Header Ads



சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்திய மாணவருக்கு உதவிய துபாய் ஆட்சியாளர்

இந்தியாவை சேர்ந்த பாஸ்கர் சின்ஹா-இந்திரா தர்சவுத்ரி தம்பதி துபாயில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் பிர்த்விக் சின்ஹா (வயது 15). துபாயில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் இவருக்கு நீண்ட நாட்களாக சிறுநீரக பிரச்சினை இருந்து வருகிறது.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கின் போது, கத்தார் சென்ற பாஸ்கர் சின்ஹா, அங்கேயே சிக்கி கொண்டார். அவர் மட்டுமே தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய முடியும்.

இதனால் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும், போதிய பண வசதி இல்லாமலும் பிர்த்விக் சின்ஹாவின் குடும்பத்தினர் சிரமப்பட்டனர். இதுபற்றி துபாய் ஆட்சியாளரின் கவனத்திற்கு அந்த மாணவனின் பள்ளி முதல்வர் மற்றும் நண்பர்கள் கொண்டுசென்றனர்.

இதனையடுத்து ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அந்த மாணவருக்கு வந்தது. அதில் அன்பிற்குரிய பிரித்விக், நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது போல் உணருங்கள். மேலும் பாதுகாப்பான கரங்களுடன் இருக்கிறீர்கள்.

உங்களது சிறப்பான உடல் நலத்துக்கும், பாதுகாப்புக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறேன். இது என்னால் இயன்ற சிறிய உதவி என குறிப்பிடப்பட்ட கடிதத்துடன், பூங்கொத்து, ஒரு ஐபேடு ஆகியவை நேற்று முன்தினம் வந்துள்ளது.

இது குறித்து அந்த மாணவரின் தாயார் இந்திரா தர்சவுத்ரி கூறியதாவது:-

நாங்கள் இதுவரை இதுபோன்ற செயல்களை கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது இத்தகைய உதவி எனது மகனுக்கு நடந்துள்ளது. இந்த உதவியை செய்துள்ள துபாய் ஆட்சியாளருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். இந்த உதவியானது எனக்கு பெரிதும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

தனது கணவர் கத்தார் நாட்டில் இருந்து இந்தியா சென்று அங்கிருந்து அமீரகம் திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். இதன் காரணமான அவர் நேற்று முன்தினம் துபாய் திரும்பினார். அவர் வர காரணமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் மாணவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் அல் ஜலீலா அறக்கட்டளை ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவரது தந்தையும் வந்து விட்டதால் விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றார். மாணவரும் தான் பேச்சிழந்து நிற்பதாக ஆட்சியாளரின் உதவி குறித்து உருக்கமுடன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.