Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றால்...?

கொரோனா பரவல் மற்றும் நிறவெறி தொடர்பான போராட்டங்கள் அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இவை அனைத்தையும் அதிபர் ட்ரம்ப் முறையாகக் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன. அங்கு, வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

வரும் தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக அதிபர் ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். எனவே, இவர்களுக்கு இடையேயான வார்த்தைப் போர் அதிகரித்துவருவதும் தொடர்கதையாகிவருகிறது.

இந்நிலையில், ட்ரம்ப் பற்றி பேசியுள்ள ஜோ பிடன், ‘அதிபர் ட்ரம்ப் வரும் தேர்தலில் தோற்றால் அதை ஒப்புக்கொள்ள மாட்டார், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியே வரமாட்டார். அவரால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. எனவே, தேர்தலில் முறைகேடு செய்ய முயற்சிசெய்வார்.

ஒருவேளை ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்தால், ராணுவத்தினரைத்தான் நான் நம்புகிறேன். அவர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து ட்ரம்ப்பை வெளியேற்ற வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக ஃபாக்ஸ் ஊடக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “ வரும் தேர்தலில் ஒருவேளை நான் தோல்வியடைந்தால், வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவேன். நான் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வரும் தேர்தலில் இ-மெயில் மூலம் வரும் வாக்குகளைப் பெற ஜனநாயக கட்சியினர் மோசடி செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் இ-மெயில் வாக்குகளின் மூலம்தான் அதிக மோசடி நடக்கும் என இரு கட்சிகளும் மாறிமாறி குறிப்பிட்டுள்ளன. எனவே, இந்த முறையிலான வாக்குப் பதிவில் மேலும் பாதுகாப்பு தேவை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது கொரோனா குறித்த கவலைகள் அதிகமாக இருப்பதால், இ-மெயில் மூலம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.