June 16, 2020

நியூஸிலாந்தில் இரத்தம் தேய்ந்த பள்ளிவாசல், கொரோனாவின் பின் எப்படி உள்ளது..? ஷுஹதாக்களினால் வளரும் இஸ்லாம்


வாயிலில் காவலுக்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரிகளைக் கடந்து உள்ளே செல்கிறேன் . இரத்த 
வெள்ளத்தில் வீழ்ந்து கிட க்கும் உடல்களைக் கடந்து செல்வதுபோல் எனக்குள் இலேசான ஓர் உதறல் ஏற்பட்டது . கடந்த வருடம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக கூடியிருந்த முஸ்லிம்களை கொன்று குவித்த நியூஸிலாந்தின் கிரிஸ்டசர்ச் பள்ளிவாசல் இது .

கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டதும் கிரிஸ்டசர்ச் பள்ளிவாசலில் ஜும்மா  தொழுவதற்கு என் கணவர் ஆசைப்பட்டார். நியூஸிலாந்து வடக்குத் தீவில் வசிக்கும் நாம் தென் தீவை நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டோம் . 

தாக்குதல் நடாத்தப்பட்ட  பள்ளிவாசலின் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இன்னும் காவலில் இருப்பது கண்டு  ஆச்சரியப்பட்டேன் . 

அவர்கள் பெண்கள் தொழும் பகுதிக்கு என்னைக் கைகாட்டி விட்டார்கள் . அங்கே கதவில் ஓர் அழகான வாசகம் படத்துடன் என்னை  வரவேற்றது . ஆதிக்ககுடிகளான மயூரி (Maori ) இனத்தவர் ஒருவர்  ஒரு முஸ்லீம் பெண்ணை  ஆரத்தழுவுவதுபோல் ஒரு படம்.

அதன் கீழ் "இது உங்கள் வீடு . இங்கே நீங்கள் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும் " என்ற வாசகம் நெஞ்சைத் தொட்டது . கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன் . அன்று ஷஹீதாக்கப்பட்ட சகோதரிகள் என் கண்முன்னே வந்து போனார்கள் ...

முச்சக்கர நாட்காலியில் தொழுகைக்காக வந்திருந்த தன் கணவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்று துப்பாக்கி சத்தம் கேட்டதும் வெளியே ஓடிவந்து சுடப்பட்ட 45 வயது நிரம்பிய சகோதரி ஹுஸ்னா அஹமத்தின் தியாகத்தை நினைத்தபோது உடல் சிலிர்த்துக் கொண்டது . கூடவே , 65 வயது நிரம்பிய சகோதரி லிண்டா ஆம்ஸ்ட்ரோங் என் கண்முன்னே தோன்றி மறைந்தார் . சகோதரி லிண்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்தவர் . என் கணவர் நடாத்தி வந்த இஸ்லாமிய வகுப்புகளுக்கு வந்து கொண்டிருந்தார் . அவரது மகளும் , பேரக்குழந்தைகளும் கிரிஸ்டசர்ச் நகரில் வசித்து வந்ததால் அங்கு இடம் பெயர்ந்து , தவறாமல் பள்ளி வாசல் பெண்கள் பகுதிக்கு வந்து போயுள்ளார் . சம்பவம் நடந்த அன்று துப்பாக்கி சத்தம் கேட்டதும் , ஏன் எப்படிச் செய்கிறாய் என்று கேட்டுக்கொண்டு கொலையாளியை நோக்கி ஓடிவந்தபோது சுடப்பட்டார் ....!

அன்று அந்தப் பள்ளிவாசலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சாவுக்கும், வாழ்வுக்கும் இடையில் போராடிய அதே சகோதரிகள் மீண்டும் அங்கே தொழுகைக்காக வந்திருந்தனர் .

அவர்களில் கணவரை இழந்தவர்கள் , பெற்ற பிள்ளைகளை இழந்தவர்கள், உடன் பிறப்புக்களை இழந்தவர்கள் பலரும் அடங்குவர் . கலா , கத்ரில்  நம்பிக்கை வைத்ததால் வந்த தைரியம் இது. எது நடந்தாலும் அல்லாஹ் ஒருவனே நமக்குப் போதுமானவன் என்ற நம்பிக்கைதான் அவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு காரணமாக இருக்கிறது .

அன்றைய குத்பா பிரசங்கத்தை ஆரம்பித்த இமாம் கூட , அன்று ஷஹீதாக்கப்பட்ட 52 பேர்களில் ஒருவனாக நானும் இருந்திருப்பேன் . ஆனால் , அல்லாஹ்வின் நாட்டம் வேறு மாதிரி அமைந்திருக்கிறது என்று அந்த கொடூரமான நாளை ஞாபகப் படுத்தினார் .

இந்தப் பள்ளிவாசல் படுகொலையைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் இருந்தும் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நன்கொடைகள் வந்து குவிந்தன . அதில் ஒரு தொகையை அந்த ஷுஹதாக்களின் குடும்ப உறுப்பினர்களும், ஏனைய முஸ்லிம்களும் பயன்பெறும் வண்ணம் ஒரு இஸ்லாமிய பாடசாலை அமைப்பதற்கு செலவிட வேண்டும் என்றும் , அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இமாம் சொன்னபோது கண்ணீருடன் ஆமீன் சொன்னேன். அந்த ஷுஹதாக்கள் சிந்திய இரத்தத்தில் இஸ்லாம் வளரப்போகிறது . 

அல்ஹம்துலில்லாஹ் .

இப்போது அந்நூர் என்ற இந்தப் பள்ளிவாசல் ஒரு முக்கியமான வரலாற்றுத்தளமாக மாறி வருகிறது. இங்கே பல சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள் . இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான பூங்கொத்துகளும் , அனுதாபச் செய்திகள் , பாடசாலை மாணவர்களின் சித்திரங்கள் என்பன நூதன சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளன .

செயற்கை பூக்களும் , சிறு அலங்காரக் கற்களில் எழுதப்பட்ட வாசகங்களும் இன்றும் பள்ளிவாசல் முன்னே காட்சிப் படுத்தப் பட்டுள்ளன . பலரை இஸ்லாத்தின் பக்கம் இழுத்துவந்த பலிபீடம் இது . நியூஸிலாந்தில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த நிகழ்வாகவும் இந்தப் பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் அமைகிறது .

"நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்". (குர் ஆன் 2 : 216) .

- மரீனா இல்யாஸ் ஷாபீ -

1 கருத்துரைகள்:

full of tears for our beloved muslim relations. Ya allah grant them jannah...

Post a comment