Header Ads



சங்ககாரவுக்கு சர்வதேச உயர் பதவி, தட்டிப்பறிக்க திட்டமா..? அஜித் பெரேரா தகவல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கவிருக்கும் வாய்ப்பை தட்டிப்பறிப்பதற்கு திட்டமிடப்படுகின்றதா என சேந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜித் பி பெரேரா இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2011 உலக கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பொருட்படுத்த வேண்டாம் என்று பிரதமர் கோரியுள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டை வெறுமனே விட்டுவிட முடியாது . இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் அப்போதைய விளையாட்டுதுறை அமைச்சராக மஹிந்தாநந்தவே இருந்தார்.

அவர் அப்போது ஒன்றும் கூறாது 10 வருடங்கள் கழிந்த பின்னர் இவ்வாறு கூறுவதானது குமார் சங்ககாரவுக்கு சர்வதேச மத்தியில் இருக்கும் வரவேற்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு எண்ணமாகவும் இருக்கலாம்.

ஏன் என்றால் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போட்டியின் போது இலங்கை அணியின் தலைவராக குமார் சங்கக்காரவே செயற்பட்டிருந்தார்.

கிரிக்கெட் விளையாட்டு துறையின் ஊடாகவே சர்வதேச மத்தியில் இலங்கைக்கு பெரும் வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. சங்ககராவிற்கும் சர்வதேச மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது.

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் அவர் கொண்டுள்ள தனிப்பட்ட திறமை மற்றும் நிர்வாகத்துறை திறமையின் காரணமாக அவரை மார்லிபோர்ட் கிரிக்கட் கழகம் இரு முறை தலைவராக தெரிவு செய்திருந்தது.

தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையும் அதன் தலைவராக சங்ககாரவை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்த பதவியை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் அவருடன் போட்டியில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த வேறொரு நபருக்கு அந்த சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்படுகின்றதா?

இதற்காகவா சங்ககாரவின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மஹிந்தாநந்த இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தாரா? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.