Header Ads



"ஒஸ்மானியா" எனும் நாமத்தை சூட்டிய, கலாநிதி பதியுதீன் மஹ்மூத்

- பரீட் இக்பால் -

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தீர்க்கதரிசனமும் செயல்திறனும் மிக்க சுயலாபம் கருதாத முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் ஆவார். எஸ்.எல்.எம். நெய்னா முஹம்மத் -பாத்துமா நாச்சியார் தம்பதிகளின் புதல்வராக பதியுதீன்  மஹ்மூத்  வெலிகமயில் 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை மாத்தறையில் உள்ள புனித ஜோசப் கல்லூரியிலும் அடுத்து கொழும்பு வெஸ்லி கல்லூரி,மருதானை ஸாஹிராக் கல்லூரி என்பவற்றிலும் பயின்று உயர் கல்வியை இந்திய அலிகார் சர்வகலாசாலையில் பயின்று முதுமானிப் பட்டத்தையும் பெற்றார். பன்மொழிகளிலும் அவர் பாண்டித்தியம் பெற்றார்.

பதியுதீன் மஹ்மூத் அலிகார் சர்வகலாசாலையில் கல்வி கற்ற காலத்தில் இந்தியாவின் இரு பெரும் சுதந்திர இயக்க தலைவர்களான ஜவஹர்லால் நேரு, முஹம்மத் அலி ஜின்னா ஆகியோர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு பதியுதீன் மஹ்மூதீன் செயற்திறனும் பேச்சுவன்மையும் அவரை தமது சகமாணவர்களிடையே புகழும் மதிப்பும் உடையவராக ஆக்கியது. எனவே,லக்னோ நகரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் தலைவராக அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அதன் ஆரம்ப கூட்டத்தின் போது மேடையில் பதியுதீன் மஹ்மூத் தலைமை வகிக்க அவரது இரு புறங்களிலும் இரு பெரும் தேசிய தலைவர்களான ஜவஹர்லால் நேருவும் முஹம்மதுஅலி ஜின்னாவும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் ஆப்கானிஸ்தான் மன்னரின் விருந்தினராக அந்நாட்டிற்கு விஜயம் செய்தார். அத்தோடு மலேஷியா,பர்மா (மியன்மார்) ஆகிய நாடுகளிலும் சொற்பொழிவாற்றுவதற்காக அழைக்கப்பட்டார். அவரது பேச்சினால் ஆத்திரமுற்ற அக்கால பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை மலேஷியாவில் இருந்தும் பர்மாவில் இருந்தும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை திரும்பியதும் அவர் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் அதிபராக பதவியேற்றார். நான்கு வகுப்பறைகளைக் கொண்ட ஒரு கொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டிருந்த அப்பாடசாலை ஓர் உன்னத கலைக்கூடமாக மாற்றியமைத்த பெருமை பதியுதீன் மஹ்மூத் அவர்களையே சாரும். தனது இறுதி மூச்சு வரை கம்பளை ஸாஹிரா கல்லூரியின் மீது அளவிலா பற்றும் கரிசனையும் உடையவராகவே அவர் விளங்கினார்.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவுடன் தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பானது பிற்காலத்தில் மிக நெருங்கிய நட்பாக மாறியது. பண்டாரநாயக்காவின் அரசியல் வாழ்க்கையில் மிக விசுவாசத்திற்குரிய தோழராகவும் ஆலோசகராகவும் பிரச்சினை தீர்ப்பவராகவும் ஆற்றல் மிக்க பிரச்சாரகராகவும் பதியுதீன் மஹ்மூத் விளங்கினார்.

1956 இல் பண்டாரநாயக்க ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் அமோக வெற்றி பெறுவதற்கு பின்னனியில் நின்று உழைத்தவர்களுள் பதியுதீன் மஹ்மூத் மிகவும் பிரதானமானவர். எனவேதான் பண்டாரநாயக்க தனது அமைச்சரவையை தெரிவு செய்த போது பதியுதீன் மஹ்மூதை மாத்திரமே தன் அருகில் ஆலோசகராக இருத்திக்கொண்டார். அச்சந்தர்ப்பத்தில் உருவான அரசாங்கத்தில் கல்வி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு பண்டாரநாயக்க பலமுறை வற்புறுத்தியும் கூட பதியுதீன் மஹ்மூத் எவ்வித பதவிகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் ஐ.நா சபைக்கான இலங்கை தூதுக் குழுவின் உறுப்பினராக பணியாற்ற ஒப்புக்கொண்டார். 1959இல் பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டதன் பின்னர் இலங்கை திரும்பிய பதியுதீன் மஹ்மூத். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் அரசியல் பிரவேசத்திற்கு மிக முக்கிய காரணகர்த்தாகவும் உறுதுணையாகவும் இருந்தார். 1960 இல் ஸ்ரீமாவோ அம்மையார் அமைத்த அரசாங்கத்தில் கல்வி, ஒலிபரப்புத் துறை அமைச்சராக பதியுதீன் மஹ்மூத் நியமிக்கப்பட்டார். சுகாதார,வீடமைப்பு அமைச்சராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் ஆரம்ப காலங்களில் யாழ் மஸ்ற உத்தீன் பாடசாலை (புதுப்பள்ளி) முஹம்மதியா கலவன் பாடசாலை (அல்லாபிச்சை பள்ளி) வண்மேற்கு முஸ்லிம் பாடசாலை (மண்ப உல் உலூம் மத்ரஸா) ஆகிய மூன்று கனிஷ்ட பாடசாலைகளிலும் கல்வி கற்ற மாணவர்கள் மேற்படிப்பை தொடர்வதற்காக யாழ்.வைத்தீஸ்வரா,யாழ் மத்திய கல்லூரி,யாழ் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைக்கு சென்றனர்.

