June 14, 2020

மங்கள சமரவீர வழங்கியுள்ள, சிறப்புப் பேட்டி

பாராளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ள நான் எந்தவொரு முறையிலும் சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கூடாரமாக மாறப்போகும் பாராளுமன்றத்திற்கு வருகை தரவிரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான ஆரம்ப கொள்கைகளை அடியொற்ற வகையில் தாராளவாத ஜனநாயகவாதிகளுடன் இணைந்து எனது அடுத்த கட்ட அரசியல் பயணம் ஆரம்பமாகவுள்ளதாக முன்னாள் நிதி மற்றும் வெகுஜன தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு, 
கேள்வி:- 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் திடீரென அமைதியாக இருந்தீர்களே?
பதில்:- ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தன் பின்னர் ஒருமாதம் வரையில் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றிருந்த நான் ஜனவரியில் தான் நாடு திரும்பியிருந்தேன். அச்சமயத்தில் ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்தே விடைபெற வேண்டும் என்ற எண்ணப்பாடே என்னுள் இருந்தது. இருப்பினும் தவிர்க்க முடியாத சூழலொன்று நாட்டில்; ஏற்பட்டிருந்தமையால் அந்த முடிவினை எடுப்பதை சற்றே தள்ளிவைக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டேன். 
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உங்களுடைய ஓய்வு பெறும் தீர்மானத்தில் தாக்கம் செலுத்தியிருந்ததா?
பதில்:- ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தாபய குறுகிய காலத்தில் நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் அவ்வாறானதொரு மனநிலைக்கு தள்ளிவிட்டது. அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் பொருளாhதார நெருக்கடிகள், இனவாதச் செயற்பாடுகள், இராணுவமயமாக்கல் என்று முழு நாடுமே மோசமான நிலைக்கு செல்லப்போகின்றது என்பதையும் உணர்ந்திருந்தேன்.
கேள்வி:- இந்த விடயங்களுக்கு தீர்வு அரசியலிலிருந்து விடைபெறுவதுதானா?
பதில்:- அவ்வாறு ஒதுங்குவது பொருத்தமில்லை என்பதையும் நான் உணர்ந்தேன். மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல்களைச் செய்தேன். நாடு மோசமான நிலைக்குச் செல்வதை தடுப்பதற்கு வலிமையான எதிர்க்கட்சியொன்று அவசியம் என்பதை உணர்ந்தவனாக வலிமையான எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்தேன். 
பிளவுகளுக்கு உள்ளாகியிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை ஐக்கி;யப்படுத்தி வலிமையான எதிர்க் கட்சியாக்குவதற்கான சூத்திரமொன்றை உருவாக்கினேன். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க தொடர்வதெனவும், ஐ.தே.க தலைமையிலான புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பினை சஜித் பிரேமதாஸ வகிக்கும் அதேநேரம், பிரதமர் வேட்பாளராகவும் அவரே இருப்பார் என்பதே அச்சூத்திரமாகும். 
அதுபற்றிய கலந்துரையாடல்களில் வெற்றியும் கண்டேன். அனைத்து தரப்பினரது ஆதரவும் கிட்டியது. அச்சூத்திரத்தினை தீர்மானமாக ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது, தேர்தல் சின்னம் தொடர்பான விடயத்தில் பிளவுகள் ஏற்பட்டு விட்டது. 
ஈற்றில், நான் எதிர்பார்க்காத வகையில், ஐ.தே.கவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இரண்டு தரப்புக்களாகிவிட்டன.
கேள்வி:- பிளவுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் நீங்கள் ஒன்றிணைப்பதற்கு முயற்சிகளை எடுக்கவில்லையா?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனித்தரப்பாக போட்டியிடுவதென்ற எந்தவொரு திட்டமும் என்னிடத்தில் இருக்கவில்லை. இருப்பினும் முரண்பாடுகள் அதிகரித்திருந்த தருணத்தில் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். துரதிஸ்டவசமாக அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. ஈற்றில் இரண்டு தரப்பினரும் தனித்தனியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 
கேள்வி:- நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியை ஏன் தெரிவு செய்தீர்கள்? 
பதில்:- ஐ.தே.கவினை மறுசீரமைப்புச் செய்து வலுப்படுத்துவதே எனது திட்டமாக இருந்தது. ஆனால் பிளவுகள் ஏற்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியை பலமான எதிரணியாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கையுடனும், மொட்டுக் கட்சியினரின் மோசமான கொள்கைகளுக்கு மாற்றீடாக நாட்டை வளப்படுத்தும்  கொள்கைகளைக் கட்டியெழுப்ப முடியும் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டதன் காரணத்தினாலும் தான் அத்தரப்பினருடன் இணைந்தேன். 
கேள்வி:- இலக்கொன்றுடன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்க ஆரம்பித்த நீங்கள் திடீரென பாராளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளமைக்கு காரணம் என்ன? 
பதில்:- மிருசுவிலில் சிறுகுழந்தை உள்ளடங்கலாக படுகொலைசெய்த குற்றவாளிக்கு ஜனாதிபதி கோத்தாபய பொதுமன்னிப்பளித்தார். கொரோனா காலத்தில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் உடல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிகளுக்கு மாறாக தகனம் செய்யப்பட்டன. இதன்போது இறுக்கமான எதிர்ப்புக்களையும்  நிலைப்பாடுகளையும் ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழ் மக்கள் சார்ந்தோ, முஸ்லிம் மக்கள் சார்ந்தோ எவ்விதமான பிரதிபலிப்புக்களும் வெளியாகவில்லை
