Header Ads



2 ஆவது அலை ஏற்படும்வரை, சுகாதார அமைச்சு பார்த்துக் கொண்டிருக்கிறதா ? மருத்துவ அதிகாரிகள் விசனம்

(எம்.மனோசித்ரா)

நாளொன்றுக்கு முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை 2500 ஆக அதிகரிக்குமாறு பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ள போதிலும் சுகாதார அமைச்சு அதனை கவனத்தில்கொள்ளவில்லை.

அவ்வாறெனில் இரண்டாவது அலை ஏற்படும் வரையில் சுகாதார அமைச்சு பார்த்துக் கொண்டிருக்கிறதா என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே கேள்வியெழுப்பினார்.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்று தோன்றுமளவிற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.

வெலிசறை கடற்படை முகாமில் வைரஸ் தீவிரமாக பரவியமையிலிருந்து பாடமொன்றை கற்றுக் கொள்ளாத நாம் கந்தக்காடு சம்பவத்திலிருந்தேனும் விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் ஹரித அழுத்கே வலியுறுத்தினார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் வைரஸ் பரவலில் இரண்டாவது அலை ஏற்பட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையே நாம் சுகாதார அமைச்சிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் இதனை விடுத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரையும் உபதலைவரையும் பழிவாங்குவதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்களாயின் இரண்டாம் அலைக்கு தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டிய விடயத்தை மறந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் இது பற்றி அறிந்துள்ளாரா என்பது எமக்குத் தெரியாது. சுகாதார அமைச்சரையும் அரசாங்கத்தையும் பழிவாங்குவதற்கான சதி இடம்பெறுகிறது. எனவே தான் வைரஸ் பரவலில் இரண்டாம் அலை பற்றி நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்று நாம் முன்னரே தெரிவித்திருக்கின்றோம். அத்தோடு வைரஸ் பரவல் தீவிரமடையக் கூடிய 4 சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். விமான நிலையம் , பொதுப் போக்குவரத்து , தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் என்பன எம்மால் கூறப்பட்ட அந்த 4 சந்தர்ப்பங்களாகும். இந்த 4 சந்தர்ப்பங்களில் வைரஸ் பரவல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் ஏற்கனவே எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கிடையில் தான் அண்மையில் ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நோயாளர் ஒருவர் இனங்காணப்பட்டார். எனினும் அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டமை அதிஷ்டவசமானதாகும். ஜிந்துபிட்டியிலிருந்த நபருக்கு தொற்று ஏற்பட்டவுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் நோயாளர்கள் யாரும் இனங்காணப்படாமையால் அவர்கள் மீள வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இங்கு தொடர்ந்தும் அபாய நிலைமை காணப்படுகிறது. இதனை இவ்வாறே விட முடியாது.

அந்த அபாயத்தை புரிந்து கொள்ளும் வரை எம்மால் இந்த சவாலை வெற்றி கொள்ள முடியாது. ஏதேனுமொரு இடத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளங்காணப்பட முடியும். இறப்பர் பந்தொன்றை நீரில் மறைத்தது போன்றே தற்போதைய செயற்பாடுகள் உள்ளன. இவற்றை மறைக்க முடியாது. கொரோனா பரவல் முழுமையாக நீங்க எவ்வளவு காலம் எடுக்கும் என்று எம்மால் கூற முடியாது. ஒன்று அல்லது இரண்டு வருடமும் ஆகலாம். ஒரு தடவை பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்து அதில் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் தொற்று இல்லை என்று கூறும் தவறான நிலைப்பாட்டை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தக் கூடாது.

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குறைந்தது மீண்டும் ஒரு தடவையாவது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களை சமூகத்தினுள் சரளமாக நடமாடச் செய்ய முடியுமா என்று தீர்மானிக்க முடியும். ஜிந்துபிட்டி மற்றும் வெலிக்கடை சம்பவங்கள் மூலம் அபாய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. இவை தொடர்பில் நாம் பல முறை வலியுறுத்தியிருக்கின்றோம். எனினும் தொழிநுட்ப குழுவை கூட்டுமாறு எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கூட செவிசாய்க்கவில்லை.

