June 28, 2020

ஜனாதிபதி கோட்டாபயவை ஆரோக்கியமான தலைவராக பார்க்கிறேன் - முஸ்லிம் தலைமைகள் தம்மை சுயவிசாரணை செய்ய வேண்டும்

முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்ற ஒற்றுமை, ஒருமைப்பாடு முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமும் கட்சிகளிடமும் காணப்படவில்லை இது இன்று நேற்றல்ல நீண்ட நெடுங்காலமாகவே கறை படிந்து போன வரலாறாகவே நோக்க வேண்டியுள்ளதாக தெரிவித்திருக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ் அனீஸ் முஸ்லிம் தலைமைகளும் கட்சிகளும் இப்போதாவது தம்மைப் பற்றிய சுய விசாரணையை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் எனவும் குறிப்பிட்டார்.  

தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அவர் மனம் திறந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் அவரது நேர்காணலின் விபரம் வருமாறு...... 

நாடு எதிர்நோக்கும் சவால்களை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ? 

30 வருடகால யுத்தத்தின் போது இனப் பிரச்சினையைத்தான் நாடு எதிர்கொண்டிருந்தது. 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் மக்கள் சமாதானத்தையும் நிம்மதியையும் எதிர்பார்த்தனர். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கூட மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்து கொள்ள முடியாது போயுள்ளது.  

இன்றைய சூழ்நிலையில் பொதுத் தேர்தலை மையப்படுத்தி இனவாதமும் மதவாதமும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமூகங்களை முன்னிறுத்தி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பெரும்பான்மை சமூகங்கள் மத்தியில் இந்த இனவாதமும் மதவாதமும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.  

முஸ்லிம் அரசியல் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒருமைப்பாடு மிக முக்கியமானது என்பதை காலம் காலமாக சொல்லி வந்த போதும் முஸ்லிம் தலைமைகள் பிளவுபட்டுப் போனதையே காணக்கூடியதாக உள்ளது இன்று அதனை காலம் கடந்த ஞானமாகவே பார்க்க முடிகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கிடையிலான பிளவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது கடந்த காலத்தில் இருந்த இணைந்து வாழும் நிலை இன்று அழிந்து போய் உள்ளது தனித்துவமான அரசியல் செய்ய முற்பட்டு முஸ்லிம்களை எதிரிகளாக நோக்குமளவுக்கு பெரும்பான்மைச் சமூகத்தை தள்ளியுள்ளது. 

எமக்கிடையே ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப வேண்டும் ஒற்றுமைப் படாமல் எம்மால் எதனையும் சாதிக்க முடியாது முதலில் நாம் கைக்கொள்ள வேண்டிய பணி பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் அவர்கள் எம்மை எதிரிகளாக பார்ப்பது பாரதூரமான விடயமாகும். புரிந்துணர்வு இல்லாமையே அதற்கு பிரதான காரணியாகும். 

இந்த மன நிலையை மாற்றுவதற்கு வழியாக எதனைக் கூறுவீர்கள்? 

முஸ்லிம் அரசியல் தலைமைகள் முடிவெடுப்பதை விட புத்திஜீவிகள் கல்விமான்கள் உலமாக்கள் ஆகியோரின் ஆலோசனைகளை கேட்க முன்வரவேண்டும். இவ்வளவு காலமும் இருந்த தவறான புரிதல்கள் மாற்றப்படவேண்டும். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட பெரும் குறை நீக்கப்பட வேண்டும் . 

 பெரும்பான்மை சிங்கள மக்கள் மனங்களில் காணப்படும் எம்மைப் பற்றிய தவறான புரிதல்களை அகற்ற வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துவது அவசரமானதும் அவசியமானதுமாகும் அதற்கான சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது. 

முஸ்லிம்களிடையே காணப்படும் அரசியல் நிலைப்பாடு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?  

எமது கட்சிகளிலும் சமூகத்திலும் ஒருமைப்பாடு கிடையாது. இதனால் இன்றைய சவால்களை எதிர்கொள்ள முடியாது. இது அனைத்து சமூகங்களிலும் காணப்படும் பொதுவான விடயமாக இருக்கின்றது. ஒவ்வொரு கட்சியும் தனக்கு எத்தனை பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பற்றியே சிந்திக்கிறது. அனைத்தும் அரசியலை அடிப்படையாகக் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகின்றன. இன்றைய தேவை தேசிய மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் எண்ணிக்கை பற்றியே யோசிக்கின்றனர். 

