June 23, 2020

உலகில் மிக கொடூரமான நாடான அமெரிக்காவுடன் MCC ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்

(இராஜதுரை ஹஷான்)

உலகில்  மிக   கொடூரமான  நாடான அமெரிக்காவுடன் எம். சி. சி  ஒப்பந்தத்தை  கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.   இந்த  ஒப்பந்தம் இலங்கையில் இறையாண்மைக்கும், தேசிய  பாதுகாப்புக்கும் முரணானது என்பதை ஜனாதிபதி  அமெரிக்க தேசிய  பாதுகாப்பு தரப்பினருக்கு  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடிபணிய வேண்டிய தேவை  எமக்கு கிடையாது  என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர்    உதய கம்மன்பில தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தல் முடிந்தவுடன் அரசாங்கம் அமெரிக்காவுடன் எம். சி. சி.ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதாக  எதிர் தரப்பினர்  குறிப்பிட்டுக்  கொண்டு   அரசியல் பிரசாரம்  செய்கிறார்கள்.  இந்த ஒப்பந்தம் இலங்கையின்  இறையாண்மைக்கு    முரணானது என்பதை  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தெளிவாக  எடுத்துக்காட்டினோம்.

இதன்  பிரகாரம்    நாட்டுக்கு எதிராக  ஒப்பந்தங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க  முடியாது. என   ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  கொள்கை  பிரகடனத்தில் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடனான எம். சி. சி ஒப்பந்தத்தை இரகசியமான முறையில் கைச்சாத்திட்டு கொள்ளும் தேவை கடந்த  அரசாங்கத்திற்கு குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நிதியமைச்சர்  மங்கள சமரவீரவிற்கு இருந்தது.  ஏப்ரல் 21  குண்டுத்தாக்குதலை தொடர்ந்து   இந்த ஒப்பந்தம் இரகசியமான முறையில் கைச்சாத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்  அதற்கு  அப்போதைய எதிர்க்கட்சியாக செயற்பட்ட பொதுஜன பெரமுன  இடமளிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஆட்சி  மாற்றம் ஏற்பட்டது.  பல்வேறு தரப்பினரது   விமர்சனங்களுக்குள்ளான எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி  கடந்த ஜனவரி மாதம்  லலித் ஸ்ரீ  குணவர்தன தலைமையில்   பல்கைலைக்கழக  வேந்தர்கள், துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்தார்.    குழுவின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எம். சி. சி. ஒப்பந்தத்தில்  உள்ளடக்கப்பட்டுள்ள   விடயங்கள் இலங்கையின்  தேசிய  பாதுகாப்பிற்கும்,  இறையாண்மைக்கும்  முரணானது என்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   என்பதை ஜனாதிபதி அமெரிக்காவின் தேசிய   பாதுகாப்பு  தரப்பினருக்கு எடுத்துரைத்துள்ளார்.  குழுவின் அறிக்கையின்  முதல் பகுதியே முரண்பட்டதாக அமையும் போது முழுமையான உள்ளடக்கம் எவ்வாறு அமையும் என்பதை யூகித்துக்கொள்ள  முடியும்.

கொரோனா வைரஸ் பரலலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு மாத்திரமே   இலங்கை அரசாங்கம் தற்போது   கவனம் செலுத்தி வருகிறது. ஆகவே எம்.சி. சி ஒப்பந்தம் தொடர்பில் தற்போது எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது. என்று அரசாங்கம் அமெரிக்காவிற்கு அறிவித்தது. இதற்கமைய ஆகஸ்ட 31 ஆம் திகதிக்கு பின்னர்  எம். சி. சி  ஒப்பந்தம் தொடர்பில் கவனம் செலுத்தலாம் என   அமெரிக்கா குறிப்பிட்டது.  இவ்வாறான    பின்னணியில் பொதுத்தேர்தலுக்கான திகதி ஆகஸ்ட் 5  என தேர்தல் ஆணைக்குழு  அறிவித்தது. இதனையே தற்போது  எதிர்   அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு பின்னர்  எம். சி. சி ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

உலகில் மிகவும் கொடூரமான நாடாக அமெரிக்கா    உள்ளது.   இராணுவம் அடக்குமுறை  , இராஜதந்திர கொள்கை ஆகியவை அமெரிக்காவின்  அரச  கொள்கையாகும்.

அமெரிக்கா ஒரு நாட்டுக்கு நேசக்கரம்  நீட்டுகின்றது என்றால்  அந்நாட்டின் அழிவு ஆரம்பம் என்றே  கருத முடியும்.  ஆகவே   எமது நாட்டின் சுயாதீனத்தன்மையை   விட்டுக் கொடுத்து அமெரிக்காவிற்கு அடிபணிய வேண்டிய தேவை  எமக்கு கிடையாது.

அமெரிக்காவுடன் செய்துக் கொள்ளும் ஒப்பந்தங்கள்   மாறுப்பட்ட வழிமுறைகளில் ஒரு  நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பினை   ஏற்படுத்தும் .  கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசாங்கம்  முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில்  அமெரிக்க இராஜதந்திர ஒருவர்  விமான  நிலையத்தில் பி. சி. ஆ;ர் பரிசோதனையை புறக்கணித்தமை அவர்களின் சர்வாதிகார தன்மையினை  வெளிப்படுத்தியது. ஆகவே  எக்காரணிகளுக்காகவும் அரசாங்கம்  எம். சி. சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாது.என்பதை மிக உறுதியாகவும், பொறுப்புடனும் குறிப்பிட்டுக்கொள்கிறோம்   என்றார்.

0 கருத்துரைகள்:

Post a comment