்ப்பங்களில் துறவிகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது. அவர்களது தாக்குதல்கள், அவை உண்மையிலேயே தாக்குதல்கள் என்பதால் துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் அழைக்க வேண்டியிருக்கிறது, சில கொள்கைரீதியான நோக்கங்களை அடைவதையோ பகுத்தறிவு வாதத்தின் மூலம் ஒரு விடயத்தை ஆதரிப்பதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இவற்றுக்கப்பால் மிரட்டுவதும் பயப்பிராந்தியையும் வெறுப்பையும் உருவாக்குவதும் இவற்றினூடாக வன்முறையைத் தூண்டுவதுமே இதனுடைய வெளிப்படையான நோக்கமாகும்.

ஜம்இய்யதுல் உலமா ஒரு நியாயமான ஆட்டம்

ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது ஜனநாயக நிறுவனங்கள் “சமத்துவம்“ என்பதை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சமத்துவம் நாட்டின் குடிமக்களுடன் தொடர்பானது. எந்தவொரு சக்தியாலும் சமத்துவம் காயப்படுத்தப்படும் போது அல்லது இடைஞ்சலுக்கு உள்ளாகும் பொழுது அது இயல்பிலேயே மோதலைக் கொண்டுவருகிறது. இந்தக் கொள்கையை மீறும் குற்றவுணர்வுள்ள சக்திகள் அதனைத் தொடந்து கொண்டே இருக்கின்றன. சமத்துவத்தை இழந்தவர்கள் அதனை மீளப் பெறுவதற்காக போராட்டம் நடத்துவார்கள். சமத்துவமின்மையால் ஏற்படும் இந்த ஏற்றத்தாழ்வு சமூக வாழ்க்கையின் அனைத்து அடுக்குகளிலும் பிரதிபலிக்கிறது.

இந்த நிலையில் ஜம்இய்யதுல் உலமா மீதான கடுமையான வசைமாரிகளை ஆராயும் போது ஒரு பிளவுபட்ட சமூகத்தின் தனிச்சிறப்புக்கள் தெளிவாக வெளிப்படும். உண்மையில் இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா தாக்கப்படும் அளவுக்கு வேறு எந்த சமய நிறுவனமும் தாக்கப்படவில்லை. நிந்தனையான , ஆதாரமற்ற, போலியான குற்றச் சாட்டுக்கள் ஜம்இய்யதுல் உலமா மீது மழையாகப் பொழிகின்றன. தீவிரவாதிகள் எனவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் எனவும், இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிப்பதாகவும், ஷரீஆ சட்டத்தை மறைமுகமாக அறிமுகப்படுத்துவதாகவும் இது போன்ற பல அதீத கற்பனையான புனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காலத்துக்குக் காலம் ஜம்இய்யதுல் உலமா மீது சுமத்தப்படுகின்றன. மக்களின் உணர்வுகளை ஈர்க்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைளை அவர்களின் உணர்ச்சிகளை எளிதில் கிளறக் கூடிய பேச்சுக்களுடன் இணைத்து நேரம்பார்த்து அவிழ்த்து விடப்படுகின்றன.

இந்தச் செயற்பாடுகளின் இடையில் கிடைக்கின்ற இடைவேளையில் மற்றுமொரு விடயம் அம்பலமாகின்றது. இந்த ஆணவச் செயற்பாட்டில் ஈடுபடுவர்களின் பண்பாட்டொழுக்கத்தை இது வெளிப்படுத்துகின்றது. அவர்கள் நாட்டுப்பற்றுள்ளவர்களோ உண்மையான தேசியவாதிகளோ அல்ல. அவர்கள் மதகுருக்களாக இருக்கும் நிலையில் அவர்கள் புத்தரின் போதனைகளில் இருந்து திசை மாறிச் சென்றவர்கள் என்ற எண்ணத்தையே அவர்கள் தோற்றுவிக்கின்றனர்.

இலவசக் களிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவின் காடினல் மல்கம் ரஞ்சித் தொடர்பான அறிக்கை தொடர்பில் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பிக்குகளும் எழுப்பிய குரலை எந்தப் பாரபட்சமும் இன்றி ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பின் துணை ஆயர்கள் கூட கொழும்பு மாவட்டத்தின் கத்தோலிக்க மத குருக்களுடன் இணைந்து தங்களது கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.

இன்னொரு பார்வையில், யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சில மதகுருக்கள் தொடர்பில் பாசாங்குத்தனமில்லாமல் தனது வெறுப்பை வெளியிட்ட ஒருவர். சில மோசமான துறவிகளைப் பற்றி அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கூடப் பார்க்காமல் அரசியல்வாதிகளும் மதகுருக்களும் அவர் மீது அவதூறு பரப்பி அவ்வாறான மத குருக்களைப் பாதுகாத்தனர். 

