June 03, 2020

உண்மைச் சம்பவத்தை முன்னிறுத்தி - கொரோனா விடுமுறையும், ‘ஸ்மார்ட் போன்’ பாவனையும்

(பஸீனா ஸவாஹிர் - உளவளத்துணையாளர்)

ஸல்மாவிற்கு வயது 13. எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் இவள் வீட்டில் மூத்த பெண்பிள்ளை. மார்க்க விடயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒழுக்கமான முறையில் வளர்க்கப்பட்டுள்ளதால் தாயின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இவள், ஊர் உறங்கும் வேளையான நடுநிசி ஒரு மணியளவில் தனது தாயின் Smart Phone  இல் ஓர் ஆணுடன் chat பண்ணுவதை எதேர்ச்சையாக தாய் அவதானித்ததைத் தொடர்ந்து உளவளத்துணையை நாடி வருகிறாள்.

“கொரோனா அச்சத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீள ஆரம்பம் எப்போது என்று தெரியாமல் அனைத்துப் பாடசாலைகளிலும் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி வினாக்களைத் தயாரித்து அவற்றை பெற்றோரின் Smart Phone  இற்கு அனுப்பி வைக்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இது ஒரு சிறந்த வழிமுறைதான். Home Work  செய்வதற்காக பிள்ளையின் கையில் எனது Mobile ஐ ஒப்படைத்தேன். நம்பிக்கையான பிள்ளை மோசடி செய்ய மாட்டாள் என நம்பிக்கையுடன் இருந்தேன். தூங்கச் செல்லும் போதும் என்னிடமே Mobile ஐ வைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் எதேச்சையாக கண் விழித்த போது பக்கத்திலிருந்த Mobile ஐக் காணவில்லை. மெதுவாக மகளின் அறைக்கு வந்து பார்த்த போது Whatsapp இல் chat பண்ணுவதைப் பார்த்தேன். சக நண்பியினுடனாக இருக்கும் என எண்ணினேன். எதுவாக இருப்பினும் இந்த நடு இரவில் chat பண்ண அவசியமில்லை என்று கூறிவிட்டு Mobile ஐ எடுத்தேன். Chatting Page  உள்ளே சென்று பார்த்தேன். ஆபாசமான Photos களும், அருவருப்பான Massage களும் காணப்பட்டன. அதிர்ந்து போனேன். அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்று கூறி அழுதவண்ணம் தாய் புலம்பி நின்றாள்.

தாயின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, மார்க்க விழுமியங்களையும் தெரிந்திருந்த ஸல்மா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள்…?!

கட்டிளமைப் பருவம் என்பது காந்தமும், இரும்பும் எவ்வளவு விரைவில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொள்ளுமோ அவ்வாறே ஆண், பெண் கவர்ச்சி காணப்படும். இயல்பில் சுரக்கின்ற ஹோமோன்களே இதற்குக் காரணமாகும்.  எதிர்ப்பாலுடன் ஒரு சிறிய பார்வை, ஒரு புன்னகை, சிறியதொரு குறுந்தகவல் மூலம் ஆரம்பிக்கின்ற காதல், விபச்சாரம் வரை இழுத்து செல்லப்படுகின்றது.

பருவமடைந்த ஆண்கள், பெண்கள் இருபாலாரிடமும் இயல்பாக இந்த உணர்வு காணப்படுகின்ற போது Smart Phone  ஐக் கையில் கொடுப்பது என்பது  அந்நியன் ஒருவனை தனது பிள்ளையுடன் தங்க வைப்பது போன்றதாகும்.

“வலா தக்ரபுஸ் ஸினா” “விபச்சாரத்தை நெருங்காதீர்கள்” என்ற திருமறையின் கட்டளைக்கிணங்க, விபச்சாரத்திலிருந்தும் உங்களைத் தூரமாக்கிக் கொள்ளுங்கள்@ பாலின்பத்துக்கு வழிகோலும் அனைத்துப் பாதைகளையும் தடுத்து நடைமுறையில் அதனை அணுக முடியாதவாறு உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் என்பதே இதன் பொருளாகும். அப்பாவத்தைப் புரிவது மிகவும் சிரமமானதாக ஆக்கப்பட வேண்டும்.