சந்திரிகா காலத்தில், மஹிந்த காலத்தில் தேரவாத பௌத்தத்தினை பின்பற்றும் ஒருவனாக நான், புத்தசாசனம், சங்கரத்தின தேரர்கள் தொடர்பில் மிகவும் கவனமாக வெளிப்படுத்திவரும் கருத்துக்களை தற்போது கண்டுபிடித்து அவற்றால் சிங்கள, பௌத்த வாக்குகள் கிடைக்காது போகப்போவதாக கூறியும் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியினுள் சிலர் செயற்பட ஆரம்பித்தனர். 
இந்த விடயங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மௌனமாகவே இருந்தது. ஐக்கிய மக்கள் சக்தி எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் செய்வதற்கு முன்வரவில்லை. இவ்விதமான செயற்பாடுகள் எனக்கு மிகப்பெரும் விரக்தியை அளித்தது. அத்துடன் தாராளவாத ஜனநாயக சிந்தனையுடைய என்போன்றவர்களுக்கு இந்த அணியில் மேலும் பயணிக்க முடியாது என்பது புலனானது. 
அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் செல்வதால் எவ்விதமான பயனுமில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன். அதன் காரணத்தினாலேயே விலகியிருக்க தீர்மானித்தேன். இந்த தீர்மானத்தினை நான் மிக நிதானமாகவே எடுத்தேன். ஒருவாரமாகச் சிந்தித்து நன்மை தீமைகளை ஆராய்ந்தே எடுத்துள்ளேன்.
கேள்வி:- அரசியலில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்வு எப்படியிருக்கப்போகின்றது? 
பதில்:- தாராளவாத, ஜனநாயக நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்னையொத்த இட்சக்கணக்கான மக்கள் உள்ளார்கள். நான் அவர்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன். அவர்களுக்காக செயற்படவுள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இன்னமும் இருக்கும் நான் அக்கட்சியின் உண்மையான ஆரம்பகால கொள்கைகளை முன்னிலைப்படுத்தியும் பின்பற்றியும் செயற்படவுள்ளேன்.
கேள்வி:- ஐக்கியதேசியக் கட்சியின் ஆரம்பகால கொள்கைகளைப் பின்பற்றவுள்ளேன் என்கின்றீர்களே அதுபற்றி சிறுதெளிபடுத்தலைச் செய்யமுடியுமா?
பதில்:- ஆம், டி.எஸ்.சேனாநாயக்க, சேர்.ஜோன்கொத்தலாவல போன்றவர்கள் இனபேதமற்றதும், திறந்த பொருளாதார கொள்கையுடனும், சர்வதேசரீதியான பரந்துபட்ட பார்வைகளையும் இலக்குகளையும் உடையதாகவே ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள். 
1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றியினை அடுத்து ஐ.தே.கவின் உண்மையான நிலைப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது என்பதற்கு அப்பால் அதனை பகிரங்கமாக அறிவிப்பதற்கே அன்றைய தலைவர்கள் அஞ்சம்கொண்டனர். அந்த அச்சத்தினை கட்சிக்குள்ளும் உருவாக்கியிருந்தனர். அதன் பின்னர் ஜேர்.ஆர்.ஜெயவர்த்தன பஞ்சசீலக்கொள்கைகளை முன்னிலைப்படுத்தி ஐ.தே.கவின் கொள்கைகளை முன்னெடுக்க விளைந்தபோதும் அதில் அவராலும் வெற்றியடைந்திருக்க முடிவில்லை. 
அதன் பின்னர் ஐ.தே.க.வினுள் அக்கொள்கைகள் காணாமல்போய்விட்டன. தற்போது எந்தவிமான இலக்குகளும், கொள்கைகளும் இல்லாத தரப்புக்களுக்குள் ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாஸவும் சிறைப்பட்டுள்ளனர். அவர்களால் வெளியில் வரமுடியாதுள்ள சூழலில் ஐ.தே.கவின் உண்மையான கொள்கைகளை அடியொற்றி நான் பொதுமக்களுடன் இணைந்த பயணத்தினை முன்னெடுக்க தயாராகின்றேன். 
கேள்வி:- சிறுபான்மையினர் சார்ந்த விடயங்கள் மற்றும் யதார்த்த பூர்வமாகச் செயற்பட்டால் சிங்கள, பௌத்த வாக்குகள் பறிபோய்விடும் என்ற அச்சம் சஜித் பிரேமதாஸவிடத்தில் காணப்படுகின்றதா?
பதில்:- ஆம், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவ்வாறான மனநிலையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். சஜித் பிரேமதாஸ எனும் தனிநபர், நேர்மையானவர், செயற்பாட்டு திறன் கொண்டவர், இளம் தலைவர். ஆனால் அவரைச் சூழ்ந்துள்ள அடிப்படை, கடும்போக்குவாதிகளுக்காக மௌனமாக இருப்பதோ, யதார்த்த பூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாது கைவிட்டு நிற்பது பொருத்தமானதல்ல. அவ்வாறான அரசியலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 
கேள்வி:- நீங்கள் தீர்மானத்தினை அறிவிப்பதற்கு  முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் போக்குகள் தொடர்பில் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடியிருக்கலாமல்லவா?
பதில்:- கடந்த 3ஆம் திகதி சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டரா, ஏரான் விக்கிரமரட்ண ஆகியோருடன் நீண்டகலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன். அதன்போது அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொண்டேன். 
கேள்வி:- ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தீர்களா?
புதில்:- நான் ஐ.தே.கவின் உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு எனது நிலைப்பாட்டினை தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அந்த அடிப்படையில் நான் அவரை சந்தித்தேன். எனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினேன். மாறாக அவரிடத்தில் ஆலோசனை பெறுவதற்காக செல்லவில்லை. 

