July 02, 2020

கொரோனாவின் 2-வது அலை வீசினால் என்ன நடக்கும்..? - அதிர்ச்சி தகவல்


கொரோனாவின் 2-வது அலை வீசினால், அது சர்வதேச அளவில் 34 கோடி முழு நேர வேலைகளை பறித்து விடும் ஆபத்து இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இது மட்டுமல்ல, கொரோனா பரவலை தடுப்பதற்காக உலகளவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகளால் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் காரணாக கோடிக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு பறிபோய் உள்ளது. கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். உலக பொருளாதாரம் மீட்டெடுக்கப்படுவதில் நிச்சயமற்ற நிலைமையே தொடர்கிறது.

கொரோனாவின் 2-வது அலை

இப்போது பல நாடுகளும் தளர்வுகளை அறிவித்து பொருளாதார நடவடிக்கைகளை திறந்த விட்டிருக்கிற தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எழுச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த நாடுகளில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அப்படி கொரோனாவின் 2-வது அலை வீசினால், அது சர்வதேச அளவில் 34 கோடி முழு நேர வேலைகளை பறித்து விடும் ஆபத்து இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு மானிட்டர் அறிக்கை எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அது பற்றிய ஒரு அலசல்...

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மானிட்டரின் 5-வது பதிப்பு அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியால், உலகளாவிய தொழிலாளர் சந்தையின் மீட்பு இந்த ஆண்டில் நிச்சயமற்றதாகவும், முழுமையற்றதாகவும் இருக்கும் என கணித்து கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில், உலகளாவிய வேலை நேரத்தில் 14 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 40 கோடி முழு நேர வேலை இழப்புக்கு சமம் ஆகும்.

* இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகம் முழுவதும் இழந்த வேலை நேரத்தின் அளவு, முன்பு மதிப்பிட்டதை விட மோசமாக இருந்தது.

* இரண்டாவது பாதியில் தொழிலாளர் சந்தை வேலை வாய்ப்புகளால் மீட்டெடுக்கப்படுவது னன்பது நிச்சயமற்றதாகவே இருக்கிறது. ஒரு வேளை சிறப்பான நிலை ஏற்பட்டால்கூட, அது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு செல்வதற்கு போதுமானதாக இருக்காது.

* அடிப்படை மாதிரியானது, தற்போதுள்ள கணிப்புகளுக்கு ஏற்ப, பொருளாதார நடவடிக்கைகளின் மீட்பு, பணியிட கட்டுப்பாடுகள் மீதான தளர்வு, நுகர்வில் ஏற்பட்டுள்ள மீட்பு, முதலீட்டில் ஏற்பட்டுள்ள மீட்பு ஆகியவை 4.9 சதவீத வேலை நேர சரிவை காட்டுகிறது. இது 14 கோடி முழு நேர வேலைக்கு சமமானது.

* 2019-ம் ஆண்டின் கடைசி காலாண்டுடன் ஒப்பிடும்போது அவநம்பிக்கையான சூழலில், 2020- ஆண்டின் இரண்டாவது பாதியில் நிலைமை, இரண்டாவது காலாண்டில் இருந்தது போலவே சவாலாக இருக்கும். சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட கொள்கை பதிலளிப்புகளை கொண்டிருந்தாலும் கூட, உலகளாவிய வேலை நேர இழப்பு என்பது 11.9 சதவீத இழப்பை சந்திக்கும். இது 34 கோடி முழு நேர வேலை இழப்புக்கு சமமானது ஆகும்.

* அவநம்பிக்கையான சூழ்நிலை, கொரோனாவின் 2-வது அலை தொற்று மற்றும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மந்தமாக்கி விடும்.

* நம்பிக்கையான சூழ்நிலையில், தொழிலாளர்கள் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குகின்றன என்கிறபோது, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். விதிவிலக்கான வேகமான மீட்பின்போது, உலகளாவிய வேலை நேர இழப்பு 1.2 சதவீதமாக (3.4 கோடி முழு நேர வேலை வாய்ப்பு) குறையும்.

* அடுத்த 6 மாதங்களில் தொழிலாளர் சந்தை மீட்பு சாத்தியமான சூழலில், பொது முடக்கம் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட உலகளாவிய வேலை நிலைமையை சிறந்த வடிவத்தில் யாரும் பார்க்க முடியவில்லை. எனவேதான் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் சிறந்த சூழ்நிலைகளில் கூட, நிச்சயமற்ற, முழுமையற்ற மீட்பை பற்றி நாங்கள் பேச வேண்டியதாகிறது என்கிறார் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கய் ரைடர்.

* புதிய புள்ளி விவரங்கள் பல பிராந்தியங்களில் குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் கடந்த பல வாரங்களாகவே மோசமான நிலைமையையே பிரதிபலிக்கின்றன. பிராந்திய அளவில் இரண்டாவது காலாண்டில் பல நாடுகளிலும் ஏற்பட்டுள்ள வேலை நேர இழப்பு பட்டியல் இது-

அமெரிக்கா 18.3 சதவீதம்

ஐரோப்பா 13.9 சதவீதம்

மத்திய ஆசியா 13.9 சதவீதம்

ஆசிய பசிபிக் 13.5 சதவீதம்

அரபு நாடுகள் 13.2 சதவீதம்

ஆப்பிரிக்கா 12.1 சதவீதம்

* கொரோனா வைரஸ் தொற்று நோயல் பெண் தொழிலாளர்கள் விகிதாசாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது சமீப பத்தாண்டுகளாக ஏற்பட்டு வந்த பாலின சமத்துவத்தில் முன்னேற்றத்தை இழக்கிற ஆபத்தை உருவாக்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் முதல் அலையை தாங்க முடியாமல் மனித குலம் திணறி வருகிற வேளையில் 2-வது அலை வீசினால் அது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்பது தெளிவாகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை 100-க்கு 100 யாராலும் சரியாக கணித்து விட முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a comment