இனத் தேசியவாதிகளும் தீவிர அரசியல்வாதிகளும் அரசியலில் வங்குரோத்தான துறவிகளும் தான் இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை அனுபவ ரீதியான அவதானிப்பு புலப்படுத்துகிறது. தானியத்திலிருந்து பதரை அரைத்து வேறுபடுத்தக் கூடிய பலருக்கு இவர்கள் வாய்க்கு அவல் கொடுக்கிறார்கள். இதிலுள்ள ஆபத்து என்னவென்றால் பெரும்பான்மையான மக்கள் இந்த அபத்தங்களை உள்வாங்கி தங்களுக்குள் திணிக்கப்பட்ட பயப்பிராந்தியை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் பயம் எளிதில் வெறுப்பாக மாறி மக்களை வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.

என்டர் த டிராகன்

சமீபத்தில் அதுரலியே ரதன தேரோவுக்கு வாயினால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது வசனங்களில் துர்வாடையின் அடையாளங்கள் தெரிகின்றன. பொதுமக்களின் கருத்துப்படி அரசாங்கம் அவர் மீது அக்கறை காட்டவி்ல்லை. அவர் ஓரங்கட்டப்படுள்ளார். அவசியலில் அவர் காலாவதியாகி விட்டார். தற்பொழுது அவர் களத்தில் தனது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடி வருகிறார் என்பதே பேச்சாக உள்ளது. அரசியலைப் பொறுத்தவரையில் அவருக்கிருக்கின்ற தெரிவு ஜம்இய்யதுல் உலமாவை கிள்ளிப் பார்ப்பது தான்.  அனைத்துக்கும் மேலாக இந்நாட்களில் குறிப்பாக இனவாத துறவிகளுக்கு முஸ்லிம்களை எதிர்ப்பது பொழுது போக்காக மாறியிருக்கிறது.

என்டர் த டிராகன் (என்று நினைக்கிறேன்) படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில் போட்டி வளையத்தில் அவரை எதிர்த்துச் சண்டை பிடிப்பவர் தனது சக்தியை வெளிக்காட்டும் வகையில் ஒரு மரப்பலகையைத் தூக்கி அதனை கைகளால் கராத்தே பாணியில் உடைத்துக் காட்டுகிறார். அதைப் பார்த்து விட்டு புரூஸ் லீ மரப்பலகைகள் திருப்பித் தாக்காது என்கிறார் அமைதியாக. தனது குத்துச் சண்டைப் பையும் திருப்பித் தாக்காது என்பது ரதன தேரருக்கு நன்றாகத் தெரியும். மேலும் காடினலுக்கோ சில துறவிகளுக்கோ போல ஜம்இய்யதுல் உலமாவுக்காகப் பேசுவதற்கு இங்கு அரசியல்வாதிகளோ ஊடகங்களோ துறவிகளோ முன்வரப் போவதுமில்லை.

அண்டப் புழுகு

பௌத்த மதத்தின் நான்காவது சீலம் முசாவதா எனும் பொய்மை பற்றிப் பேசுகிறது. விரிவாகச் சொல்லப் போனால் இது எல்லா வகையான தவறான தீங்கான பேச்சக்களையும் உள்ளடக்கியது. கண்ணியத்துக்குரிய மதகுருக்கள் விளக்குவதன்படி, இது கடுமையான, பொய்யான, பேராசை அல்லது வெறுப்பால் தூண்டப்பட்ட தீங்கு விளைவிக்கும் பேச்சுக்களைக் குறிக்கும். தவறாக வழிநடத்தும் வாதங்கள், கிண்டல்கள், வன்முறையை, ஆத்திரம், சீற்றம், ஏளனம் என்பவற்றைத் தூண்டுதல்,  பயனற்ற வேதனையைத் தூண்டும் மோசமான வார்த்தைகள் அனைத்தும் இதனுள் அடங்கும்.

ஜம்இய்யதுல் உலமாவுக்கு எதிரான ரதன தேரரின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை, இட்டுக்கட்டப்பட்டவை. பாளி மொழியில் சொல்வதனால் இவை முசாவதா. சிங்களத்தில் சொல்வதானால் பொலொவ பெலென பொரு (பூமியைப் பிளக்கும் பொய்கள்). ஒரு துறவி உச்சாடனம் செய்யும் வாய் வார்த்தைகளில் எல்லாம் மிகவும் மோசமானது. இதனை அவர் ஒரு நாளில் எத்தனை முறை உச்சாடனம் செய்கிறார் ? ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இம்முறை அவர் சம்பத் வங்கியை ஜம்இய்யதுல் உலமா புறக்கணிக்கச் சொன்னதாக கதை கட்டிவிட்டிருக்கிறார். பொய். இது பொய். வடிகட்டின பொய். ஜம்இய்யதுல் உலமா இதனைக் கண்டித்து உடனே மறுப்பறிக்கை வெளியிட்டது.

அதிகமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சீலம்

வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாதையோரங்களிலும் பஞ்சசீலங்கள் பல தடவைகள் மீட்டி மீட்டி ஒலிக்கும் நாட்டில் நான்காவது சீலம் இந்த அளவுக்குத் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அசிங்கமானது. அதிலும் துறவிகளை இதனைத் துஷ்பிரயோகம் செய்வது அருவருப்பானது. காவியுடையால் தன்னைப் போர்த்திக் கொண்டவர்களுக்கு விரும்பத்தகாதது. மதகுருக்கள் நல்லொழுக்கத்தின் தூண்களாக இருக்க வேண்டும். புத்தரின் போதனைகளை ஏற்று நடப்பவர்களாக பாமர மக்கள் அவர்களை பக்தியுடன் நோக்குகிறார்கள். பிக்குகள் தான் மக்களுக்கு புத்தரின் போதனைகளை போதிக்கிறார்கள். அவர்கள் இதன்படி நடக்காத பொழுது அல்லது தாம் போதிப்பதை நடைமுறைப்படுத்திக் காட்டத் தவறும் பொழுது அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். உண்மையில் இதில் கௌரவமான மதகுருக்குகள் விதிவிலக்கானவர்கள்.

பொய்யான தேசியவாத உணர்வினால் தூபமிடப்பட்ட போலியான மத மற்றும் இனவெறிச் சொல்லாடல்களின் சாபங்கள் இந்த நாட்டின் எதிரிகள். இவை தேசியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல். இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். இந்த நாட்டில் சிவில் உணர்வுள்ள மக்களால் மட்டுமே அதற்கு முடிவுகாண முடியும். அதாவது நீங்களும் நானும். கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்தச் சந்தர்ப்பவாத போலியான தேசபக்தர்களின் நாடகங்களை வெறுப்பவர்களே நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

பொய்யான பேச்சை கைவிடல்
பிளவுண்டாக்கும் பேச்சைக் கைவிடல்
அவதூறான பேச்சைக் கைவிடல்
பயனற்ற பேச்சைக் கைவிடல் 
வாயினாலான இந்த நான்கு செயற்பாடுகளாலும் இப்படித்தான் ஒருவர் தூய்மை பெறுகிறார்
அங்குத்த நிகாய – 10 :176

இந்தத் தொடர்ச்சியான விவகாரங்கள் குறித்து சட்டத்தை மதிக்கின்ற குடிமக்கள் தமது குரலை எழுப்ப வேண்டிய நேரம் இதுவல்லவா ? எங்களது குழந்தைகளுக்கு நாம் என்ன தார்மீக விழுமியங்களை விட்டுச் செல்லப் போகிறோம் ?    

மீள்பார்வை

2 கருத்துரைகள்:

அநீதியையும், இனவாதத்தையும் பகிரங்கமாக எதிர்க்காத, தண்டிக்காத அரசாங்கம் அவற்றைப் போஷிப்பவர்களாகவே கருதப்படுவார்.

உலகம் முழுதும் இன துவேஷத்தை அடிப்படை யாகக் கொண்டே அரசியல் நடக்கிறது. இலங்கை இதட்கு விதி விலக்கு அல்ல. உலமாவை மட்டும் தாக்குகின்ற சிங்கள இன துவேஷிகள் இந்து சாமியார்களையோ அல்லது கிறிஸ்தவ பாதிரி மார்களையோ ஏன் தாக்குவதில்லை என்பதை Mr Yosuff எழுத தவறிவிட்டார்.

ACJU 1982 ஆண்டு, அதாவது 38 வருடங்களுக்கு முன்புதான் பதிவு செய்யப் பட்டது. அதில் 21 வருடங்கள் தனி ஒருவரின் சர்வாதிகார ஆட்சின் பிரதிபலன்தான் இன்று முஸ்லீம்கள் அனுபவிக்கிறார்கள்.

சாமியார்களை தொட்டால் ஜெனீவா வரை சென்று விடும். பதியார்களை தொட்டால் முழு உலகத்துக்கும் பதில் சொல்ல வேண்டி வரும். ஆனால் சொரணை கெட்ட சோனியை தொட்டால் கேட்பதட்கு சொரி நாய்க்கூட வராது என்பது துவேஷிகளுக்கு நன்றா தெரியும்.

Post a comment