அவரைச் சந்தித்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் அரசியலிலிருந்து ஒதுங்குகின்றபோதும்,ஐ.தே.கவின் உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுமக்களுடன் இணைந்து செயற்படவுள்ளேன். இருப்பினும் ஐ.தே.கவில் எவ்விதமான பதவிகளையும் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளவதற்குத் தயாரில்லை உள்ளிட்ட விடயங்களை நேரடியாகவே கூறிவிட்டேன். 
கேள்வி:- எதிர்காலத்தில் ரணில் அல்லது சஜித் அணிகளுடன் இணைந்த அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்களா?
பதில்:- என்னைப்பொறுத்தவரையில் இரண்டு அணிகளும் மீளவும் ஒன்றிணைந்து பலமான ஐக்கிய தேசியக் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது.
கேள்வி:- ரணில், சஜித் தரப்புக்களை ஒன்றிணைப்பதில் உங்களின் வகிபாகம் அல்லது தலையீடுகளுக்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?
பதில்:- ஒன்றிணைவேண்டும் என்பதற்காக முழுமனதோடு பிரார்த்திப்பேன்
கேள்வி:- மக்களுக்காக இருதரப்பினையும் ஒற்றுமையாக்கும் செயற்பாடு கூட உங்களுடைய வகைப்பொறுப்புக்களில் ஒன்றாக உணரவில்லையா? 
பதில்:- இருதரப்பிலும் ரணில், சஜித் ஆகியோர் மீண்டும் ஒன்றிணையக் கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். ஐ.தே.க சிறுசிறு துண்டுகளாக உடைந்தாலும் பரவாயில்லை. எஞ்சுகின்ற ஐ.தே.கவின் சிறுகுழுவினருக்காகவாவது தான் தலைவராக இருந்துவிட வேண்டும் என்ற முட்டாள் தனமான சிந்தனை கொண்டவர்களும் உள்ளார்கள். அதையொத்த சிந்தனையில் ஐக்கிய மக்கள் சக்தியிலும் உள்ளார்கள். இவ்வாறான மோசமான நிலையே காணப்படுகின்றது.
கேள்வி:- ஒக்டோபர் 5ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கிடைப்பட்ட காலத்தில் உங்களுடைய செயற்பாடுகள் எவ்வாறிருக்கப்போகின்றன?
பதில்:- நான் எந்தவொரு தரப்புடனும் தொடர்புபட்டுச் செயற்படப்பேவதில்லை. மௌனமாகவே இருக்கப்போகின்றேன். என்மீது அன்புகொண்டுள்ள மாத்தறை மாவட்ட மக்களிடம் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அன்புரிமையுடன் கேட்டுள்கொண்டுள்ளேன். நான் பாராளுமன்றத்திற்கு செல்ல விரும்பவில்லை. ஆகவே அவர்கள் பிரயாசைப்பட்டு வாக்களிப்பதால் பயணில்லை என்பதையும் கூறிவிட்டேன். 
கேள்வி:- உங்களுடைய தீர்மானமானது ஐக்கிய மக்கள் சக்திக்கு சிங்கள, பௌத்த வாக்குகள் அதிகமாக கிடைப்பதை நோக்கமாக கொண்டது அல்லது தோல்வியை முற்கூட்டியே அறிந்ததன் பால் எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் மேலெழுந்துள்ளதே?
பதில்:- எனது முப்பது வருடகால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையில் வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்திருக்கின்றேன். தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட அவ்வாறான அனுபவங்கள் பல எனக்குள்ளது. தோல்விகளால் துவண்டுபோகும் நபர் நானல்ல. 
2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 18ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தேன். இதுவே இன்றுவரையில் வேட்பாளர் ஒருவர் இம்மாவட்டத்தில் பெற்ற அதிகூடிய வாக்குகளாக உள்ளது. இம்முறை நான் போட்டியிட்டிருந்தால் நிச்சயமாக அந்தப்பதிவை முறியடித்திருப்பேன். இப்போதைய சூழலில் அதுவல்ல பிரச்சினை. பாராளுமன்றத்திற்குச் சென்று அடுத்த ஐந்துவருடங்கள் இருப்பதால் எவ்விதமான நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.
