Header Ads



மங்களவின் தீர்மானத்திற்கு நாம் மதிப்பளிக்கின்றோம் - ஐதேக. யுடன் இணையமாறு அழைப்பு - நவீன்

(நா.தனுஜா)

மங்கள சமரவீர அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறப்போவதாகத் தெரிவிக்கவில்லை. அவர் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றே கூறியிருக்கிறார்.

அவருடைய இந்தத் தனிப்பட்ட தீர்மானத்திற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். அதேவேளை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அரசியலில் தொடர்ந்தும் எமது கட்சியுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -12- வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பொதுத்தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய உத்வேகம் பெற்றுள்ளது. கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் கடந்த மார்ச் 19 ஆம் திகதி காணப்பட்ட நிலை தற்போது இல்லை. கட்சியின் ஆதரவாளர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சி அழிந்து இல்லாமற்போவதற்கு இடமளிக்க முடியாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் நாட்டில் பெருமளவான அபிவிருத்தியை ஏற்படுத்தியதும், மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கியதும் ஐக்கிய தேசியக் கட்சி என்பதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்றார்.

அதனைத்தொடர்ந்து மங்கள சமரவீரவின் அரசியல் ஓய்வு தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் பின்வருமாறு கூறினார்.

மங்கள சமரவீர அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறப்போவதாகத் தெரிவிக்கவில்லை. அவர் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றே கூறியிருக்கிறார். அவருடைய இந்தத் தனிப்பட்ட தீர்மானத்திற்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

எனினும் அவர் ஒரு சிறந்த புத்திஜீவி என்பதுடன், குறிப்பாக ஜனநாயகத்தை மேம்படுத்துவதை முன்நிறுத்திய அவரது கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வந்திருக்கிறார். அதுமாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து நீண்டகாலம் மக்களுக்காக முன்நின்று செயற்பட்டிருக்கிறார்.

அவர் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அரசியலில் தொடர்ந்தும் எமது கட்சியுடன் இணைந்து பயணிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை தற்போது தொலைபேசி மணி ஒலிப்பது நின்றுவிட்டது போல் தெரிகிறது. பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட சிலர் தற்போது அதிலிருந்து விலகியிருப்பதாக அறியமுடிகிறது.

ஆனால் எமது கட்சியில் அத்தகைய நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு உறுப்புரிமையை வழங்காமலிருக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை. கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்புடையவர்களாகவும், எந்தவொரு குற்றச்செயல்கள் மற்றும் மோடிகளிலும் தொடர்புபடாதவர்களாகவும் இருப்பின் அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.  

1 comment:

  1. ரனில், ரவி, இவர்கள் எக் குற்றமும் செய்யாத புனிதமானவர்கள் என்பது உங்களது அரசியல் பார்வையில் நிரூபனமானது?. அரசியலில் நீங்கள் எல்லாம் வங்குரோத்துக்கார்ர்கள்தான்.

    ReplyDelete

Powered by Blogger.