எனினும் அக்காலத்தில் வசதி குறைந்தவர்கள் கனிஷ்ட பாடசாலைகளிலிருந்துமேற்படிப்பை தொடர முடியாமல் படிப்பை இடைநடுவில் விட்டு விட்டு வேறு தொழில்களை நாடுபவர்களாக இருந்தனர். இது கவலைக்குரிய விடயமாக இருந்தது.

இக்கால கட்டத்தில் இலங்கையின் தேசிய வீரரும் சிறந்த கல்விமானும் கொழும்பு ஸாஹிராகல்லூரி அதிபருமாகியஅல்ஹாஜ் ரி.பி.ஜாயா அவர்களின் தலைமையிலான குழு 1938 இலும் 1942 இலும் விஜயம் செய்தது. யாழ் முஸ்லிம் மாணவர்கள்; கல்வியில் தலை சிறந்து விளங்கவேண்டுமென்பதே குறிக்கோளாக இருந்தது. அதனால் யாழ்ப்பாணத்திலும் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கிளை   ஒன்று நிறுவப்படவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினர். எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேலோங்கி காணப்பட வேண்டும் என்றும் அதற்கான அடித்தளத்தை காலதாமதமின்றி ஆரம்பிக்குமாறு எடுத்து கூறிவிட்டு சென்றார்.

யாழ் முஸ்லிம் முக்கியஸ்தர்களின் முயற்சியால் கல்லூரியின் கட்டிடம் மேலெழத் தொடங்கியது. ஸாஹிரா கல்லூரி என்ற பெயரிலேயே இருந்தது. 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே 6ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களை ஸாஹிரா கல்லூரியில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

அக்கட்டத்தில் அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்கு கல்வி அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆரம்பத்தில் கல்லூரியின் கட்டிட வேலைகளுக்கு ஆலோசனைகளையும் உற்சாக மொழிகளையும் வழங்கிய அவருக்கு கல்வி அமைச்சர் பதவி கிடைத்ததும் கல்லூரி மீதிருந்த, அக்கறை பன்மடங்காக பெருகியது.

கல்லூரியை அபிவிருத்தி செய்வதில் பெரும்பங்கு வகித்தார். அவர் கல்லூரிக்கு செய்த உதவிகளை மறைக்கவோ மறக்கவோ முடியாது.

1963 ஆம் ஆண்டு  கட்டிடம் கல்லூரியாக மாறியது. 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நன்னாள்.அந்த நாள் அன்று தான் டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் ஸாஹிரா கல்லூரி என்று நாமம் கொண்டிருந்த இக்கல்லூரியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். யாழ்ப்பாண மேயர் திரு.அல்பிரட் தங்கராஜா  துரையப்பாவும் கலந்து சிறப்பித்தார்.

ஸாஹிரா கல்லூரி என்ற பெயரளவில் தீர்மானிக்கப்பட்டிருந்தும் அத்திறப்புவிழாவின் போது டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் இஸ்லாத்தின் மூன்றாம் கலீபாவாகிய உஸ்மான் (ரழி) அவர்களை நினைவுபடுத்துமாக ஒஸ்மானியா கல்லூரி என்ற நாமத்தை சூட்டினார். அன்றிலிருந்து இன்று வரை  ஒஸ்மானியா கல்லூரி என்ற பெயருடனேயே தலை நிமிர்ந்து நிற்கிறது.
இவரது காலத்தில் இலங்கையின் கல்வித்துறையில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டன. தனியார் பாடசாலைகள் பல அரசுடையமையாக்கப்பட்டன. இவற்றில் முக்கியமானது இவரது காலத்திலேதான் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பகுதியொன்று உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை பிரதானமாகக் கொண்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1970இல் பதவிக்கு வந்த போது கலாநிதி பதீயுதீன் மஹ்மூத் மீண்டும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1977 வரை நீடித்த பதவிக்காலத்தில் இலங்கையின் கல்வி,உயர் கல்வித் துறைகளில் பாரியமாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. கட்டுபெத்த தொழில்நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகமாகதரமுயர்த்தப்படல், யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி பல்கலைக்கழகமாகமாற்றப்படல், 1972 இல் கல்விச் சீர்த்திருத்தம் என்பன அவற்றில் சிலவாகும்.

அதுவரை காலமும் நியமன எம்.பி. ஆக நாடாளுமன்றத்தில் இடம்பிடித்து வந்த பதியுதீன் மஹ்மூத், 1977 இல் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட போதுதோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னர் தீவீரஅரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்ந்த போதிலும் இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

இறுதிக் காலத்தில் நோயினால் அவதிப்பட்ட போதிலும், இறக்கும் வரை பதியுதீன் மஹ்மூத் 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி   வஇன்னா  இலைஹ ராஜிஊன். மர்ஹூம் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு  உயர்ந்த அந்தஸ்துள்ள ஜென்னத்துல பிர்தெளஸ் கிடைக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

2 comments:

  1. When Osmania College was inaugurated by Badiudin Mahmoud in 1963, Alfred Duraiappa was not the Mayor of Jaffna. He was the MP for Jaffna.

    ReplyDelete
  2. காலத்தின் தேவைக்கான சிறந்த நினைவுபடுத்தல்.இன்றைய முஸ்லிம் தலைமைகள் பின்பற்ற வேண்டிய மறைந்தும் வாழும் மாமனிதர்!

    ReplyDelete

Powered by Blogger.