நீங்கள் கூறியதைப்போன்று, சிங்கள,பௌத்தவாக்குகளை பெறுவதற்காக ஒதுங்குகின்றார் என்ற கூற்றுக்கள் எனது செவிகளிலும் வீழ்ந்தன. அது உண்மைக்கு புறம்பானதாகும். நான் எந்தவொரு விடயத்திலும் எதிர்ப்புக்களுக்காக எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்து செயற்படாத ஒரு நபர். அரசியலுக்காக மாறுபட்ட கருத்துக்களை, நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் ஒருவர் அல்ல என்பதையும் இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். 
கேள்வி:- தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்;கள் ஏற்படுமாயின் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கூடாராமாக பாராளுமன்றம் மாறும் நிலை உருவெடுத்துள்ள நிலையில் அங்கு செல்வதால் எவ்விதமான நன்மைகளும் இல்லை. அதனை நன்குணர்ந்தே இறுக்கமான முடிவை எடுத்துள்ளேன். எந்த வகையான சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் பாராளுமன்றத்திற்குச் செல்லப்போவதே இல்லை.
கேள்வி:- தற்போதைய அரசியல் சூழுலில் உங்களுடைய சித்தாந்தத்தின் பிரகாரம் புதிய அரசியல் கலாசாரமிக்க தரப்பொன்றைக் கட்டியெழுப்புவது நடைமுறைச்சாத்தியமாகுமா?
பதில்:- கோத்தாபயவுக்கு வாக்களித்த நடுத்தர மக்கள் அவர் எந்த நோக்கத்தில செல்கின்றார் என்பதை நன்குணர்ந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். கடும்போக்கு இனவாதிகளின் ஆர்ப்பரிப்பும் தலைதூக்கிவிட்டது. நாடு இராணுவத்தின் பிடிக்குள் சென்றுகொண்டிருக்கின்றது. வீழ்ந்திருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது. இவ்வாறான போக்கானது நாம் படிப்படியாக முன்னகர்த்திக்கொண்டிருந்த நாட்டை மீண்டும் பாதாளத்திற்குள் தள்ளவிட்டுள்ளது. 

தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்டஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன. இவ்விதமான நிலைமைகளுக்கு எதிராக நிச்சயமாக வலுவான மக்கள் எழுச்சிபெறும். அந்த சக்திக்கு மேலும் வலுச்சேர்க்க முற்போக்கான, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து தரப்புக்களையும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைக்க வேண்டும். அதுவே இந்த நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தவதற்கு அடிப்படையாக அமையும். பொறுத்திருந்து பாருங்கள். இது எதிர்காலத்தில் நிகழும்.

3 கருத்துரைகள்:

Gentleman...

Good public will lose his service But
Racists and Selfish politicians will oppose him..
Those who support blindly racists politicians will realize their mistake only when country's economy get destroyed (but no by that time).

Hope GOD will help good people of this country and serve our country from getting into worst economical and racial crisis.

In Sri Lankan politics only a few number of politicians are genuine like Hon. Mangala Samaraweera, he should not let his place vacant to replaced with a poised disaster individual...

எதிர்கால இலங்கையை ஆளப்போகும் 'மங்களகரமான சமரச வீரர்' இவர்!

Post a comment