Header Ads



மகனுக்கு நாப்கின் வாங்குற கொடுமை, எந்தத் தாய்க்கும் வரக்கூடாது


``எல்லாக் குழந்தைகளும் ஒரு வரம் வாங்கிட்டுத்தான் பூமிக்கு வர்றாங்க. அந்த வரம் எதுன்னு கண்டுபிடிச்சுட்டா அந்தக் குழந்தைகளோட எதிர்காலம் பிரகாசமா அமைஞ்சுரும். ஆனால் நிறைய பெற்றோர் தன் குழந்தைகளோட இயல்பைப் புரிஞ்சுக்கிறது இல்லை. அதிர்ஷ்டவசமா என் பெற்றோர் என் இயல்பைப் புரிஞ்சுக்கிட்டாங்க..." - கண்கள் மிளிரப் பேசுகிறார் சக்கரவர்த்தி. வார்த்தைகளின் உணர்வை உடல்மொழி காட்டுகிறது. மிகுந்த தன்னம்பிக்கை.

சக்கரவர்த்தி, ஒரு இன்டர் செக்ஸ். இது ஒருவகையான பாலினச் சிக்கல். பொதுவாக, பெண் என்றால் XX குரோமோசோம்களும், ஆண் என்றால் XY குரோமோசோம்களும் இருக்கும். இந்தக் குரோமோசோம்களில் குழப்பம் ஏற்படும் சூழலில் அவர்கள் மாற்றுப் பாலினத்தவராகக் கருதப்படுகிறார்கள்.

பிறக்கும்போது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்து அதன்பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மாற்றுப் பாலித்தனவராக உணர்பவர்கள் திருநங்கையாகவோ அல்லது திருநம்பியாகவோ அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் உருவத்தோற்றத்தில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்து அதற்கு எதிரான பாலினச் சுரப்புகள் மற்றும் உறுப்புகளைக்கொண்டவர்கள் `இன்டர் செக்ஸ்' என்று அறியப்படுகிறார்கள்.

வெளிப்புறத்தில் ஒரு பாலினத்திற்கான பிறப்புறுப்பு இருந்தாலும் உடம்பின் உள்ளே எதிர் பாலினத்துக்குரிய உறுப்பும் இருக்கும். இந்தியாவில் மட்டும், 15,000-க்கும் மேற்பட்டவர்கள் இன்டர் செக்ஸினராக வாழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இன்டர் செக்ஸினர், இந்தச் சமூகத்தில் மிகக்கடும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். பள்ளிக்காலத்திலேயே அப்படியான துயரங்களைக் கடந்து கடும் உழைப்பின் மூலம், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்திருக்கிறார் சக்கரவர்த்தி. சன்டிவியில் வரும் சந்திரலேகா உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சக்கரவர்த்தியிடம் பத்து நிமிடங்கள் பேசினால் நமக்கும் சிறகு முளைத்துவிடும். பேச்சில் அப்படியோர் உத்வேகம்... தன்னம்பிக்கை..!

``10 வயசோட என் வாழ்க்கை முடிஞ்சுடும்னு நினைச்சேன். இத்தனை வருஷம் வாழ்றதே ஆச்சர்யமாத்தான் இருக்கு. எத்தனையோ அவமானங்கள், புறக்கணிப்புகள், கேலி, கிண்டல்களையெல்லாம் தாண்டி எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை என் அம்மா. அம்மாவுக்காகத்தான் நான் அழுவுறதை நிறுத்தினேன்" - அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றிக் கொள்கிறார் சக்கரவர்த்தி.

