Header Ads



பிரித்தானியாவில் வசிக்கும், இலங்கை மருத்துவரின் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட 26 வயது மருத்துவர் அந்த கொடிய வைரஸ் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர் ஷனத் ராமசந்திரன் (26) பிரித்தானியாவின் Crewe நகரில் உள்ள Leighton மருத்துவமனையில் பணிபுரியும் நிலையில் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சையளித்த நிலையிலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதன்பின்னர் ஷனத்தை கொரோனா வைரஸ் தாக்கியது தெரியவந்தது.

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ள ஷனத் அது தொடர்பில் பேசியுள்ளார். அவர் கூறுகையில், கொரோனாவின் அபாயங்கள் குறித்து எனக்கு தெரியும்.

ஆனால் என் வயது மற்றும், எந்த உடல் உபாதைகளும் இல்லாததால் அது குறித்து நான் பெரிதும் கவலைப்படவில்லை.

பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும் ஆசியர்கள் சமுகத்தை கொரோனா தாக்கும் ஆபத்து அதிகம் என்பதை நான் உணரவில்லை.

ஏனெனில் என் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்பதால் ஆசியரான என்னை கொரோனா நேரடியாக பாதித்தது.

உடல் சோர்வு, குமட்டல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற அறிகுறி எனக்கு ஏற்பட்டது.

இதன்பின்னர் உடல் நிலை மோசமானதால் ஏப்ரல் 12 Manchester-ல் உள்ள Wythenshawe மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் நான் கொண்டு செல்லப்பட்டேன்.

அடுத்த 12 மணி நேரத்தில் நான் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டேன். இந்த செய்தி என் குடும்பத்தாருக்கு பெரும் கவலையை கொடுத்தது.

வெண்டிலேட்டரில் வைக்கப்படும் முன்னர் கடைசியாக என் குடும்பத்தாருடன் சுருக்கமாக போனில் பேசினேன்.

ஆறு நாட்கள் நான் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டதோடு மேலும் இரு நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தேன்.

பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு பிசியோதெரபி மற்றும் பேச்சு சிகிச்சையையும் மேற்கொண்டேன்.

அதன் பிறகு எனது பெற்றோரின் வீட்டில் ஆறு வாரங்கள் ஓய்வெடுத்து குணமடைந்தேன்.

மருத்துவமனையில் இருந்த போது என் எடை 15 கிலோ வரை குறைந்தது, என் குரல் நம்பமுடியாத அளவிற்கு கரகரப்பாகவும் அமைதியாகவும் இருந்தது, அவ்வப்போது திரவ உணவுகளை விழுங்க நான் சிரமப்பட்டேன்.

நான் இப்போது மிகவும் நன்றாக இருக்கிறேன், ஒரு சமயம் தூங்குவதற்கு மிகவும் போராடினேன், எனினும் இயல்பு நிலைக்கு வர ஒரு வருடம் வரை ஆகலாம் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நான் புகைபிடித்ததில்லை என்பதால் இது என்னை கடுமையாக பாதிக்கும் என்று நான் உணரவில்லை.

கொரோனா யாரையும் பாதிக்கலாம், உடலை பலவீனப்படுத்தும் இந்த நோயைப் பற்றி பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.