Header Ads



நாமல் வழங்கிய, சிறப்பு நேர்காணல்

‘ஐக்கிய தேசியக் கட்சியினர் எப்போதும் தேர்தலுக்குப் பயந்தவர்கள்’ என்று கூறுகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.

கேள்வி: நீங்கள் தற்போது அரசியலில் முதிர்ச்சி வாய்ந்தவராகக் காணப்படுகிறீர்கள். அதன் இரகசியத்தை முதலில் கூறுவீர்களா?

பதில்: வயது செல்லச் செல்ல பக்குவம் வந்து விடும். எனது பாராளுமன்ற வாழ்க்கை 10 வருட பூர்த்தியை அடைந்துள்ளது. நான் 23 வயதிலேயே பாராளுமன்றத்துக்கு வந்தேன். இப்பாராளுமன்றத்தில் மூன்றாவது சிறிய வயதினன் நானாவேன். பக்குவம் ஏற்படுவது அனுபவத்தினாலாகும். அது சாதாரண விடயமாகும்.

கேள்வி: அரசியல் வாழ்க்கையில் நீங்கள் முதிர்ச்சியடைந்தவரா?

பதில்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 50 வருட கால அரசியல் அனுபவம் மூலமே முடிவுகளை எடுக்கிறார். அதே போன்று சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளார்கள். நாமும் தினமும் அரசியலை கற்கின்றோம். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நவீன தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்கிறார். அரசியலில் அந்த அனுபவங்களை செயலில்  கொண்டு வருவது எவ்வாறு என்பது பற்றி அவதானம் செலுத்துகிறார். நாட்டின் தேவை, உலகம் செல்லும் பாதை என்பவை பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக்குவத்துடன் அரசியல் அனுபவம் சொல்வதை காலத்துக்குக் காலம் நாம் எமது வாழ்க்கைக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நாம் திறந்த மனதுடன் பெற வேண்டும்.

கேள்வி: உங்களைச் சுற்றி இருப்பவர்கள் இளைஞர்கள். உங்கள் மீது இளைஞர், யுவதிகளின் ஈர்ப்பு அதிகமாகவுள்ளது. அவர்கள் உங்களுடன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் விரும்புகிறார்கள். இளைஞர்களை கவர விசேட காரணங்கள் உள்ளனவா?

பதில்: அவ்வாறான விசேட காரணங்கள் எதுவுமில்லை. இளைஞர்களின் எண்ணங்கள் தொடர்பாக நல்ல புரிந்துணர்வு இருந்தால் அவர்களின் பிரச்சினைகளை அறிந்திருந்தால் அவர்கள் எம்முடன் கலந்துரையாடுவார்கள். அரசியலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இளைஞர்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது. எமது வாழ்க்கையில் வெற்றிகளும், அனுபவங்களும் உள்ளன. மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வனாக இருப்பதும் அக்கவர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.

கேள்வி: நீல செயலணியொன்றை அமைத்தீர்கள் அல்லவா? அதற்கு என்ன நடந்தது?

பதில்: நீல செயலணியென்பது அவ்வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பாகும். நாம் கட்சியிலிருந்து வெளியேறியவுடன், கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பெயரை  மாற்ற முடிவு செய்தார். அப்பெயரை நாம்  வைக்கும் போது அதனை கட்சியின் பொதுச் செயலாளரான அவரேதான் அங்கீகரித்தார். பின்னர் கட்சியின் தலைவரானதும் அப்பெயரை மாற்றி விட்டார். கட்சியை மீளக் கட்டியெழுப்பும் போது, நான் எனது கடமையைச் செய்தேன்.

கேள்வி: அன்று நீல செயலணியினர் இளைஞர், யுவதிகளுக்கு செய்த சேவைகள் பற்றிக் கூற முடியுமா?

பதில்: நீல செயலணி என்பது அரசியல் சக்தியாகும். அந்த அரசியல் சக்தியால்தான் நாம் அன்று தேர்தல்களை வழி நடத்தினோம். அதன் மூலம் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அமைப்பிற்கான அடிப்படையை அமைத்தோம். அது மிகவும் வெற்றியடைந்தது. அன்று எதிரணியினர் அதிகமாக சேறு பூசியது நீல செயலணிக்குத்தான். 

கேள்வி: அனைவரினதும் வாழ்விலும் வெற்றியுண்டு. நீங்கள் வாழ்வில் பெற்ற வெற்றிகள் எவை?

