Header Ads



வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைப்பதில் காலதாமதம் ஏற்படும் - அரசாங்கம்

(ஆர்.யசி)

கொவிட் -19 தாக்கத்தை அடுத்து  117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும், எனினும் சற்று காலதாமதமாகும் என்கிறது அரசாங்கம்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பதிரன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் இன்னல்களுக்கு உட்படக்கூடிய பிரிவு தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளிவிவகாரதுறை அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினால்  மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணத்திற்கான நடைமுறைகள் வெளிநாட்டு உறவுகள்  அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

2020 ஜுன் மாதம் 16ஆம் திகதியளவில்  117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி செயலகம் மற்றும் கொவிட் செயற்பாட்டு செயலணியுடன் இணைந்து இதுவரையில் 38 நாடுகளிலிருந்து 9,580 இற்கு மேற்பட்ட இலங்கையரை இந்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் 10 நாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஜுன் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 07ஆம் திகதி வரையில் 10 விமான பயணங்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலுள்ள இன்னல்களுக்கு உள்ளாகக்கூடிய பிரிவினருக்காக உலர் உணவு பங்கீடு , அடிப்படை மருந்து , பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்காக 42.6 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை இலங்கை தூதுக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பொருட்கள் தட்டுப்பாடு நிலவுதல் மற்றும் உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்கள் நிலவும் மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு உலர் உணவு மற்றும் மருந்து வகைகள் அடங்கிய 15.5 மில்லியன் ரூபா பெறுமதியைக் கொண்ட 5,000 பொதிகளை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களின் தேவைக்காக அந்த நாடுகளில் இலங்கை குழுவினரால் தேவையான வகையில் இராஜதந்திர பிரதிநிதித்துவம் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கையர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கைத் தூதுக் குழு செயல்படாத நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை இராஜதந்திர தூதுக்குழுவினால் தேவையான சேவைகளை மேற்கொள்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோன்று இந்த உலகளாவிய தொற்றின் காரணமாக இலங்கைக்கு ஏற்படக் கூடிய பொருளாதார அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக இலங்கை இராஜதந்திர தூதுக்குழுவினரால் புதிய வர்த்தக சந்தைகளை அடையாளங் காண்பதற்கும் தற்பொழுதுள்ள வர்த்தக சந்தைகளில் நிலவும் கோரிக்கையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வெவேறு நாடுகளுக்கு போவதற்காக இலங்கையில் தமது பயண மாற்றங்களை செய்கின்றனர். குறிப்பாக கப்பல்களில் வருபவர்கள் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாறும் வேளைகளில் இலங்கை துறைமுகங்களில் தறிந்து நிக்க அனுமதி வழங்கப்பட்டது. இப்போது அவ்வாறான செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். காரணம் என்னவெனில் இவ்வாறு இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் பலர் கொரோனா நோயாளர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை இலங்கையில் தடுத்து வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையர்கள் அனைவரையும் நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் உடனடியாக எதனையும் செய்ய முடியாது. எனவே சற்று பொறுமையாக இருக்குமாறு இலங்கையர்களுக்கு அரசாங்கம் அறிவுரை வழங்குகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.