Header Ads



இரத்தினபுரியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற 100 வீத வாய்ப்புக்கள் உள்ளன - வேட்பாளர் ருஷ்தி ஹபீப்


எம்.எல்.எஸ்.முஹம்மத்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகம் சார்பாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறாததால்   தீர்வு காணப்படாத பல சமூகப் பிரச்சினைகளை  இம்மாவட்ட  தமிழ் மற்றும்  முஸ்லிம்  மக்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றனர் என இரத்தினபுரி மாவட்ட  ஜக்கிய தேசியக் கட்சி  வேட்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

இரத்தினபுரி சாரா வரவேற்பு மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்ற இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சமூக புத்திஜீவிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில் 

இரத்தினபுரி மாவட்டம் மூவின மக்களும்  ஒற்றுமையுடன் வாழும்  சமாதானம் நிறைந்த வளமான ஒரு மாவட்டம்.எனினும் சிறுபான்மை சமூகம் பொருளாதார ரீதியிலும்,கல்வி அபிவிருத்தியிலும் மற்றும்  வேலை வாய்ப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும்  பாரிய பின்னடைவையே எதிர் நோக்கியுள்ளனர்.
இம்மக்களின் வாக்குப் பலத்தின் மூலம் பாராளுமன்றம் சென்ற சிங்களப் பிரதிநிதிகளால் சிறுபான்மையின மக்களின்  பிரச்சினைகள்  எதுவும் தீர்க்கப்படவில்லை.

ஆகக் குறைந்த பட்சம் இரத்தினபுரி  மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையையாவது நிவர்த்தி செய்ய இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவில்லை.இதனால் திறமைகள் பல இருந்தும் பல மாணவர்களுக்கு தாம் விரும்பும் துறையில் உயர் கல்வியை தொடர முடியாத அவல நிலையே இன்னும் தொடர்கிறது.

இதுபோன்றுதான் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வரும்   இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களுக்கும் பல்வேறுபட்ட  பிரச்சினைகள் உள்ளன.

பெரும்பாலான  தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இன்னும் வீட்டுரிமைகள் வழங்கப்படவில்லை.இன்றும்  இவர்கள் 10 அடிகள் கொண்ட லயின் அறைகளில்தான் அவர்களின்  குடும்ப வாழ்கை தொடர்கிறது.
இன்னும்  சில தோட்டங்களில்  வசிக்கும் இம்மக்கள்  பல ஆண்டுகளாக சுத்தமான குடிநீருக்காக கணவு காண்கின்றனர்.சில பொது போக்குவரத்து வசதிகள் இம்மக்களுக்கு இல்லாததால் தினமும் பாடசாலைகள் செல்லும் சிறுபிள்ளைகள் மற்றும்  வயோதிபர்கள் உட்பட கர்பினித் தாய்மார்கள்கூட பல மைல்கள் நடந்தே பயணிக்கின்றனர்.

எமது நாட்டின் மொத்த தேசிய உற்பத்திற்கான முக்கிய  பங்காளர்களாகவுள்ள இத்தோட்ட  தொழிலாளர்களின் வருமானம்  மாத்திரமின்றி சுகாதாரம் உட்பட அடிப்படை சட்ட உரிமைகளை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்களை இம்மக்கள் நாளாந்தம் எதிர் கொண்டு வருகின்றனர்.

எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் இரத்தினபுரி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இன்னும் அந்த உரிமை பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கள்  இல்லை.

மற்றும் சில சந்தர்ப்பங்களில் இனவாதம் மதவாதம் என்ற அடிப்படைகளில்கூட இம்மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள்  பல்வேறு நெருக்கதல்களையும் தாக்குதல்களையும் சிந்தித்தும் வருகின்றனர்.

மேற்படி அனைத்துப்   பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும்.மற்றும் சில சமூகப் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக  தீர்வுகள் காணப்பட வேண்டும்.இன்னும் சில பிரச்சினைகளுக்கு நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் கட்டம் கட்டமாக தீர்வுகள் காணப்பட வேண்டும்.