தற்போது எடுக்கும் தீர்மானங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கோ அல்லது வேறு விஷேட நிபுணர்களுக்கோ தனித்து எடுக்க முடியாது. தொழிநுட்ப ரீதியான தீர்மானங்களை அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய தொழிநுட்ப குழு அமைக்கப்பட்டது. எனினும் ஒருமாதம் கடந்துள்ள போதிலும் அந்த குழு கூட்டப்படவில்லை. அவ்வாறெனில் இரண்டாம் அலை ஏற்படும் வரை சுகாதார அமைச்சு பார்த்துக் கொண்டிருக்கிறதா ? அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக சதி இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. கடந்த காலத்தில் விட்ட தவறுகளிலிருந்தேனும் பாடம் கற்றுக் கொள்ள நாம் முற்படலில்லை.

கடந்த காலத்தில் ஏற்பட தவறுகளை இனங்கண்டு அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும். உண்மை நிலைமையையும் அபாய நிலைமையையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். உண்மையான அபாய நிலைமைக் கூறாது பாதுகாப்பு வழிமுறைகளை மாத்திரம் கூறினால் மக்களை அவற்றை கவனத்தில் கொள்ள மாட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் வெலிசறை கடற்படை முகாமில் வைரஸ் பரவல் நிலைமையாகும். அங்கு முதலாவது நோயாளி இனங்காணப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் வெள்ளிக்கிழமையும் ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டார். எனவே எந்த இடத்தில் தவறிழைக்கப்பட்டது என்பதை தேட வேண்டும்.

வெலிசறை கடற்படை முகாமில் வைரஸ் பரவியமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. வெலிசறை சம்பவத்திலிருந்து கற்றுக்கொள்ளாத பாடத்தை கந்தக்காடு சம்பவத்திலிருந்தேனும் கற்றுக்கொள்வோம். கந்தக்காடு புனர்வாழ்வளிக்கும் நிலையத்தில் முறையாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டிருந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது. பாரதூரமான பிரச்சினை எம்முன்னாள் தோன்றியுள்ள போதிலும் தற்போது அதற்கான தீர்வை முன்வைக்காமலிருப்பது கந்தக்காட்டை போன்று மீண்டுமொரு இடத்தை இனங்காண வேண்டியேற்படும்.

எனவே தொற்று நோயியல் பிரிவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளையேனும் சுகாதார அமைச்சர் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்கள் வீடுகளுக்கு அனுபப்படுகின்றார்களா ? வீடுகளுக்கு அனுப்பப்பட்டால் அங்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்களா ? அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் நாட்டில் கொரோனா தொற்று இருந்ததா இல்லையா என்பதை மறந்து தற்போது ஆளுங்கட்சி , எதிர்க்கட்சிகள் என்பன தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். எனவே இரண்டாம் அலை ஏற்படாமல் தவிர்ப்பது அத்தியாவசியமானதாகும். காரணம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் இரண்டாம் அலை ஏற்படுமானால் ஜனநாயகம், பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கப் போகும் தீர்மானம் யாது ? இரண்டாம் அலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அரசியல்வாதிகள் , இராணுவம் , பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரது அர்ப்பணிப்பு அத்தியாவசியமானதாகும். இவற்றில் ஏதேனுமொன்று பலமிலந்தால் அல்லது சேவையிலிருந்து நீங்கினால் அன்று இரண்டாம் அலை உறுதியாகும் என்றார். 

1 comment:

  1. சுகாதார அமைச்சும் மருத்துவ சங்கமும் ஒன்றாக பயணிக்கும்வரை நம்ம நாடு உருப்படாது.

    ReplyDelete

Powered by Blogger.