Header Ads



கொரோனா வைரஸின் 2 வது அலையை, தடுக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கும் இருக்கிறது - கரு

(நா.தனுஜா)

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் தமது அனைத்துவித செயற்பாடுகளையும் உயர் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, கொவிட் - 19 வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கும் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அங்கு கைதிகளைப் பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், சிறைச்சாலையிலும் கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலும் பலரைத் தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கும் கரு ஜயசூரிய, இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

தற்போது சிறைக்கைதி ஒருவர் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், அனைத்து செயற்பாடுகளின் போதும் மக்கள் உயர் சுகாதாரப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அவ்வப்போது கைகளைக் கழுவுவதும், முகக்கவசம் அணிவதும் வெறுமனே கட்டாயத்தின்பேரில் செய்கின்ற ஓர் சடங்கு போன்று இருக்கக்கூடாது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுப்பது அரசாங்கத்திற்கும், மக்களுக்குமான பொதுவான பொறுப்பாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

No comments

Powered by Blogger.