Header Ads



முஸ்லீம் சமூகம் பூதாகாரமாக சித்தரிக்கப்பட்டது, மல்கம் ரஞ்சித் குறித்து, ஏன் வாய் திறந்தேன்..? ஹரீனின் விளக்கம் இதோ..


பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறித்து தான் கருத்துக்களை முன்வைக்கவேண்டிய சூழ்நிலை உருவானமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறிப்பிட்ட அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் கடுமையாக சாடியுள்ளார்

ஹரீன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளதாவது

பொலனறுவையில் நான் ஆற்றிய 45 நிமிட உரையை உள்நோக்கம் கொண்ட சில ஊடகங்கள் ஒரு நிமிடவீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளன.

அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோ நான் தெரிவித்ததை திரிபுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
நான் எனது முழு உரையையும் பொதுமக்களிற்காக வெளியிட்டுள்ளேன். எனது உரையை புரிந்துகொள்ள முயல்பவர்கள் அதனை பார்வையிடலாம்.

அந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நான் வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் என்னுடையவை என்ற போதிலும்( நான் அவை கட்சியின் கருத்துக்கள் என தெரிவிக்கவில்லை)சில அரச ஊடகங்கள் என்னுடைய கட்சிக்கும் கத்தோலிக்க சமூகத்தினரிற்கும் இடையில் கருத்துவேறுபாட்டை ஏற்படுத்துவதற்காக நான் தெரிவித்ததை எடிட் செய்து வெளியிட்டுள்ளேன்.

இது சில ஊடகங்கள் செயற்படும் விதம்,இந்த ஊடகங்களே உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் இடம்பெற்றவுடன் உடனடியாக முஸ்லீம் சமூகததினை பூதாகாரமாக சித்தரித்தன.

இந்த ஊடகங்களே கொரோனா வைரசின் போது நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளிற்குள் கமராவுடன் சென்று அவர்களை அவமானப்படுத்தின.

நான் ஒரு கத்தோலிக்கன்

நான் ஒரு கத்தோலிக்கன், எனது தேவாலயத்தையும் அதன் தலைமையையும் இழிவுபடுத்துவதன் மூலம் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் எங்கள் நாட்டின் மீதான ஒரு கரும்புள்ளி.அது எனது மக்களிற்கும் நான் நம்புகின்ற எனது தேவாலயத்திற்கும் எதிரான தாக்குதல்.

அந்த பயங்கரமான தாக்குதலிற்கு பின்னர் நான் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிஸ்டவசமாக உடனடியாக திரிபுபடுத்தப்பட்டன, அரசியல்மயப்படுத்தப்பட்டன.

நாங்கள் ஒரு தேசமாக அணிதிரண்டிருக்கவேண்டிய தருணத்தில், சிலர் உடனடியாக ஏனையவர்களின் துன்பத்தின் மீது அரசியல் விளையாட்டுகளை ஆரம்பித்தனர்.

எனது கதை

மிகவும் துயரமான. கண்டிக்கப்படவேண்டிய பயங்கரவாத தாக்குதல் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு பின்னர் நான் எனது கதையை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்று நான் எனது தொகுதியான பதுளையில் உள்ள தேவாலயத்தில் ஆராதனைகளில் கலந்துகொண்டேன்.

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த தகவல்கள் கிடைத்ததும், நான் என்னால் முடிந்தளவு வேகமாக கொழும்பு சென்றேன்.

முதல் நாள் எனது தந்தையை சென்று பார்த்தவேளை, அவர் தேவாலயங்கள் தாக்கப்படலாம் என்ற அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என சகோதரி தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டிற்காக செல்வதற்கு முன்னர் நான் அவரை சென்று பார்த்து அவர் என்ன தெரிவித்தார் என கேட்டேன்.

அவர் ஓரு சில வார்த்தைகளே பேசினார்,தனக்கு எல்லாம் தெரியும் என அவர் குறிப்பிட்டார்.

அந்தவேளையில் எனது தந்தை கொஞ்சம்கொஞ்சமாக இந்த உலகை விட்டு சென்றுகொண்டிருந்தார். அவருக்கு கடும் மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது பல மருந்துகள் வழங்கப்பட்டிருந்தன.

இதன் காரணமாக அவர் அதனை தெரிவித்தவேளை, எங்கள் குடும்பத்தில் யாரும் அதனை முக்கியமானதாக கருதவில்லை.

நாங்கள் தீவிரமாக எடுத்திருக்கவேண்டும் என நான் தற்போது கருதுகின்றேன்.