கடந்த இரண்டு  தசாப்தங்களுக்கும் மேலாக சட்டத் துறையிலும் ,சமூக நல்லிணக்க செயற்பாடுகளிலும் மிக முனைப்புடன்  ஈடுபட்டு வரும் என்னால் இரத்தினபுரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் இறைவனின் உதவியுடன் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையும் தைரியமும் எனக்கிருக்கிறது எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

வேட்பாளர்    சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையில் 

நான் ஜக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டாலும் நான் கட்சி சார்பான அரசியல் பிரமுகர் அல்ல.நான் கட்சியை ஒருபோதும் மார்க்கமாக நினைக்கவில்லை.எனது சமூகப் பணிக்கான ஒரு ஏணியாக மாத்தரமே அதனை நான் நோக்குகிறேன்.நான் அரசியல் ஊடாக பணம் உழைக்க வேண்டிய தேவையும் எனக்கில்லை. எந்த அவசியமும் இல்லை. எனக்குரிய தேர்தல் வெற்றி வாய்ப்புகள் தொடர்பில் நீண்ட ஆய்வுகளின் பின்னர்தான் போட்டியிட இணக்கம் தெரிவித்தேன். 

உங்களின் பெறுமதியான வாக்கை நீங்கள் விரும்பும் ஒருவருக்கே வழங்குங்கள்.அதுவே தேர்தல் ஜனநாயகமும் ஆகும்.எனினும் அதற்கு முன் நீங்கள் ஏன் அவருக்கு வாக்களிக்களிக்கிறீர்கள் என்பது பற்றியும்,அவரால் உங்கள் சமூகத் தேவையை நிறைவு செய்து தர முடியுமா?அவர் அதற்கு பொருத்தமானவரா?அவர் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இருக்கிறதா?என்பது தொடர்பாகவும் ஆழமாக சிந்தித்து தீர்மானம் எடுங்கள்.

அப்போதுதான் உங்கள் வாக்கு உண்மையான நேர்மையான மாற்றத்திற்கான பெறுமதியான ஒரு வாக்காக கருதப்படும்.

குறிப்பாக இரத்தினபுரி  மாவட்ட தமிழ் பேசும் சிறுபான்மை சமூகமாகிய நாம் எமது வாக்குகள் தொடர்பாக மிகத் தெளிவான சிந்தனையுடன் செயற்பட கடமைப்பட்டிருக்கிறோம்.

இரத்தினபுரி மாவட்டத்தின்  தற்போதைய தேர்தல் கள நிலவரங்களின் அடிப்படையில் நோக்குகின்ற போது ஜக்கிய தேசியக் கட்சி ஊடாக மாத்திரம்தான் சிறுபான்மை சமூக பிரதிநிதித்தவம் ஒன்றினை அல்லது முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஒன்றினை பெறுவதற்கான நூறு சதவீத வாய்ப்புக்கள் உள்ளன.பொதுஜென பெரமுனவில் எந்தவொரு சிறுபான்மை சமூக வேட்பாளரும் நிறுத்தப்பட வில்லை.மாறாக ஜக்கிய மக்கள் சக்தியில் சிறுபான்மை சமூகம் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த இருவரும் மிகச் செல்வாக்குள்ள பல முன்னாள் அமைச்சர்களையும் விட கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்றால் மாத்திரம்தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு  இருக்கிறது.

ஆனால்  நான் போட்டியிடும் ஜக்கிய தேசியக்   கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் எந்தவொரு செல்வாக்குமுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் நிறுத்தப்பட வில்லை.

எனினும் செல்வாக்கு மிக்க  ஜனநாயக சிந்தனை கொண்ட  மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒர் பழைய கட்சி என்ற வகையில் ஜக்கிய தேசியக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் நிச்சயம் கிடைக்கத்தான் உள்ளன.ஆனால் அதனை இரத்தினபுரி மாவட்ட சிறுபான்மை சமூகத்தினுடைய பாராளுமன்ற பிரதிநிதித்வத்திற்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்வது உங்கள் அனைவருடைய சமூகக் கடப்பாடும் பொறுப்புமாகும் என நான் நினைக்கிறேன் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் சமயப் பெரியார்கள்,கல்விமான்கள்,இரத்தினபுரி பிரதேச
பள்ளிவாசல் நிர்வாகிகள்,மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,வர்த்தகர்கள் உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.