Header Ads



சிறைச்சாலைகளில் 1102 தொலைபேசிகள், 688 சிம் அட்டைகள் கண்டுபிடிப்பு


நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, 1102 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறை அத்தியட்சகர்கள் மற்றும் தலைமை சிறைக் காவலர்களின் வழிநடத்தலில் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இதன்போது, 688 சிம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 1,310 சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

சுற்றிவளைப்புகளின் போது அதிகக் கையடக்க தொலைபேசிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 277 கையடக்கத் தொலைபேசிகளும் 132 சிம் அட்டைகளும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான 286 மின்கலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 203 கையடக்கத் தொலைபேசிகளும் 144 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 199 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து 125 சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, புதிய மெகசின் சிறைச்சாலையிலிருந்து 133 கையடக்கத் தொலைபேசிகளும், 108 சிம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.