June 10, 2020

இலங்கைக்கு எத்தகைய வெளிநாட்டு, கொள்கை பொருத்தமானது

இலங்கை போன்ற நாடுகள் அமெரிக்க தலைமையிலான அணிசாரந்தோ அல்லது சீன தலைமையிலான அணிசாரந்தோ சர்வதேச அரசியல் தளத்தில் பக்கம் சாயாது உள்நாட்டு அரசியல் சமூகப் பொருளாதார கலாசார விழுமியங்களைப் பேணிக் கொள்ளும் வகையில் அணிசரா வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டு செயற்படுவதே பொருத்தமானது என இலங்கையின் பிரபல ராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கான செயலமர்வு ஒன்று ராஜகிரிய வோட்டர்ஸ் எஜ் விடுதியில் நடைபெற்றது. நாடுபூராகவும் மாவட்ட ரீதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், தேசிய பட்டியல் வேட்பாளர்கள் என அனைவரும் இந்த செயலமர்வில் கலந்து கொண்டிருந்ததுடன் சமகால பொருளாதாரம் தொடர்பில் எரன் விக்கிரமத்ன, சமகால அரசியல் நிலை குறித்து இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தேர்தல் வியூகங்கள் தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரச்சார வியூகங்கள் தொடர்பில் ஹரின் பெர்னான்டோ, சட்ட ஆலோசனைகள் தொடர்பில் அஜித் பி.பெரேரா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு, தேர்தல் ஒழுங்கமைப்புகள் தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார என பலரும் உரையாற்றிய அதேவேளை செயலமர்வின் பிரதான உரையாக தயான் ஜயதிலக்கவின் உரை அமைந்தது.

இலங்கைக்கு எத்தகைய வெளிநாட்டுக் கொள்கை பொருத்தமானது எனும் தலைப்பில் அவரது உரை அமைந்தபோதும் சமகால இலங்கை அரசியல் குறித்த விமர்சன உரையாகவே அது அமைந்திருந்தது. அவரது உரையின் முக்கிய பகுதிகளாக அமைந்தவை:

“இலங்கையை பௌத்த அரசாக ( நாடாக அல்ல) பிரகடனம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனநாயக்கவிடம் பௌத்த பிக்குகள் குழுவொன்று முன்வைத்த போது அவர் கூறிய விடயம் மிக முக்கியமானது. அப்போது இலங்கையின் பௌத்த சனத்தொகை 6 மில்லியன். ஏனைய சிறுபான்மை சமூகங்களான தமிழ் – முஸ்லிம் மக்கள் அதைவிட குறைவு எனினும் எமது நாடு அமைந்துள்ள வலயத்தில் அவர்களின் எண்ணிக்கை பரம்பல் அடிப்படையில் அதிகமானது. இங்கே அவர்களது சமவாய்ப்புகள் குறையும்போது அவர்கள் சர்வதேசத்மில் அவர்களது கலாசார தொடர்புடையவர்களை நாடினால் நாம் சிறுபான்மையாகிவிடுவோம். எனவே இதற்கேற்பவே வெளிநாட்டுக் கொள்கையைப் பேண வேண்டும்.

இலங்கையில் இப்போது வெளிநாட்டுக் கொள்கைக்கு அணிசேரா என்ற சொல்லை அல்லாது நடுநிலை ( Neutral) எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அதனை எங்கிருந்து பெற்றார்கள் என தெரியவில்லை.

இப்போது வெளிநாட்டுக் கொள்கையில் மாத்திரமல்ல உள்நாட்டு கொள்கையிலும் தடுமாற்றம் நிலவுகிறது.

தேசிய பாதுகாப்பு முக்கியம். அதேநேரம் எல்லா வேலைகளுக்கும் ராணுவத்தை பயன்படுத்தினால் தேவையான வேலைக்கு ராணுவத்தை பயன்படுத்த முடியாது போகும் நிலைமை ஏற்படலாம். வெளிநாட்டு இராணுவம் இலங்கையில் நிலைகொள்வதை ஏற்கமுடியாது என்ற ரணசிங்க பிரேமதாசவின் வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றி இப்போது யாரும் பேசுகிறார்கள் இல்லை.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளியல் ஆய்வுக்கு அமைக்கப்பட்டுள்ள செயலணி இனப்பரம்பல் அடிப்படையில் இல்லை. எந்த மாகாணமாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படல் வேண்டும். கிழக்கில் மூன்று இனங்கள் சராசரியாக சமனாக வாழ்ந்தாலும் தேசிய சிறுபான்மை இனங்கள் இரண்டையும் சேர்த்து பார்த்தால் அவர்களே அங்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகும். ஆனால் அந்த மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியில் இதன் பிரதிபலிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை.

இதுபோன்ற வேலைகளைச் செய்வது பலம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையான பலம் அல்ல. குறுகிய அரசியல் நோக்கம் அடைவதற்கான தந்திரமே ஆகும்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலங்களில் சிறுபான்மை சமூகங்களின் செல்வாக்கு சற்று அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கவில்லை. அதற்காக இப்போது பெரும்பான்மைவாதத்தை முழுமைபடுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அது டீ.எஸ். சேனநாயக்க கூறிய நிலைக்கு வெளிநாடுகளுடனான உறவு நிலைக்கு தள்ளிவிடும்.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என சஜித் பிரேமதாச அண்மையில் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. அதனையும் விட கீழே கொண்டு போக நினைத்தால் நமது நாடு சர்வதேச தளத்தில் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும்.

எனவே ஐக்கிய தேசிய கட்சி வெளிநாட்டு கொள்கையில் விட்ட தவறுகளையும், தற்போதைய அரசாங்கம் கடைபிடிக்கும் நடுநிலைமை எனும் விதண்டாவாத வெளிநாட்டுக் கொள்கையை போலும் அல்லாது ஐக்கிய மக்கள் சக்தி அணிசேரா கொள்கையை கடைப்பிடிப்பதே சிறந்தது.”

0 கருத்துரைகள்:

Post a comment