Header Ads



சிறுவர் ஆயுததாரிகள் குறித்தும், கருணாவிடம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் - மிச்சேல் பச்லெட் வலியுறுத்தல்

(நா.தனுஜா)

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணா அம்மானிடம் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியிருக்கிறார்.

அண்மையில் நாவிதன்வெளியில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரே இரவில் 2000 - 3000 இராணுவத்தினரைக் கொன்றதாகவும் எனவே தான் கொரோனா வைரஸை விடவும் பயங்கரமானவன் என்றும் கருத்தொன்றை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட கருத்துக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டதுடன், இதுகுறித்து அவர் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை அவரிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான அவரால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமையை நாம் அவதானிக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் சிறுவர்களை போராளிகளாக இணைத்துக்கொண்டமை தொடர்பிலும் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கையிலுள்ள அனைவருக்கும் பொறுப்புக்கூறல் என்பது பொதுவானதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும் என்றும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதேவேளை, நாவிதன்வெளியில் பேசிய கருணா அம்மான், 'இம்முறையும் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வருமாறும், கஷ்டப்பட தேவையில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கூறினார். எனினும் இருதடவைகள் அத்தகைய வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி என்றும், இம்முறை தேர்தலில் போட்டியிட்டு எனது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வருகின்றேன் என்றும் நான் அவரிடம் கூறினேன்' என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.