Header Ads



மைத்திரிபாலவுக்கோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கோ விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் - பிரசன்ன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கோ அவருக்கு நெருக்கமானவர்களுக்கோ விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான நபராக கருதப்படும் பிரசன்ன ரணதுங்க மினுவங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

“நான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரன். எனினும் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை யானையின் வாலில் தொங்கவிட்ட பின்னர், நாங்கள் அந்த கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான கொள்கைகளை கொண்ட புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தோம். எமது தலைவர் மகிந்த ராஜபக்ச.

நாங்கள் புதிய கட்சியை ஆரம்பிக்கும் போது எம்மை வீதி வீதியாக நடக்கவிடப் போவதாக மைத்திரி எம்மை அச்சுறுத்தினார். எம்மை கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கினார்.

எம்மை பழிவாங்க பொய்யான வழக்குகளில் சிக்க வைத்தார். தற்போதும் நாங்கள் வழக்களுக்கு சென்று வருகின்றோம். இவ்வாறு செய்து எம்மை தடுத்து நிறுத்த பார்த்தார். எனினும் மக்கள் எங்களுடன் இருந்தனர்.

நாட்டுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்படுத்திய அழிவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்தது உண்மை.

எனினும் பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை இணைத்து கொண்டதை நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கின்றேன். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததும் தவறு.

மைத்திரி எப்போதும் காட்டிக்கொடுப்புகளையே செய்தார். எந்த நேரத்தில் எம்மை காட்டிக்கொடுப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தை பேசவில்லை. மறைமுகமாக சஜித்திற்கு உதவினார்.

இதனால், அவரது அணியினர் வெற்றி பெற்றால் எமக்கு அழுத்தங்களை கொடுப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

இதன் காரணமாக மைத்திரியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் வாக்களிக்க வேண்டாம்” எனக் கூறினேன் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.