எனது தந்தை மீது மக்கள் முன்வைக்கும் உணர்வற்ற கருத்துக்களை இது நியாயப்படுத்தவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து எனக்கு முன்கூட்டியே ஏதாவது தெரிந்திருந்தால் நான் உங்களின் கவனத்திற்கும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்திருப்பபேன் என கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகத்திற்கு உறுதியளிக்கின்றேன்.

எனது தந்தையுடனான உரையாடல் குறித்து சிஐடியினருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் வாக்குமூலம்வழங்கியுள்ளேன்.

சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிற்கு ஏற்கனவே அந்த தகவல்கள் தெரிந்திருந்தது என்றால் ஏன் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது குறித்து அதிர்ச்சியிலிருந்து நான் இன்னமும் மீளவில்லை.

செய்தியாளர் மாநாட்டில் அந்த உணர்வையே நான் வெளிப்படுத்தினேன்.

எனது தந்தை போன்ற சாதாரண பிரஜையால் அந்த வதந்தியை செவிமடுக்க முடிந்தது என்றால் ஜனாதிபதியாலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாலும் ஏன் முடியவில்லை?

பேராயருடன் எனது உரையாடல் தாக்குதல் இடம்பெற்றவுடன் நான் பேராயர் மல்கம் ரஞ்சித்தை அவரது சகா ஒருவர் மூலம் தொடர்புகொள்ள முயன்றேன்.

அவர் பிரார்த்தனையில் இருக்கின்றார் அவர் என்னை தொடர்புகொள்வார் என தகவல் கிடைத்தது,

அதன் பின்னர் செய்தியாளர்மாநாட்டில் உரையாற்றிய பேராயர் தந்தை மகனை காப்பாற்றினார் என தெரிவித்திருந்தார்.

நான் பின்னர் பேராயருடன் பேசியவேளை எனது விளக்கத்தை அளித்தேன். இந்த சூழமைவின் அடிப்படையிலயே நான் பேராயர் பகிரங்க அறிக்கைகளை விடுத்தது குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை நேரடியாக அணுகுவது எனது தலைமை மேய்ப்பனான பேராயரின் கடமை. என்னிடமிருந்து தகவல்களை பெறாமல் என்னை பேராயர் பகிரங்கமாக அவமானப்படுத்துவது இயேசுநாதரின் போதனைகளில் தெரிவிக்கப்பட்டதற்கு மாறான விடயம்

ஜனாதிபதி சிறிசேன இந்த பேரழிவிற்கான முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்

தாக்குதல் இடம்பெற்றவேளை நாட்டின் தலைவர், முப்படைகளின் தளபதி,பாதுகாப்பு அமைச்சர், சட்டஒழுங்கிற்கு பொறுப்பானவராக காணப்பட்டவர் என்ற அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என பொலனறுவையில் நான் தெரிவித்திருந்தேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் சிறிசேன பிரதமரையும் அமைச்சர்களையும் தவிர்த்துக்கொண்டார் அவர்களை தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கும் அழைக்கவில்லை என்பது நன்கு அறியப்பட்ட விடயம்.

2018 இல் இடம்பெற்ற தோல்வியடைந்த அரசியல் சதிமுயற்சி காரணமாக ஏற்பட்ட முறுகல் 2019 இல் காணப்பட்டது.

2018 இல் எங்களுடைய அரசாங்கத்தினை சட்டவிரோதமாக கவிழ்க்க முயன்றவர்களும்,அந்த 52 நாட்களும் சட்டவிரோதமாக ஒழுக்கநெறிகளிற்கு மாறாக பதவிகளில் இருந்தவர்களும், அரசாங்கத்தில் அவ்வேளை காணப்பட்ட ஸ்திரமின்மை மற்றும் பிரிவுகள் காரணமாக , இந்த பேரழிவு இடம்பெறுவதற்கு மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் இடமளித்தமைக்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

ஜனாதிபதியின் அலட்சியத்திற்கும், பதவி குறித்த பேராசைக்கும் கத்தோலிக்கர்கள் உட்பட அப்பாவிகள் விலைசெலுத்தினர் .

அவரது பலவீனங்கள் எங்கள் தேர்தல் வாய்ப்புகளை பாதித்தன.

எனினும் இன்று விதியின் குரூரமான விளையாட்டினால், மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளராகவும் சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுன கூட்டணியின் தலைவராகவும் காணப்படுகின்றார்.

உரிய நடவடிக்கைகள் எடுக்க தவறியவர்கள் உட்பட அந்த தாக்குதல்களிற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தின் முழுமையான நீட்சியைபயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

அதேவேளை இந்த விசாரணைகள் அனைத்தும் உரிய நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படவேண்டும்.அரசியல் நோக்கங்களிற்காக அவற்றை பயன்படுத்த கூடாது.

No comments

Powered by Blogger.