Header Ads



UNP ஆட்சியமைக்க முயற்சிக்கும்போது, ஐக்கிய மக்கள் சக்தி சிறிகொத்தவின் அதிகாரத்தை பெற முயற்சிக்கின்றது - அர்ஜுனா

ஐக்கிய தேசிய கட்சி பொதுத் தேர்தலில் அதிகாரத்தை பெற்று ஆட்சியமைக்க முயற்சிக்கும்போது ஐக்கிய மக்கள் சக்தி சிறிகொத்தவின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது.

இதன் மூலம் இவர்களின் நோக்கத்தை உணர்ந்துகொள்ள முடியும். அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மக்கள் விரக்தியுற்றிருக்கின்றனர்.

அதன் வெளிப்பாடை எதிர்வரும் தேர்தலில் தெரிந்துகொள்ளலாம் என ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்ட வேட்பாளர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார காரியாலய திறப்பு நிகழ்வு இன்று பியகம பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று ஆட்சியமைக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில் எம்மில் இருந்து பிரிந்து சென்று கூட்டணி அமைத்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் தேர்தலுக்கு பின்னர் எமது கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக தெரிவிக்கின்றனர். தேர்தலில் வெற்றிபெற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நோக்கம் இவர்களிடம் இல்லை. மாறாக கட்சிக்குள் இருக்கும் அதிகாரங்களை கைபற்றுவதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.
அத்துடன் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுபவர்களின் வேட்பாளர் பட்டியலை நானும்  ருவன் விஜேவர்த்தனவுமே தயாரித்தோம். இதன்போது கட்சியில் இருந்து நீக்குவதற்கு இருந்தவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதன் மூலம் இந்தமுறை தேர்தலில் போட்டியிட சிறந்த அணியொன்றை தெரிவுசெய்ய முடியுமாகி இருந்தது. மோசடிக்காரர்கள், ஊழல் வாதிகள் யாரும் எமது அணியில் இல்லை.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி பியகம பிரதேச சபை உறுப்பினர்கள் 15பேரும் எமக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றனர். கட்சிக்கு ஆதரவான எவரும் கட்சியை விட்டு செல்லமாட்டார்கள். அதனால் கட்சியை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். கட்சி தலைவர்கள் வரலாம் போகலாம். அதில் மாற்றங்கள் இடம்பெறலாம். ஆனால் கட்சி ஆதரவாளர்கள் ஒருபோதும் கட்சியை விட்டு செல்லமாட்டார்கள்.ஐக்கிய தேசிய கட்சி ஒரு குடும்பத்துக்கோ தனிநபருக்கோ வரைறுக்கப்பட்ட கட்சியல்ல.
மேலும் 2025 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒருவரை வேட்பாளராக நியமித்து வெற்றிபெறச்செய்யவேண்டும். அதற்கான அடித்தலமாக இந்த தேர்தலை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் மக்களுக்கு தேவையான பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தோம். தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்திக்கொடுத்தோம்.
ஆனால் இன்று மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றது. அதிகமானவர்களின் தொழில் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. அதனால்  அரசாங்கத்தின் மீது மக்களுக்கு விரக்தி ஏற்பட்டிருக்கின்றது. அதன் வெளிப்பாடை எதிர்வரும் தேர்தலில் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

1 comment:

Powered by Blogger.