மிகப் பெரும் பாவங்களில் ஒன்றாகக் கருதப்படும் விபச்சாரத்தைத் தவிர்ப்பதற்கான தவிர்ப்பு முறைகளை பெற்றோர் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிக்காவிட்டால் கட்டிளமைப் பருவத்தில் பிள்ளைகள் கைதவறி விடுவார்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டுள்ள பாலுணர்வு அடங்கியே இருக்கின்றது. அதனை வலிந்;து தூண்டிவிடக்கூடிய விடயங்களையும், அதற்கான சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நாமே ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. தூண்டுதல் மலிவாகும் போது அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாகும். ஆழமான கிணற்றில் வீழ்ந்த பின் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு தடுமாறுவதனை விட அப்பிரச்சினையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான நுட்ப முறைகளைக் கையாள்வதே புத்திசாலித்தனமான செயலாகும். ஒருவரின் உணர்வுகள், ஆசைகள் கிளறிவிடப்பட்டு தூண்டப்பட்ட பின் அவரது பாதுகாப்பு பொறிமுறைகள் நலிவடைந்து விடுகின்றன. இதனால், தூண்டுதல்களுக்கு இலகுவாகத் துலங்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

ஆண், பெண் தனிமையில் சந்தித்தல், பாலுணர்வுகளைத் தூண்டும் இசைகளைக் கேட்டல், ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களைப் பார்த்தல், மோசமான நண்பர்களுடன் நட்புறவு வைத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்கள் தூண்டுதல்களை ஏற்படுத்தும் காரணிகளாக அமைகின்றன.

சல்மா கட்டிளமைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கின்றாள். பாடசாலையில் வழங்கப்பட்டHome Work  ஐ செய்வதற்காக கைக்குள் வந்த Smart Phone  தற்போது ஒரு வாலிபனுடன் மோசமான பாலியல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு காரணமாக அமைந்ததனை நம்மால் மறுக்க முடியாது.

“Home Work இனை செய்வதற்காகவே Smart Phone  இனைக் கொடுத்தேன். இதற்கு முன் அவ்வாறு கொடுத்ததில்லை” என்பது தாயின் கூற்று. எனினும், வீட்டில் டயி வழி இருப்பின் அதில் பதிவேற்றிக் கொடுக்கலாம். அதுவும் பகிரங்கமான ஓரிடத்தில், மூத்தவர்களின் கண்காணிப்பின் கீழ் அமைய வேண்டும். அவ்வாறு அமையாத போது அதுவும் வேறு பல பிரச்சினைகளுக்குக் காரணமாய் அமையலாம். அல்லாவிட்டால் ஒரு தாளில் வினாக்களை எழுதிக் கொடுக்கலாம். பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இவ்வாறு மேற்கொள்வது உண்மையில் சற்று சிரமமாக இருந்தாலும் பிள்ளையின் உள, ஆன்மீக ஆரோக்கியத்திற்குக் காரணமாய் அமைவது போன்று தவறான பாலியல் உறவுகளிலிருந்தும் பாதுகாக்கின்றது.

கட்டிளமைப்பருவத்தினரைக் கையாள்வது இலகுவான விடயமல்ல. திட்டமிட்டு விதைத்து அறுவடை செய்ய வேண்டும். பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே பெற்றோர் கட்டிளமைப் பருவத்தின் இயல்பு, அவர்களைக் கையாளும் விதம் என்பவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். இதனை ஒரு செயற்திட்டமாகவே பார்க்க வேண்டும். நன்னடத்தை உள்ள ஒழுக்கமான தலைவர்கள் ஒரு குடும்பத்தில் இருந்தே உருவாகின்றார்கள். இவர்கள் வழிதவறினால் ஒரு பரம்பரையே பாதிக்கப்படுகின்றது.

சிறந்த ஒழுக்கமுள்ள பிள்ளைகளை வளர்த்தெடுப்பதனால் பெற்றோர் உயர்ந்த அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். மட்டுமன்றி பெற்றோரது சுவன பாதையும் இலகுபடுத்தப்படுகின்றது.

எமது பிள்ளைகள் ஒழுக்கமான பிள்ளைகள் என்ற நம்பிக்கையில் பெற்றோர் பிள்ளைகளைக் கண்காணிக்காமல் இருந்து விடுவது பகற்கனவு காண்பது போன்றது. பாலியல் உணர்வு இயற்கையானதும், இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டதுமான ஓர் அருளாகும். இதனை சரியான நேரத்தில் ஹலாலான முறையில் அனுபவிக்கும் வரையுள்ள காலப்பகுதியில் தகாத பாலியல் தொடர்புகளில் சிக்கி வாழ்வு சீரழிந்து போகாமல் இருப்பதற்காக பெற்றோர் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். – Vidivelli

0 கருத்துரைகள்:

Post a comment