பதில்: வாழ்க்கையை வெற்றி கொண்ட சந்தர்ப்பங்கள் பல உள்ளன. ஒன்று எதிர்க்கட்சியில் இருந்த ஐந்து வருடங்கள். அக்காலத்தில்தான் நான் வாழ்க்கையில அதிக அனுபவங்களைப் பெற்றேன். அந்த ஐந்து வருட காலத்தில் எனது தாயும் தந்தையும் வழங்க முடியாத அனுபவங்கள் பலவற்றை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எனக்குப் பெற்றுக் கொடுத்தார்கள். என்னை சிறையிலடைத்தார்கள். நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கின்றேன். நான் பெற்ற அனுபவத்தை எச்சந்தர்ப்பத்திலும் இனிப் பெற முடியாது. அது சிரமமான காலமாக இருந்தாலும், நான் அன்று நல்ல அனுபவ பாடத்தைக் கற்றேன். அதே போல திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் இன்னுமொரு வெற்றியாகும். எனக்கும் அந்த வெற்றியை அனுபவிக்க முடிந்தது.

கேள்வி: முதலில் உங்களை நிதி துஷ்பிரயோக சட்டத்தின் கீழே கைது செய்தார்கள். அவ்வழக்கு பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: அவ்வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறு சிறையில் அடைத்தார்கள் என்பது ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலி நாடாக்கள் மூலம் தெளிவாக விளங்கும். நான் உள்ளிட்ட அணியினரை எவ்வாறு சிறையிலடைத்தார்கள் என FCඓඪ් யின் முன்னாள் தலைவர் ரவியின் ஊடக  வெளியீட்டிலும் தெளிவாகவுள்ளது. அந்த அரசியல் பழிவாங்கலுக்காக நிதி துஷ்பிரயோகச் சட்டத்தை பாவித்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அரசியல் பழிவாங்கலுக்காகவே அனவைரையும் கைது செய்தார்கள்.

கேள்வி: ஹம்பாந்தோட்டையில் பொலிஸ் வீதித் தடையொன்றை அகற்றிய குற்றத்துக்காகவும் உங்களை கைது செய்தார்கள் அல்லவா?

பதில்: அவ்வாறான சம்பவங்கள் ஒன்றிரண்டல்ல... பல இடம்பெற்றன. ஹம்பாந்தோட்டையில் மாத்திரமல்ல, கொழும்பிலும் இடம்பெற்றது. விசேடமாக அரச வளங்களை நாம் பாதுகாக்க முயன்ற வேளையில், நாம் அவற்றை அழிக்க வந்தோம் என எம்மைக் கைது செய்தார்கள்.

கேள்வி: இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல் என நீங்கள் எண்ணுகின்றீர்களா?

பதில்: நூற்றுக்கு ஆயிரம் வீதம் அரசியல் பழிவாங்கல் என நான் கூறுகிறேன். நான் அனுபவித்த அரசியல் பழிவாங்கல்கள் குறித்தே நான் குறிப்பிடுகிறேன். இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக உள்ளார்கள். அரச அதிகாரிகள், அரசியலாளர்கள் போன்று பொலிஸ் அதிகாரிகளும் உள்ளார்கள். சில பொலிஸ் அதிகாரிகளிடம் எம்மை கைது செய்யுமாறு அவர்கள் தெரிவித்ததும் உண்டு. அன்று அரசாங்கத்தில் உள்ள அனைவரும் இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது உங்களுக்கு நன்மையா?

பதில்: அவர்கள் இணைந்திருந்தாலும், பிரிந்திருந்தாலும் நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் அன்று தொடக்கம் தேர்தல் நடத்தியது அரசியல் கொள்கைகளுக்கு அமையவேயாகும். நாம் ஒருபோதும் வேட்பாளர்களின் தனிப்பட்ட பின்னணியை மையப்படுத்தி தேர்தலை வழிநடத்தியதில்லை. ஹம்பாந்தோட்டையில் இருமுறை சஜித் பிரேமதாசவை விட அதிக வாக்குகள் இந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டதனாலேயே கிடைத்தன. நான் ஹம்பாந்தோட்டை அரசியல் மேடையில் சஜித் மீது சேறு பூசும் விதத்தில் பேசியதில்லை. இனியும் அவ்வாறு செய்ய மாட்டேன். எனக்கு கொள்கையொன்றுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் சஜித் பிரேமதாச போட்டியிட்ட  போது அனைவரும் அது பெரும் சவாலாக அமையும் என எண்ணினார்கள். ஆனால் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவையும் மஹிந்த ராஜபக்ஷவையும் நம்பினார்கள்.

கேள்வி: நீங்கள் ஹம்பாந்தோட்டையில் போட்டியிடுகின்றீர்கள். ஆனால் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையைக் கைவிட்டு கொழும்பில் போட்டியிடுகின்றார். அது உங்களை எவ்வாறு பாதிக்கும்?

