Header Ads



முஹூது விகாரைக்குரிய பகுதியில் குடியேற முடியாது, அது அவர்களின் நிலமும் அல்ல, மாற்றிடம் வழங்க தீர்மானம்

சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட உள்நோக்கத்திலேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கோருகின்றார்கள். எவ்விதமான பாரபட்மின்றி ஆட்சியை முன்னெடுக்கும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் இருப்பதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாத நிலையில் அதிகாரப்பகிர்விற்கான அவசியம் என்ன? என்று கிழக்கு மாகாண தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் எல்லாவல மேதானந்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேள்வி:- கிழக்கு மாகாணத்தினை இலக்குவைத்து தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதென்றபெயரில் ஜனாதிபதியால் செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதேன்?

பதில்:- கிழக்கு மாகாணத்தினை இலக்கு வைத்து அவ்வாறான செயலணி உருவாக்கப்படவில்லை. தென்னிலங்கையில் தொல்பொருள் இடங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்து விட்ட நிலையில் ஏனைய பகுதிகளிலும் அவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி செயலணியை நிறுவியுள்ளார். அதில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை.

கேள்வி:- இந்த செயலணியானது பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நீங்கள் உள்ளிட்டவர்களை மட்டுமே அங்கத்தவர்களாக கொண்டிருக்கின்றதே?

பதில்:- எமக்கு தனியான நிகழ்ச்சி நிரல் இல்லை. தொல்பொருள் இடங்களை அடையாளம் காணுவதும் அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும் தான் எமது பிரதான பணியாக இருக்கின்றது. மேலும் ஜனாதிபதி செயலணியால் எந்தவொரு இனத்தினதும் மதத்தினதும் தனித்துவ அடையாளங்களுக்கு குந்தகம் ஏற்படுத்தப்படப்போவதில்லை. மாறாக அவற்றின் வரலாற்றுத் தொன்மங்கள் பாதுகாக்கப்படவுள்ளன.

அதுமட்டுமன்றி அவ்வாறான வரலாற்றுத்தொன்மங்களின் பெறுமதியை உயர்அந்தஸ்துடன் பேணும் செயற்பாட்டையே ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கவுள்ளது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இன,மத துரோகிகளே அரசியல் மேடைகளில் கூச்சலிடுகின்றனர்.

கேள்வி:- கிழக்கில் தொல்பொருளை பாதுகாப்பது என்ற பெயரால் உருவாகியுள்ள செயலணியால் சிங்கள, பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படவுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றதே?

பதில்:- இதுமிகத்தவறானதாகும். முதுசங்களாக இருக்கும் தொல்பொருட்களை பாதுகாப்பதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அச்செயற்பாட்டை முறையாக முன்னெடுக்கும்போது பலர் தடைகளை ஏற்படுத்துகின்றார்கள். இவ்வாறான கருத்துக்கள் அரசியல்வாதிகளிடமிருந்து தான் வருகின்றன.

அவர்களுக்கு அரசியல் புரிவதற்கு எதுமே இல்லாத நிலையில் இவ்வாறான பொய்யான தகவல்கள் நிறைந்த கதைகளை அவிழ்த்துவிடுகின்றார்கள்.

கேள்வி:- கிழக்கினைப்போன்று வடக்கிற்கும் ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க வேண்டுமென்று கோரப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?

பதில்:- தற்போது வரையில் அவ்வாறான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை. நாடளாவிய ரீதியில் உள்ள தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

நாட்டின் நன்மைக்காக அமைக்கப்படும் ஜனாதிபதி செயலணிகளை அரசியல் மயப்படுத்தி அதில் அரசியல் இலாபமீட்டுவதை விடுத்து அவ்வாறானவர்கள் அனைவரும் ஜனதிபதி, பிரதமரைப் பலப்படுத்தி ஆட்சியை வலுவாக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பம் இதுவாகும். ஆகவே தற்போதைய ஆட்சியாளர்களை பலப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- அரசியல்வாதிகளுக்கு அப்பால் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களும் அவ்வாறான மனோநிலையிலேயே உள்ளார்கள். அதற்காக மிக அண்மித்த உதாரணமொன்றாக முஹூதுமா விகாரையையொட்டிய காணி விடயம் காணப்படுகின்ற நிலையில் உங்களின் பதில் என்ன?

பதில்;:-முஹூதுமா விகாரை வரலாற்று தொன்மம் மிக்கது. அத்தகைய விகாரையொன்றுக்கு அருகில் உள்ள பகுதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் காணப்படுகின்றது.

அவ்வாறானதொரு இடத்தில் ஏன் குடியேறினார்கள். விகாரைக்குச் சொந்தமான பகுதியில் குடியேறுவதற்கு முடியாது. அது அவர்களின் பூர்வீக நிலமும் அல்ல. அத்தகையதொரு இடத்தில் அவர்கள் குடியேறுவதற்கு எந்த உரிமைகளும் கிடையாது. மேலும் அவ்வாறு குடியேறியவர்களுக்கு கூட மாற்றிடமொன்று வழங்குவதற்கும் தீர்மானம் உள்ளது. அப்படியிருக்க அவர்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டது என்று கூற முடியும்.

கேள்வி:- தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களான வடக்கு கிழக்கில் தொல்பொருளை பாதுகாப்பதன் பெயரில் சிங்கள, பௌத்த மயமாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகின்றதே?

பதில்:- நீங்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றீர்கள். பிரபாகரனே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்று பிரகடனம் செய்தார். இலங்கையில் தமிழர்களுக்கான பூர்வீக பிரதேசம் எங்குள்ளது. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமத்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறிருக்கையில் தமிழர்களுக்கு என்று விசேடமாக பூர்வ பிரதேசமென்ற ஒன்று இல்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை எடுத்துக்கொண்டால் அது தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக கொள்ளமுடியாது. கிழக்கிலங்கையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொல்பொருள் இடங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் பௌத்த, சிங்கள வரலாற்றுத் தொன்மங்களாகவே காணப்படுகின்றன. அங்கு தமிழர்களுக்கான பூர்வீக பகுதி எங்குள்ளது. சிங்களவர்களுடன் தமிழர்கள் வாழ்வதற்கு எங்குமே தடைசெய்யப்படவில்லை.

மேலும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சிங்கள பெரும்பான்மையின படையினராலேயே பாதுகாக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் தமிழர்களின் போராட்டக் குழுக்கள் அரங்கேற்றி படுகொலைகளை மறந்துவிடவேண்டாம். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தவர்கள் சிங்களப்படையினர்களே. ஆகவே இலங்கையில் தமிழர்களுக்கென்று இல்லாத பூர்வீக பிரதேசத்தை இருக்கின்றது என்று கூறி இனவாதத்தினையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்க முயலவேண்டாம்.

No comments

Powered by Blogger.