``எங்களுக்குச் சொந்த ஊர் பண்ருட்டி. இப்போ சென்னையில் இருக்கோம். இயல்பா நான் ஒரு ஆண்... அஞ்சாவது படிக்கும்போது, திடீர்னு ஒரு நாள் கடுமையான வயித்து வலி. என்னோட ஆணுறுப்பிலிருந்து ரத்தம் கசியத் தொடங்குச்சு. மொத்தக் குடும்பமும் பதறிப்போயிட்டாங்க. டாக்டர்கிட்ட போனோம்... மருந்து மாத்திரைகள் குடுத்து வீட்டுக்கு அனுப்பிவெச்சுட்டார். நாலு நாள் ரத்தம் கசிஞ்சுக்கிட்டே இருந்துச்சு. அப்புறம் சரியாயிடுச்சு. அடுத்த மாசமும் அதே தேதியில ரத்தக்கசிவு ஏற்பட்டுச்சு. ஸ்கேன் எடுத்துப் பார்த்தப்போ என் உடம்புக்குள்ள கர்ப்பப்பை இருக்கிறது தெரிஞ்சுது. எனக்கேற்பட்ட ரத்தக்கசிவுக்குக் காரணம், பீரியட்ஸ் ஆகியிருக்கு. ஒருத்தர் உடம்புல XXX குரோமோசோம்கள் இருந்தா இந்தப்பிரச்னை வருமாம். அந்த வயசுல எனக்கு அது என்னென்ன கூட உணரமுடியல. மருந்து மாத்திரை மட்டும் ரெகுலரா சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள் ஸ்கூல்ல என் நண்பன்கிட்ட `எனக்கு பீரியட்ஸ் ஆகுது'னு சொன்னேன். அந்தச் செய்தி பள்ளி முழுக்கத் தெரிஞ்சு போச்சு. போற இடத்துல எல்லாம் இதைப் பத்திக் கேட்க ஆரம்பிச்சாங்க. பாலியல் தொல்லைகள் கொடுக்க ஆரம்பிச்சாங்க. பசங்க கிண்டல் பண்றாங்கனு டீச்சர்கிட்ட போயி நின்னா அவங்களும் கிண்டல் பண்ணி அசிங்கப்படுத்துவாங்க. என் பிறப்பு இப்படி நிகழ்ந்ததுக்கு நான் என்ன பண்ணுவேன்... யாருமே யோசிக்கல. எனக்கும் கனவு இருக்கும், மத்தவங்கள விட என்னைப் போல சிக்கல் உள்ளவங்களுக்குப் படிப்பு அவசியம்னு எந்த ஆசிரியருக்கும் புரியல. யாரும் சப்போர்ட் பண்ணல. ஸ்கூல் முடிச்சு வந்து அம்மா மடியில படுத்துட்டு அழுவேன். எனக்கிருக்கிற பிரச்னை கொஞ்சம் கொஞ்சமா வெளியில தெரிய, ஊர்ல அம்மா அப்பாவையும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சாங்க. இப்படி ஒரு வாழ்க்கை வாழணுமான்னு கூனிக் குறுக்கிப்போனேன். வளர, வளர என் உடம்பிலிருந்து விந்தணுக்களும் வெளியேற ஆரம்பிச்சுது.

மிகப்பெரிய குழப்பத்துக்கு உள்ளாகிட்டேன். நான் திருநங்கையா, ஓரினச் சேர்கையாளரா... என் உடம்புக்குள்ள ஏன் இப்படி ஒரு மாற்றம்னு நிறைய கேள்விகள் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கும். இந்தக் குழப்பத்தைத் தீர்க்கத்தான் யாருமே இல்லை. நண்பர்கள் என்னை ஒதுக்க ஆரம்பிச்சாங்க. அப்போ ஆறுதலா இருந்தது என் அம்மாதான். `இது கடவுள் கொடுத்த பரிசு... நீ வாழ்க்கை முழுக்க ஆண்தான்... ஆனால் உன்னால் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நானாக இருந்தாலும் இப்படி ஒரு ஆண் கூட வாழ யோசிப்பேன். திருமணம் மட்டும் வாழ்க்கையில்லை. அதைத்தாண்டி வாழ்க்கையில் சாதிக்க நிறைய இருக்கு. அடுத்தவங்களோட கேலி கிண்டல்களையெல்லாம் தூர தூக்கிப்போட்டுட்டு, உனக்காக வாழ ஆரம்பி'ன்னு சொன்னாங்க இப்பக்கூட அந்த வார்த்தைகள்தான் என்னை ஓட வெச்சுட்டு இருக்கு.

