June 10, 2020

தொழுகைக்கும், பிரார்த்தனைகளுக்கும் நல்ல நேரம் தேடுகிறார்களா..?

சட்டத்தையும், ஒழுங்கையும் மதித்து, அதனை முறையாகக் கடைபிடித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு, வேண்டுமென்றே அநீதி இழைப்பவர்களுக்கு இறை தண்டனை நிச்சயமாகக் கிடைக்குமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கூறியுள்ளார்.

நாட்டில் எல்லாவற்றையும் திறந்துவிட்டு, பள்ளிகளையும் கோவில்களையும் மூடிவைத்துக் கொண்டு காலத்தைக் கடத்துவதன் நோக்கம் தான் என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் இன்றைய தினம் -10- விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

"சமூக இடைவெளியோ முகக் கவசமோ இல்லாமல், பொசன் போயா தினத்தில் அதிமுக்கிய பிரபலங்கள் விகாரைகளுக்குச் செல்ல முடியுமென்றால், பாமர மக்கள் தத்தமது வணக்கஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஏன் தடை போடுகின்றீர்கள்?

பள்ளிவாசல்களை எதிர்வரும் 15ஆம் திகதிதான் திறக்க முடியுமென அறிவிப்பவர்கள், தொழுகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் நல்ல நேரமா தேடுகிறார்கள்?

டாக்டர் அனில் ஜயசிங்க வெளியிட்டுள்ள சுற்றுநிரூபம், சுப்பர் மார்க்கெட்டுக்களையும் வைன் ஸ்டோர்ஸ்களையும் கட்டுப்படுத்தாதா? அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வை தாழ்ப்பாள் இடவா இந்த சுற்றுநிரூபம் வெளிவந்தது?

ஆட்சிக்கு வரும் முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் எதனை நிறைவேற்றியுள்ளீர்கள்? தேவையான உரம் கையிருப்பில் உள்ளதாக மயன் கம்மன்பில கூறுகின்ற அதேவேளை, விவசாயிகளின் பயிர்கள் உரமின்றி சாகுகின்றன.

அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனரே. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் பத்திரிகையாளார் மாநாட்டில், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு தட்டுத்தடுமாறி பேசுகின்றார்.

கொவிட் - 19 சம்பந்தமான கேள்விகளுக்கு "கொவிட் ராணி பவித்ரா" வரவேண்டும் என்கின்றார். வீதி அபிவிருத்தி தொடர்பில் கேட்டால், ஜொன்ஸ்டனை அடுத்தமுறை அழைப்போம் என்கின்றார்.

மாடு பற்றிக் கேட்டால், மாட்டுத்தனமாக பதில் கூறுகின்றார். இதுதான் இந்த அரசின் இப்போதைய நிலை. உலகத்திலே தற்போது மூன்று அரசியல் சக்திகளின் விளையாட்டைப் பார்க்கின்றோம்.

ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். மற்றவர் இந்தியப் பிரதமர் மோடி. மூன்றாமவர் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

இவர்கள் மூவருமே சிறுபான்மை மக்களை அழிக்கத் துடித்துக்கொண்டிருப்பவர்கள். இந்த இலட்சணத்தில் மோடி, இலங்கைக்கு கொவிட் - 19 கட்டுப்பாட்டு பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளதுதான் வேடிக்கை.

800 மில்லியன் செலவில் கல்கிஸ்ஸையில் கொட்டிய மணல் கடலால் விழுங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக இப்போது குப்பைகளையும் கூளங்களையும் கடல் நமக்குத் தருகின்றது.

இதனை தட்டிக்கேட்டால், மக்களே கடலில் குப்பை கொட்டுவதாகக் கூறுகின்றனர். கழிவகற்றல் திட்டம் முறையாக இல்லாததனாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment