Header Ads



கட்டாரிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் 7 பேரின் சடலங்கள்


(எம்.மனோசித்ரா)

மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட நிலையில் , அவர்களது சடலங்கள் இன்று  செவ்வாய்கிழமை -07- விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் சுகாதார வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்கிழமை கட்டாரிலிருந்து வந்த விமானத்தில் 7  இலங்கை பிரஜைகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் அவற்றில் ஒரு சடலம் தற்கொலை செய்து கொண்ட நபரொருவருடையது என்றும் மதுக விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று கட்டாரிலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.266 என்ற விஷேட விமானம் மூலம் குறித்த 7 சடலங்களும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நால்வர் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத்தின் வைத்திய பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மார்ச் முதலாம் திகதி இந்த கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உடல்களை நாட்டிற்கு கொண்டுவர கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகியுள்ளது.

கொல்லப்பட்ட மூவரும் களனி , பியகம வீதி , விகாரையை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சடலங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 59 வயதுடைய தந்தையும் அவரது மனைவியான 55 வயதுடைய பெண்ணும் 34 வயதுடைய இவர்களுடைய மகளும் ஆவர். இவர்களது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.