பதில்: நான் உண்மையில் அது பற்றி கவலையடைகிறேன். அவர் அந்த முடிவை தவறான நேரத்திலேயே எடுத்தார். அவர் கொழும்பில் போட்டியிட வேண்டும் என்பதை பல வருடங்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும். அவர் தவறான மாவட்டத்திலேயே போட்டியிட்டார். அவரது கொள்கைகள் எமது மாவட்டத்துக்குப் பொருந்தாது. எமது மக்கள் அவரின் கொள்கைகளை நிராகரித்தார்கள். நான் இன்றும் அவர் அங்கிருந்து சென்றது குறித்து கவலையடைகின்றேன்.

கேள்வி: சிறிய கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் அமைக்க முடியுமென எண்ணுகிறீர்களா?

பதில்: நாம் பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் பெறுவோம் என நம்புகிறேன். நாம் ரிஷாட் பதியுதீனுடன் அரசாங்கம்அமைக்க மாட்டோமென தெளிவாகக் கூறியுள்ளோம். நாம் கூட்டமைப்பாகப் பெரும்பான்மையான தொகுதிகளை வெற்றி கொள்வோம்.

கேள்வி: நீங்கள் அது குறித்து தெளிவான நம்பிக்கயுடன் உள்ளீர்களா?

பதில்: நாம் தெளிவான நம்பிக்கையுடன் உள்ளோம். நாம் கலவரப்படத் தேவையில்லை. மக்கள் குறித்து எமக்கு நம்பிக்கையுண்டு. இலங்கை பூராவும் நாம் கிராமங்களுக்குச் சென்ற போது நாம் உணர்ந்தது எமக்கு வேறு கடசிகளின் ஆதரவு தேவையில்லை என்பதாகும். எமது கட்சி எல்லா மக்கள் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே வேட்பாளர்களை நியமித்துள்ளது. நாம் அவ்வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: அந்த வேட்பாளர்கள் அறிவாளிகள், ஊழல் மோசடி அற்றவர்கள் என உங்களுக்கு நம்பிக்கையுண்டா?

பதில்: நாம் நல்ல திறமையான குழுவினரையே நியமித்துள்ளோம். அந்த அணியில் அனைத்து இன மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளார்கள். நாம் நீதிமன்றத்தில் குற்றவாளிகளென தீர்ப்பு அளிக்கப்பட்டவர்கள் எவருக்கும் வேட்பாளர் நியமனம் வழங்கவில்லை.

கேள்வி: இம்முறை தேர்தல் சட்டம் சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே தயாரிக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள், பதாதைகள் இல்லை. கூட்டங்களுக்கும் மக்கள் மட்டுப்படுத்தப்படுவார்கள். இந்நிலைமையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: நான் தனிப்பட்ட முறையில் இம்முறையை விரும்புகிறேன். நாம் கிராமத்துக்குச் செல்ல 100 பேரை அழைக்கத் தேவையில்லை. வேட்பாளர்களால் கிராமத்துக்குள் செல்ல இயல வேண்டும். இது நல்ல முறை. எதிர்வரும் தேர்தல்களிலும் இம்முறையைப் பின்பற்றுவது நல்லது.

கேள்வி: கொரோனா தொற்றை வெற்றி கொள்ள தற்போதைய அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவில்லையென மக்கள் கூறுகின்றார்கள். இது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: கடந்த அரசாங்கம் இருந்திருந்தால் பலவீனமான நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தினால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும்.   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் புரிந்துணர்வு மற்றும் செயல்திறன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: தேர்தலில் கொரோனா தொற்று உங்களுக்கு ஆசீர்வாதமானதா?

பதில்: எந்தவொரு தொற்றும் ஆசீர்வாதமாகாது. தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுக்கும் விதம் தொடர்பாக மக்களின் பாராட்டைப் பெற வேண்டும். ஈஸ்டர் தாக்குதலின் போது ஐக்கிய தேசியக் கட்சி செய்த தவறுகள் பலவுள்ளன. முதலாவது விடயம் அதனைத் தடுத்திருக்கலாம். இரண்டாவது... சம்பவத்தின் பின்னர் அதற்கு முகம்கொடுத்த விதம். இரண்டுமே தவறாகும். அரசாங்கம் கொரோனா வருவதற்கு முன்னர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.கொரோனா தொற்றாளர்களைப் பாதுகாக்கவும் தொற்று ஏற்படாதவர்களை தனிமைப்படுத்தவும் திட்டங்களை தயாரித்தது. நாட்டில் கொரோனா தொற்றை தடுத்தலையும், தனிமைப்படுத்தலையும் வெற்றிகரமாக மேற்கொண்டதால் எம்மால் இந்நிலைமையை அடைய முடிந்தது. ஈஸ்டர்  தாக்குதலின் போது இவ்விரண்டையும் கடந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

சதமி பிடிபன - தமிழில்: வீ.ஆர். வயலட்

No comments

Powered by Blogger.