நிறைய ஸ்கூல் மாறினேன். ஆனாலும் படிப்புல கவனம் செலுத்த முடியல. பத்தாம் வகுப்புக்கு அப்புறம் ஸ்கூலுக்குப் போகவே பிடிக்காம வீட்டுல இருந்துட்டேன். யார்கிட்டையும் பேசப் பிடிக்காது. பயமா இருக்கும். வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடப்பேன். எங்க அண்ணன், அப்பாவுக்குக்கூட என் பிரச்னை புரியல. ஊர்ல நிலைமை மோசமாயிடுச்சு. கிளம்பி சென்னைக்கு வந்துட்டோம். சென்னையில் என்னைப்பத்தி யாருக்குமே எதுவும் தெரியாததால் சுதந்திரமா இருக்க முடிஞ்சுது. 3 வருஷம் என்னை நானே தகுதிப்படுத்திக்கிட்டேன். மீடியாவுல வேலை செய்யணும்னு ஆசை. அதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக்கிட்டேன். நிறைய வாய்ப்புகள் அமைஞ்சுது. இனிமே என்னால் என்னைப் பாத்துக்க முடியும். யாரையும் நம்பி நான் இல்லைனு சந்தோஷத்தில் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். என்னோட பிரச்னையை நான் எங்கேயும் வெளிக்காட்டிக்கிட்டதில்லை. ஒவ்வொரு மாசமும் பீரியட்ஸ் வரும் போது படாதபாடுபடவேண்டியிருக்கும். யாருக்கும் தெரியாமல் நாப்கின் மாத்தணும். அதை அப்புறப்படுத்தணும்னு மனசாலும், உடலாலும் நிறைய அழுத்தங்கள். நானும் ஒரு இயல்பான மனிதன்னு இந்த உலகத்துக்குக் காட்டிக்க தினமும் படாதபாடு படுவேன்.

ஒருமுறை வேலை அதிகமிருந்துச்சு. ரொம்ப நேரம் நாப்கின் மாத்தலே. சிறுநீரகத் தொற்று வந்துருச்சு. அதுக்கு சிகிச்சைக்காகப் போகும்போது கர்ப்பப்பையை எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. சரி அதை எடுத்துட்டா இயல்பா இருக்க முடியும்னு நினைச்சு நானும் அறுவைசிகிச்சை செய்துகிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம்தான் நிறைய பிரச்னைகள் வர ஆரம்பிச்சுது" - கண்கள் பனிக்கிறது சக்கரவர்த்திக்கு. கலங்கும் மகனை ஆசுவாசப்படுத்திப் பேச ஆரம்பிக்கிறார் அம்மா ராதா.

யாராவது உடம்பைப் பத்திப் பேசினாலே குமட்டிக்கிட்டு வருது. அவ்வளவு பாலியல் தொல்லைகளை அனுபவிச்சுட்டேன்.