இது முஸ்லிம்களிடமும் காணப்படுகிறது. பேரம் பேசும் நிலை ஏற்படுவதற்கு பெரும்பான்மை கட்சிகளே காரணமாகும். பெரும்பான்மை கட்சிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன. இதனால்தான் சிறுபான்மைக் கட்சிகள் பேரம் பேசும் அரசியலை பின்பற்றுகின்றன. கடந்த காலங்களில் சிறுபான்மை உரிமை மறுக்கப்பட அதன் காரணமாகவே இந்த பேரம் பேசும் அரசியல் மேலோங்கியது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆரோக்கியமான தலைவராகவே என்னால் பார்க்கமுடிகிறது சிறுபான்மைச் சமூகங்களிடத்தில் காணப்படும் மனக்குறைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில்  அவர் உள்ளார் எனப் புரிந்து கொள்ள முடிகிறது ஜனாதிபதி மீதான நம்பிக்கை வலுப் பெற வேண்டும். 30 வருட யுத்தத்தை முடித்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களை இன மத பேதமின்றிப் பார்க்கும் ஒருவராக அவரை காணமுடிகிறது. தேசிய பாதுகாப்பும் தேசிய ஒருமைப்பாடும் இல்லாத நிலையில் இன நல்லிணக்கம் சாத்தியப்பட முடியாது 

முஸ்லிம் கட்சிகளுக்கும் சமுதாயத்திற்கும் இறுதியாக என்ன ஆலோசனைகள் வழங்குவீர்கள்? 

சிறுபான்மைச் சமூகம் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள், தலைவர்கள் முதலில் தம்மை சுய விமர்சனம் செய்து கொள்ள முன்வர வேண்டும். எங்கு குறைகள் உள்ளன என ஆராய்ந்து அவற்றை திருத்திக் கொள்வதற்கான வழிகளை நாட வேண்டும் இந்த விமர்சனம் அல்லது சுய விசாரணை என்பது அனைத்துத் தரப்புகளுக்கும் மிக முக்கியமானதொன்றாகும்.  

இனவாதமும் மதவாதமும் மேலோங்குவதற்கு நாமும் காரணமாக உள்ளோம். என்பது கசப்பாக இருந்தபோதும் அது உண்மை என்பதையும் மறக்கக்கூடாது. எம்மை நாம் சுய விசாரணைக்கு உட்படுத்தி ஆரோக்கியமான அரசியலை நோக்கி பயணிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.   

எம்.ஏ.எம் நிலாம்

3 கருத்துரைகள்:

இனவாதம்,மதவாதம் என்பன இந்த நாட்டில் முஸ்லீம்களை நோக்கி 2009 யுத்த்திற்கு பிற்பாடு பேரினவாதிகளால் துரிதமாக விதைக்கப்பட்டது என்பது உண்மையாகும்.ஆனால் அது வளர்ந்து விருட்சமாகி வியாபிப்பதற்கு வழிசமைத்தது எமது மதவாதிகளின் சுய நல போக்குகள் மற்றும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும் தேர்தல் பிரச்சாரங்களும்தான் என்பதில் உண்மை இல்லாமலில்லை.எம்மை நோக்கி விதைக்கப்பட்ட இன,மத வாதத்தை முளையிலே கிள்ளி எறிகின்ற சுலபமான வழிமுறைகள் எமது மார்க்கத்திலே இருந்தும் அவைகளை பிரயோகிக்க வழிகாட்டாதது எமது புத்தி ஜீவிகளினதும் மார்க்க அறிஞர்களினதும் பலவீனமான பக்கங்களாகும்.அதை அவர்களுக்கிடையில் இருக்கின்ற ஒற்றுமையின்மை என்று கூட சொல்லலாம்.இனியும் தாமதியாது எங்கள் பற்றிய பிழையான எண்ணங்களையும் சந்தேகங்களையும் மாற்றுமத சகோதரர்கள் மத்தியிலிருந்து களைவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்வதற்கு எமது அனைத்து தலைமைகளும் ஒற்றுமைப் பட்டு வழிகாட்ட வேண்டுகிறோம்.

This person advises us to jump into the fire to escape from frying pan

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இப்போதைய ஜனாதிபதியின் இதயத்தின்  ஆரோக்கியத்தை, எவருக்கும் எவ்விதப் பிரயோஜனமும் இல்லாத 'ஜனாஸா எரிப்பு' ஒன்றின் மூலமாக அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர்.

Post a comment