Header Ads



வீரவங்சவின் தேசப்பற்று வெறும் கோஷம் மட்டுமே, UNP டன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றவரே அவர் - குமார் குணரட்னம்

ராஜபக்ச அணியின் சார்பில் தற்போது தேசப்பற்று தொடர்பாக கோஷங்களை எழுப்புவதில் விமல் வீரவங்ச பிரபலமானவராக இருந்தாலும் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார் என முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டளவில் மக்கள் விடுதலை முன்னணிக்குள் கொள்கை ரீதியான மோதல்கள் காணப்பட்டன. அரசாங்கத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்பது மற்றும் சுயாதீனமாக செயற்படுவது என்ற கருத்துக்கள் கட்சிக்குள் காணப்பட்டன.

நாங்கள் தொடர்ந்தும் சுயாதீனமான இடதுசாரி அமைப்பாக செயற்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்தோம். விமல் வீரவங்ச உள்ளிட்டோர் முதலாளித்துவ அரசாங்கத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்தனர்.

கேள்வி - என்ன, எந்த கட்சியுடன் கூட்டணி அரசாங்கம் அமைப்பது தொடர்பான கொள்கைகள் காணப்பட்டன?

பதில் - இதனை நான் முதல் முறையாக கூறுகின்றேன். மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து செயற்படுகிறார் என்றுதானே தற்போது விமல் வீரவங்ச பிரபலமாக இருக்கின்றார். அவர் அரசியலை விட தேசப்பற்று தொடர்பான கோஷங்களை உச்சரிப்பதில் பிரபலமாக இருக்கின்றார். எனினும் இந்த விமல் வீரவங்ச முதலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அரசியலை ஆரம்பிக்க முயற்சித்தார்.

2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் எமக்கு நாடாளுமன்றத்தில் 10 ஆசனங்கள் கிடைத்தும், 2001 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் வீழ்ச்சியடையும் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என்ற யோசனையை விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபையில் முதலில் முன்வைத்தார். அரசியல் சபையில் விடயங்களை முன்வைத்து அந்த யோசனையை நாங்கள் தோற்கடித்தோம்.

இதன் பின்னரே முற்றாக மகிந்த ராஜபக்ச பக்கம் திரும்பினார். முதலில் அது சந்திரிகா பண்டாரநாயக்க ஊடாக நடந்தது. பின்னர் மகிந்த ராஜபக்ச. இவர்களின் பிரதான நோக்கம் பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பதே தவிர தேசப்பற்று என்பதெல்லாம் வெறும் கோஷங்கள் மாத்திரமே எனவும் குமார் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.