``ஒரு மகனுக்கு நாப்கின் வாங்கித்தரும் கொடுமையெல்லாம் எந்தத் தாயிக்கும் வரக்கூடாது. ஒவ்வொரு முறையும் பீரியட்ஸ் நேரத்தில் அவன் கஷ்டப்படுறதைப் பார்க்கும்போது ஒரு அம்மாவா மனசு பதறும். அதனால்தான் அவன் பட்ட கஷ்டம் போதும்னு கர்ப்பப்பையை எடுக்கச் சம்மதிச்சேன். கர்ப்பப்பை எடுத்தபிறகு ஹார்மோன் சமநிலையில்லாமல் முடி கொட்டுறது, எடை அதிகரிக்கிறது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம்னு நிறைய பாதிப்புகள் வந்துருச்சு. அந்த ஆபரேஷன் நேரத்தில் இவன் ஒரு தனியார் தொலைக்காட்சியில வேலை பார்த்துட்டு இருந்தான். இவனுக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்குதுனு தெரிஞ்சதும் எல்லாரும் இவனைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. உன்னோட பிறப்புறுப்பு எப்படியிருக்கும், அப்படி இப்படினு கேட்கக்கூடாத கேள்வியெல்லாம் கேட்டு அவனைத் திரும்பவும் கூனிக் குறுக வெச்சுட்டாங்க. அங்கிருந்து வெளியில வந்துட்டான். அதுக்கப்புறம் இன்டர்செக்ஸ்னு தெரிஞ்சதால் யாரும் வேலையும் கொடுக்கல. ஆனால் இத்தனை புறக்கணிப்புகளுக்கு அப்புறமும் அவன் மனம் தளரலே. என் உடல் உறுப்பில் எந்தக் குறைபாடும் இல்லை... நான் மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கணும்'னு தினமும் எங்கையாவது வேலை கேட்டுப் போயிட்டுதான் இருக்கான். இப்போ ஒரு ஜெனடிக் மருத்துவரைப் பார்த்து சரியான புரிதலோட சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கான்.

சிகிச்சைக்கே மாசம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல செலவாகுது. அதுனாலயே வேலைக்குப் போகணும்னு துடிக்கிறான்..." எனறு தன் மகனின் தலைகோதுகிறார் ராதா.

``என்னோட வெளித் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் தெரியாததால, இன்டர்வியூ முடிச்சபிறகு `வேலையில சேர்ந்துக்கோங்க'னு சொல்லிருவாங்க. ஆனா உண்மையைச் சொன்ன பிறகு அருவருப்பா பார்த்துட்டு உப்பு சப்பு இல்லாத காரணங்களைச் சொல்லி வெளியே அனுப்பிருவாங்க. நான் கடைசியா வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் உண்மையைச் சொல்லி வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா நிறைய பாலியல் தொல்லைகளை அனுபவிச்சுட்டேன். சத்தியமா சொல்றேன் யாராவது உடம்பைப் பத்திப் பேசினாலே குமட்டிக்கிட்டு வருது. அவ்வளவு பாலியல் தொல்லைகளை அனுபவிச்சுட்டேன்.

மக்களுக்கு இன்டர் செக்ஸ் பத்தி எந்த விழிப்புணர்வும் இல்ல. என்னோட பிரச்னையைச் சொன்னா, திருநங்கையானுதான் முதலில் கேட்பாங்க. தொண்டு நிறுவனங்களும், அரசாங்கமும் கூட எங்களை மாதிரி இருக்கவங்களோட பிரச்னையைப் புரிஞ்சுக்கலே. இன்டர் செக்ஸ்ங்கிற வார்த்தையே நிறைய பேருக்குப் புதுசா இருக்கு. திருநங்கைகளும் ஒரு காலத்தில் இந்தச் சூழலில்தான் இருந்தாங்க. ஆனா இப்போ அவங்களைப் பத்தி மக்களுக்குப் புரிய ஆரம்பிச்சிருச்சு. அதேபோல் இன்டர்செக்ஸ் பத்தியும் மக்கள் புரிஞ்சுக்க ஆரம்பிக்கணும். அதற்கு ஆரம்பமா நான் இருப்பேன். என்னால் முடிஞ்சவரை விழிப்புணர்வு கொடுத்துட்டே இருப்பேன். கடவுளின் படைப்பை அப்படியே ஏத்துக்கிட்டு மனித உணர்வுகளை நேசிப்போம்"

உற்சாகமாகச் சொல்லி விடை தருகிறார் சக்கரவர்த்தி! (விகடன்)

No comments

Powered by Blogger.